Share

May 17, 2021

எம். வி. வெங்கட்ராம்

 எம்.வி. வெங்கட்ராம்

- R. P. ராஜநாயஹம் 


"ஹிந்துவாகிய நான் ஊழை நம்புகிறவன்; பல பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாகத்தான் நான் தமிழ் எழுத்தாளனாகப் பிறக்க நேர்ந்தது "

- 'என் இலக்கிய நண்பர்கள்' நூலில் எம்.வி.வெங்கட்ராம்


" மோகமுள் " நாவலில் எம்.வி.வெங்கட்ராம் ஒரு கதாபாத்திரமாகவே வருவார். 

பாபுவின் கல்லூரித்தோழனாக. 


திஜா மோகமுள்ளில் எம்விவி பற்றி : "பேசாமலேயே விழியால் நட்பைச் சுரக்கும் உள்ளம். என்னிடம் மட்டும் இல்லை. எல்லோரிடமும் இப்படித்தான்.எந்த மனிதனிடமும் வெறுப்போ, கசப்போ தோன்றாத,தோன்ற முடியாத மனது இவனுக்கு. வியாபாரத்தில் எப்படி இவன் முன்னுக்கு வரப் போகிறானோ?

 யோகியின் உள்ளம் இவனுக்கு. அதை மறைப்பதற்காகக் கடை வைத்திருக்கிறானோ? இன்னும் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக, எல்லாவற்றையும் ஒரேயடியாக ஒரு நாள் உதறி எறிந்துவிட்டுப் போவதற்காக வைத்திருக்கிறானா, புரியவில்லை."


அசோகமித்திரன் " மானசரோவர் " நாவலில் மணிக்கொடி எழுத்தாளர் கி.ராமச்சந்திரனை

 " கோபால் " என்ற அற்புதமான கதாப்பாத்திரமாக உருவாக்கியிருந்தார். 

( மானசரோவர் 'சத்யன்குமார்' பாத்திரம்

 இந்தி நடிகர் திலீப்குமார்)


ஒரு பிரபல எழுத்தாளரை இன்னொரு பிரபல எழுத்தாளர் தன் நாவலில் கதா பாத்திரமாக்கியது - அமெரிக்க பெண் எழுத்தாளர் கேத்தி ஆக்கர் எழுதிய

“Blood and Guts in High school” நாவலில் பிரஞ்சு எழுத்தாளன் ழான் ஜெனே ஒரு முக்கிய பாத்திரம். 


மௌனியின் கதைகள் பலவற்றை எம்.வி .வி திருத்தி செப்பனிட்டிருக்கிறார்.


இவருக்கும் மௌனிக்குமான இலக்கிய சர்ச்சை ஒன்று அந்த காலத்தில் ரொம்ப பிரபலம்.


எம்.வி வெங்கட்ராம் தான் எழுத்தாளனாக இல்லாமலிருந்தால் பெரிய கோடீஸ்வரன் ஆகியிருக்க முடியும் என்று சொல்வார்.

சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர். 


அவருடைய "வேள்வித்தீ " " நித்தியகன்னி"

நாவல்கள் அவருக்கு இலக்கிய அந்தஸ்தை கொடுத்தன. 

ஆனால் அவர் கடைசி காலத்தில் எழுதிய

 " காதுகள் " நாவல் அவருடைய அமர சாதனை 

என சொல்லப்பட வேண்டும். 


எம்.வி.வி அவருடைய மத்திய வயதில் வினோத வியாதி ஒன்றிற்கு ஆளாக நேர்ந்தது. 

அவர் காதுகளில் படு ஆபாசமான வார்த்தைகள் ஒலிக்க ஆரம்பித்தன. இந்த ஹிம்சையிலிருந்து அவர் மீள முடியவே இல்லை. 

அதை " காதுகள் '' நாவலாக்கினார். 


அந்திம காலத்தில் அவர் காதுகள் டமார செவுடு ஆகி, பிறர் பேசுவதை கேட்க மிகவும் சிரமப்பட்டார்                  என்பது Irony. 


வாழ்வில் பெருந்துயர் சூழ்ந்து எதிரிகளால் புதையுண்டு மீண்டும், மீண்டும் தான் உயிர்த்தெழுந்தவன் என்றும் வெங்கட்ராம் எழுதியுள்ளார். 


கு.ப.ரா வின் சிஷ்ய பரம்பரையில்

 முதல் எழுத்தாளர் எம். வி. வெங்கட்ராம். 

தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, ஸ்வாமிநாத ஆத்ரேயன், கவிஞர் கம்பதாசன், அ.கி. ஜெயராமன் 

என்று நீளும் கு. ப. ரா சிஷ்யர்கள் வரிசை. 


... 


மீள் பதிவு 2009

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.