தகவல் பிழை
ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியின் முன்னாள் முதல்வர் லட்சுமி நாராயணன்.
நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் போது
என் பக்கத்து வீட்டுக்காரர்.
வைஷ்ணவத்தில்
ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அறிஞர்.
இவருடைய மனைவி (பெயர் ஜெயலட்சுமி என்று நினைவு.) குற்றாலம் பராசக்தி கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற பின் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மகளிர் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார்.
லட்சுமி நாராயணன் தென்காசியில் சொந்த வீட்டுக்காரர். அவ்வப்போது தென்காசிக்கு ஒரு சில நாட்கள் செல்ல வேண்டியிருக்கும்.
அந்த சமயங்களில் யூ.கே.ஜி படித்துக்கொண்டிருந்த
என் இளைய மகன் அஷ்வத் தான்
மாமியோடு கூட துணைக்கு படுத்துக்கொள்வான். சுட்டிப்பயல்.
ஒரு சில நாட்களில் பெட்டிலயே
ஒன் டாய்லட் போய் விடுவான்.
ஆனால் மாமி அதை பெருந்தன்மையாக எடுத்துக்கொள்வார்.
லட்சுமி நாராயணன் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் போது கூட அவரிடம் அஷ்வத்
“ நீங்க எப்ப ஊருக்கு போவீங்க?
நீங்க ஊருக்கு போங்க.
நான் மாமியோட படுத்துக்கிறேன்.
நீங்க ஊருக்கு போங்க..
நான் மாமியோட படுத்துக்கிறேன்.”
என்று அனத்துவான்.
“டேய், என்ன இங்க இருக்க விட மாட்டியா..
என்னடா என் பொண்டாட்டி கூட படுத்துக்கிறேன்னு ஏங்கிட்டவே சொல்றே… சரி… நான் போகும்போது சொல்றண்டா..”
என்று ஜாலியாக அவர் பதில் சொல்வார்.
எங்கள் வீட்டிலும் அவர் வீட்டிலும் சீனியம்மா என்ற அருந்ததியப் பெண் வேலை பார்த்தாள்.
வீட்டு வேலை பார்க்கும்போது அவளுடைய குழந்தையை தூங்க வைப்பது, கவனித்துக்கொள்வது எல்லாம்
லட்சுமி நாராயண அய்யங்கார் தான். சீனியம்மாவின் குழந்தையை சீராட்டுவார்.
என்னுடைய அமெரிக்கன் கல்லூரி தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா, மணோன்மணியம் சுந்தரனார் கல்லூரி முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் ஆகியோருடைய வகுப்புத்தோழராக லட்சுமி நாராயணன் தன்னைப் பற்றி சொல்வார்.
க.ப.அறவாணன் இவருடைய பெயரை
தூய தமிழில் மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவாராம். இவர் மறுத்து விட்டாராம்.
அப்போது பாப்பையா தன் பெயரை ‘வளவன்’ என்று தூய தமிழில் மாற்றிக்கொண்டிருந்தாராம்.
லட்சுமி நாராயணன் என்னிடம் பேசும்போது அடிக்கடி ஒரு விஷயம் குறிப்பிட்டதுண்டு.
‘ஜெமினி கணேசன் மனைவியும் லா.ச.ராமாமிருதம் மனைவியும் கஸின்ஸ்.'
ஜெமினி பற்றி லா.ச.ரா ‘ நான் கேரக்டர் இல்லாத மனிதனை மதிப்பதில்லை ’ என்று சொல்வார்.
இதனை என் பதிவுகளில் லட்சுமி நாராயணன் சொன்னதாகவே நான் எழுதியிருந்தேன்.
இப்போது ஜெமினி மனைவி பாப்ஜியும் லா.ச.ரா மனைவியும் உறவினர்கள் அல்ல என்று
எனக்கு உறுதியாக தெரிய வந்தது.
உடனே அதை என் பதிவில் இருந்து நீக்கி விட்டேன்.
என் பதிவுகளில் தகவல் பிழை இருப்பது உறுதியாக தெரிந்தால்
நான் எப்போதும் அதை திருத்திக்கொள்வேன்.
