Share

Jun 28, 2021

தி. ஜா. வும், பிரபஞ்சனும், ராஜநாயஹமும்

புதுவையில் நான் இருந்த போது பிரபஞ்சனுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.


தி.ஜானகிராமனுக்கு நினைவு மதிப்பீட்டு மடல் நான் வெளியிட்டிருந்தேன். புதுவை பல்கலைக்கழகத்தில் இதன் காரணமாகவே 

ஒரு தி.ஜா கருத்தரங்கம் நடந்திருந்தது.

தி.ஜா எழுதி என்னிடமிருந்த அத்தனை புத்தகங்களும் கருத்தரங்க அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.


அப்போது சென்னை வாழ்வுக்கு 

ஒரு சின்ன ப்ரேக் விட்டு புதுவையில் 

பிரபஞ்சன் இருந்தார். புதுவை பல்கலைக் கழகத்தில் நாடகத்துறையில் அவருக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் வேலை போட்டுக் கொடுத்திருந்தார்.


அன்று நாடகத்துறைக்கு தலைவர் இந்திரா பார்த்தசாரதி. கே.ஏ.குணசேகரன் நாடகத்துறையில் ஆசிரியர். 


முன்னதாக 1989 துவக்கத்தில் நக்கீரனில் 

“ தி.ஜா. ஆபாச எழுத்தாளர். இன்று தமிழில் இருக்கிற ஆபாச வக்கிரத்திற்கெல்லாம் ஜானகிராமன் தான் காரணம். ஆல் இந்தியா ரேடியோவில் உயர் பதவி வகித்தவர் என்பதால் மேட்டுக்குடி மனோபாவம் கொண்டவர். அவருக்குபல பெண்களோடு படுக்க ஆசை. அதனால் தான் ‘மரப்பசு’ நாவல் எழுதினார்” – இப்படி கடுமையாக பிரபஞ்சன் 

சாடி எழுதியிருந்தார்.


நாடகத்துறைக்கு இ.பாவை நான் பார்க்க போயிருந்த போது ”இப்ப பிரபஞ்சன் வந்திருந்தார். ’ராஜநாயஹத்துக்கு என் மேல் கோபம் இருக்கும்’னு சொன்னாரே"ன்னு சொன்னார்.


அப்போது நான் பிரபஞ்சனை சந்தித்திருக்கவேயில்லை.

அடுத்த நாளே புதுவை நாடகத்துறையிலேயே பிரபஞ்சனை பார்த்தேன். 

அதன் காரணமாக ஒரு Instant,temporary friendship.


ஜானகிராமன் பற்றிய அவதூறு பற்றி பிரபஞ்சனிடம் நான் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவர் சொன்ன ஒரு விஷயம்.

 “ ராஜநாயஹம், எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படும் போது நான் எப்போதும் இரவில் தி.ஜாவின் மோகமுள் நாவலை எடுத்து படிக்க ஆரம்பிப்பேன். தூங்காமல் முழு இரவும் விடிய,விடிய முழு நாவலை படித்து முடித்து விடுவேன்.”

மேலும் சொன்னார்: என்னுடைய எழுத்தில் நிறைய ஜானகிராமனின் வார்த்தைகளை பயன்படுத்துவேன். உதாரணத்திற்கு “ எட்டுக்கண்ணும் விட்டெறியாப்ல”


எனக்குள் நான் மனதிற்குள் கேட்டுக்கொண்டேன் “இவ்வளவு சொல்லும் இவர் ஏன் ஜானகிராமனை அப்படி கடுமையாக நக்கீரனில் தாக்கி எழுதினார்?’’


பின்னாளில் ஒரு பத்து வருடத்தில்  தீராநதி முதல் இதழில்

 ” தமிழில் தி.ஜானகிராமனை மிஞ்ச ஆளேயில்லை” என்று பிரபஞ்சன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தி. ஜா. வுக்கு ஆராதனை செய்திருந்தார். பிராயச்சித்தம் தான். 


இது பற்றி சுந்தர ராமசாமியிடமும் 

நான் போனில் பேசியிருக்கிறேன்.

அவரும் பிரபஞ்சன் “ தி.ஜானகிராமனை மிஞ்ச யாருமே இல்லை” என்று சொல்வதை உறுதிப்படுத்தி சொன்னார்.


அதன் பிறகு பிரபஞ்சன் எப்போதும் ஜானகிராமனை தூக்கிப்பிடித்தார். 

 தி.ஜா பற்றிய பிரபஞ்சனின்  இந்த அபிப்ராய மாற்றம் 

எனக்கு  சந்தோஷத்தை தந்தது.


... 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.