சினிமாவில் நாம் பார்த்து வியந்த பிரபலங்கள் பலருடைய இன்னொரு பக்கத்தைப் புரட்டிக் காட்டுகிறது இந்த நூல் .
விந்தைக் கலைஞன் சந்திரபாபு நூறு ரூபாய் கடன் கேட்டு ஹிந்து ரங்கராஜனிடம் வந்து நிற்கிறார். பத்தாயிரம் முன் பணம் கொடுத்து சந்திரபாபுவை தன்னுடைய படத்திற்கு ஒப்பந்தம் செய்ய வந்திருந்த முன்னணி தயாரிப்பாளரிடம் பணம் வாங்க மறுத்த சந்திரபாபுவை பணம் தர முடியாது என ரங்கராஜன் துரத்துகிறார். வறூமையிலும் தன் தகுதிக்கான சம்பளத்தை தர மறுக்கும் தயாரிப்பளரிடமிருந்து அந்த முன் தொகையை வாங்க மறுக்கும் சந்திரபாபு மேல் மரியாதை கூடுகிறது. ஹிந்து ரங்கராஜன் சொல்லியது போலவே'' He is a man of principles" தான்.
தன் அம்மாவிற்குத் தெரிந்தே மூத்த இயக்குனர் ஒருவருக்கு கொடுப்பதற்காய் ரகசியமாய் எழுதி வைத்திருந்த நடிகையின் காதல் கடிதம் உதவி இயக்குனராக இருந்த 'ராஜநாயஹம் கையில் தவறூதலாகக் கிடைக்கிறது அவர் அந்த நடிகையிடமே திரும்பிக் கொடுக்கிற போது அதற்கு நடிகையும் அம்மாவும் பாராட்டுகிற நன்றியுண்ர்வு..
ஒரு காலத்தில் மிகவும் உச்ச நட்சத்திரமாக இருந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் சமாதியை ஒருவன் தினமும் கழிவறையாகப் பயன்படுத்துவதைக் கேள்விப்பட்டு 'R. P. ராஜநாயஹம்' அங்கு சென்று பார்க்கிறார். அவருக்கு உருவாகும் வலி மிகுந்த அனுபவத்தை விவரிக்கும் போது நம்முடைய மனமும் கலங்கிப் போகிறது.
தன்னை வைத்து"":இது நம்ம ஆளு:" படத்தை இயக்கிய எழுத்தாளர் பாலகுமாரனைப் பற்றி பாக்யராஜ் அவர்கள் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சியான தகவல்..
இப்படி நாம் அறிந்திராத சிறு சிறு தகவல்களுடன் மெல்லிய சிரிப்பையும் வலியையும் வரவழைக்கும் பல சுவாரஸ்யமான சினிமாக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.. கட்டுரைகள் என்பதைக் காட்டிலும் தகவல்கள் மற்றும் செய்திகளின் ஆவணம்.
புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த முக்கியமான இன்னொரு கட்டுரை "அசிஸ்டெண்ட் டைரக்டர் அப்துல்லா" அறிவியலும் தகவல் தொழில் நுட்பமும் கூடுதல் சலுகையாகக் கிடைக்காத அப்துல்லா போன்ற சென்ற தலைமுறை உதவி இயக்குனர்கள் ஒரு வகையில் பரிதாபத்திற்குரியவர்கள். சபிக்கப்பட்டவர்கள். அப்துல்லாவும் அப்படி ஒருவராக இருக்கிறார். இப்போதும் அப்துல்லா போன்ற உதவி இயக்குனர்களைக் காண முடிகிறது. படப்பிடிப்புத் தளத்தில் சக உதவி இயக்குனர்களால் "கிளாப் பாய்" என்று கிண்டலடிக்கப் படும் அப்துல்லா சார்மினார் சிகரெட் அட்டைகளை தூக்கியெறிய மனமில்லாமல் அவற்றில் திரைக்கதைகளை எழுதி ரப்பர் பேண்ட்டால் கட்டி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். இன்னும் இரண்டே வருஷத்தில் பீல்டின் ட்ரெண்டையே மாற்றியமைக்கப் போகும் என நம்பி அவன் வைத்திருக்கும் கதைகளூம் தலைப்புகளூம் கேலிக்குரியவையாக இருந்தாலும் மனதில் வலிக்கிறது. இன்றும் இப்படியான பலரை பார்க்கத்தான் செய்கிறோம். அப்துல்லாவை நடிகர் திரு. சிவாஜி கனேசன் என்ன சொல்லி அழைப்பார் என்பதையும் வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார். நம் எல்லோருக்கும் ஏதோவொரு வகையில் ஆதர்சமாக இருக்கிற பல பிரபலங்களினூடான திரு. 'R. P. ராஜநாயஹம் அவர்களின் அனுபவங்கள் நூறு வருட கால தமிழ் சினிமா குறித்த புரிதலை மேலும் விசாலமாக்குகிறது. மிகவும் எளிமையான , சுவாரஸ்யமான, அனுபவங்களின் பகிர்தலாக எழுத்து நடை இருப்பதால் பல இடங்களில் நம் மனதோடு நெருக்கமாக இப்புத்தகம் உரையாடுகிறது. ஒரு முழுமையான ஆவணமாகவும் வெளிப்பட்டிருக்கிறது.
வாசிக்க வேண்டிய புத்தகம்.
எழுத்து பதிப்பகம் வெளியீடு.
வாழ்த்துகள் R.p. Rajanayahem
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.