முன்பு எஸ்.எஸ்.ஆரின் நெருங்கிய உறவினன் ஒருவன் 2002ல் என்னிடம் அவருக்கு 80 வயது என்று சொன்னான்.
என்னால் நம்ப முடியவே இல்லை.
ஆனால் அவன் எஸ்.எஸ்.ஆர் வயது எண்பது
தான் என அடித்து சொன்னான்.
2008ல், 2013ல் என் பதிவுகளில் எழுதியிருந்தேன். ஆனால் பின்னர் அவன் சொன்னது உண்மையல்ல என்பது உறுதியாக தெரிய வந்தது.
உடனே அதனை என் பதிவுகளிலிருந்து நீக்கியிருக்கிறேன்.
எஸ்.எஸ்.ஆர் இறந்த போது நான் தான் ’இந்தியா டுடே’யில் இரங்கல் எழுதியிருந்தேன்.
அதற்கு முன் ஜெமினி மறைந்த போது ’காலச்சுவடு’ அஞ்சலி நான் எழுதியது தான்.
அது எப்படி லட்சுமி நாராயணன் என்னிடம் இப்படி இல்லாத ஒரு விஷயத்தை பேசியிருக்க முடியும். அப்படியென்றால் லட்சுமி நாராயணன்
என்னிடம் பொய் சொல்லியிருக்கிறார்
என்று தான்
முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.
தென்காசியில் லா.ச.ரா வங்கி ஒன்றில் பணி புரிந்த போது தான் லட்சுமி நாராயணன்
அடிக்கடி சந்தித்திருக்கிறார்.
இன்னொன்றும் தோன்றுகிறது.
ஒரு வேளை லட்சுமி நாராயணன் என்னிடம் பொய் சொல்லவில்லை. ராமாமிருதம் சொன்னதைத் தான் சொன்னார் என்றால் லா.ச.ரா
ஏன் அப்படி அவரிடம் பொய் சொல்ல வேண்டும். குழப்பமாயிருக்கிறது. இருவரும் இப்போது உயிருடன் இல்லை.
ஜெமினி கணேசனும் தான் இல்லை. அவருடைய முதல் மனைவி பாப்ஜியும் தான்.
இதையொட்டி ஒரு மூத்த கவிஞர் ஒருவர் 1970களையொட்டிய ஒரு முக்கிய தகவல் ஒன்றை என்னிடம் சொன்னார். 'ஓஹோஹோ, ஓஹோன்னானாம்' என்று புதிர் விலகி நான் புரிந்து கொண்டேன்.
லட்சுமி நாராயணன் சொன்ன மற்றொரு விஷயம் பற்றி என் “ உண்டிங்கு ஜாதி எனில்” கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
என்னிடம் பேசும்போது, நம்மாழ்வார் இல்லத்துப்பிள்ளை. அவருடைய தாயாருடைய ஊர் திருவெண்பரிசாரம். தகப்பனாருக்கு ஆழ்வார் திருநகரி என்றவர், தன்னுடைய ஆய்வுப்படி பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் பெற்றோர் இல்லத்துப் பிள்ளைமார்தான் என்று உறுதியாகச் சொன்னார்.
ஆனால் அதனை ஒரு எள்ளலோடு வேடிக்கையாக தாமரை இலை தண்ணீராக அந்த விஷயத்தில் ஒட்டாமல் எழுதியிருந்தேன்.
ஏனென்றால் நம்மாழ்வார் காலத்தில் அவர் ஜாதி பற்றி இப்படி உறுதிப்படுத்துவதெல்லாம் அபத்தம்.
எங்கள் சொந்த ஊர் செய்துங்க நல்லூருக்கு அருகில் ஆழ்வார்திருநகரி. அப்படியானால் என் தாத்தா செய்துங்க நல்லூர் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளையின் முன்னோராக நம்மாழ்வார் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதே. ஆண்டாள் மீது எனக்கு ஏற்பட்டுள்ள ப்ரீதி கூட இந்த வைஷ்ணவப் பாரம்பரிய உணர்வினால் தானோ? என்றெல்லாம் புல்லரித்து, செடியரித்து, மரமரித்து……
……………
மீள் பதிவு
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.