ராஜநாயஹம் பற்றி தமிழ்ச் சமூகத்துக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். நான் அவரைப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். வீழ்ந்தாலும் லியர் மன்னன் லியர் மன்னனே என்ற என்னுடைய ஒரு கட்டுரை போதும், அவருடைய பெருமையைச் சொல்ல.
அவர் மாதிரி ஆட்கள் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்க வேண்டியவர்கள்.
எனக்கு ஷேக்ஸ்பியரில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவருக்குத்தான் போன் போட்டுக் கேட்பேன். நம்ப முடியாத அளவுக்கு ஞாபக சக்தியும் ஞானமும் கொண்டவர்.
லௌகீகம் என்றால் என்னவென்றே தெரியாது எனக்கு என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் ராஜநாயஹத்தைப் பார்த்தால் நானெல்லாம் லௌகீகத்தில் ஜாம்பவான் என்றே சொல்லிக் கொள்ளலாம். லௌகீகத்தில் ஒரு மண்ணும் தெரியாது.
பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர். வருகிறவன் போகிறவனுக்கெல்லாம் பணத்தை வாரி இறைத்து விட்டு இப்போது அந்தக் கால பாரதியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இரண்டு பையன்களுக்கும் திருமணம் செய்து விட்டார் என்பதுதான் அவரது லௌகீக சாதனை. திருப்பூரில் அவர் வசித்த போது அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சென்னையிலிருந்து திருப்பூர் போய் பார்த்தேன்.
ராஜநாயஹம் ஒரு நடமாடும் நூலகம். அவரிடம் உள்ள தகவல்கள் அனைத்தும் புத்தகமாகத் தொகுக்கப்பட வேண்டும். எழுதுங்கள் எழுதுங்கள் என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் நச்சரித்துக் கொண்டிருக்கும் நண்பன் நான் என்பதால் இதையெல்லாம் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்று நம்புகிறேன்.
ராஜநாயஹம் தமிழின் சொத்து.
மேலும் ஒரு விபரம், தி.ஜானகிராமனை நான் ஒரு refined பாலகுமாரன் என்று முட்டாள்தனமாகத் திட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில் பொறுமையாக ’உங்கள் வாழ்நாளில் ஒருநாள் தி.ஜா.வை கடவுள் ஸ்தானத்தில் வைத்துக் கொண்டாடப் போகிறீர்கள்; அதை நான் பார்க்கத்தான் போகிறேன்’ என்று முப்பது ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது அவர் வாக்கு பலித்து விட்டது.
….
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.