Share

May 31, 2021

மணல் கோடுகளாய் பற்றி கார்த்திகேயன் வெங்கட்ராமன்

 மணல் கோடுகளாய்


R.P.ராஜநாயஹம் சாரின் வாழ்பனுபவங்களின் சுவாரஸ்யமான தொகுப்பே "மணல் கோடுகளாய்" என்னும் இந்த கட்டுரை நூல். 


R.P.ராஜநாயஹம் சாருக்கு தனியாக அறிமுகம் தேவையில்லை. சில வருடங்களுக்கு முன்பாக டி.எஸ்.பாலையா அல்லது பானுமதி யாரோ ஒருவர் என்று நினைவு, குறித்த தகவல்களுக்காக இணையத்தில் தேடியபோது சாருடைய வலைப்பூவின் சுட்டி வந்து விழுந்தது. அதைப்படிக்கத் துவங்கி அப்படியே தொடர்ச்சியாக பிரம்மிப்புடன் சினிமா குறித்த அவரது அற்புதமான பதிவுகளை வாசிக்கத் துவங்கினேன். அப்படியே "மு.தளையசிங்கமும் தொழுகையும்" எனும் கட்டுரை தொடங்கி அவரது இலக்கிய வாசிப்பு மற்றும் ரசனை என மற்றொரு தளம் கண்முன்னால் விரிந்தது. நடுநடுவே அவரது வாழ்க்கை அனுபவங்கள் தொடர்பான பதிவுகளும் தலைகாட்டி அவர்மீதான மரியாதையை அதிகரிக்கச் செய்தது.


நாம் எல்லோருக்குமே இந்த வாழ்வில் எத்தனையோ அனுபவங்கள் கிடைத்திருக்கும். எத்தனையோ விஷயங்களை, கசப்புகளைக் கடந்து வந்தருப்போம். ஆனால் எவ்வாறு அதனை ஏற்றுக் கடந்து வருகிறோம் என்பதும், அது நம்மீது என்ன மாதிரியான தாக்கத்தைச் செலுத்துகிறது என்பதும் முக்கியம். R.P.ராஜநாயஹம் சாருக்கும் அதுபோலவே நிகழ்கிறது. நல்ல வளமான பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்கிறார். தந்தையார் அரசுப்பணியில் இருப்பதால் கல்லூரிப் படிப்பு, திருமணம் என நல்லகாலம் தொடர்கிறது. அதன்பிறகு மாமனார் வழியாக பிராந்திக்கடை (கோல்கொண்டா இரண்டு புல் வாங்கும் மு.க. அழகிரி!), கெமிக்கல் பேக்டரி, வட்டி பிஸினஸ் என நகரும் வாழ்க்கையில் தடுமாற்றம் தலைகாட்டுகிறது. திருச்சி வாசம்,

பிறகு வேறுசில முயற்சிகள் செய்து பலனளிக்காமல் பிழைப்புக்காக குடும்பத்துடன் திருப்பூர் செல்கிறார். அங்கும் தொடரும் சிரமங்களையடுத்து சென்னைக்கு வந்து கூத்துப்பட்டறை பணியில் சேர்ந்து வாழ்க்கை அப்படியே நகர்ந்து வருகிறது.


அவ்வாறு நகர்ந்து கொண்டு செல்லும் வாழ்வில், தனது விதவிதமான

அனுபவங்களை, வாசகரது பார்வைக்கு பெரிய judgemental views இல்லாமல் எழுதிச் செல்வது அவரது பெரும்பலம். இந்தக் கட்டுரைகளில் அநேகமாக அவரது முகநூல் பக்கத்தில் எழுதப்பட்டவை. அவைதவிர்த்த பிற கட்டுரைகளும் தொகுப்பில் உண்டு! அதுதரும் அலாதியான அனுபவங்களை ஒவ்வொன்றாக எடுத்துரைப்பது சரியாக இராது என்பதால் உங்களுக்காக சில குட்டி டீஸர்கள் மட்டும் இங்கே..


கவுண்டமணி ஒரு படத்தில் வீட்டுவாசலில் பிச்சை கேட்கும் பிச்சைக்காரனுக்கு மனைவி இல்லை என்று சொல்லி அனுப்புவதைக் கண்டு கோபத்துடன் அவளைத் திட்டி விட்டு, அவனைத் தான் கூப்பிட்டு சாப்பாட்டு இல்லை என்று அனுப்புவார். அதுபோல R.P.ராஜநாயஹம் சாரின் ஆச்சிக்கும் - அம்மாவிற்கும் நடக்கும் ரணகள எபிசோடுடன் நூல் துவங்குகிறது. அதேபோல 'சமயக்கார பாய்க்கு' சினிமா ஆசைக்கு தூபம் போடும் பகுதியை வெடித்துச் சிரிக்காமல் உங்களால் கடக்க இயலாது. அதேசமயம் ஆசைப்பட்டு புதுவை சேதாரப்பட்டு இண்டஸ்ட்ரி  எஸ்டேட்டில் அவர் உருவாக்கிய கெமிக்கல் பேக்டரியை கைமாற்றுவதும், நடுரோட்டில் அந்த எலக்ட்ரீசியன் கேவி அழுவதும், அதற்குப்பின் அவர் புதுவைக்கே போகாத வரலாறையும் படிக்கும்போது நெஞ்சம் தழும்பி விடும். :-( 


சினிமா உலகில் இரண்டு படங்களில் அவர் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றி அவர் எழுதியுள்ளதை வாசிக்கும் போதும் சரி, கடைசியாக 'ராசுக்குட்டி' திரைப்பட டைட்டில் குறித்து கசந்து போன நெஞ்சம் குறித்து அவர் சொல்லும்போதும் சரி, அவர் கடந்து வந்த மனிதர்களை நினைத்து நமக்கும் கசப்பு மனதில் எழும்பி மறைகிறது. 'individual choice' என்ற தலைப்பிலான கட்டுரையில் திருச்சி இலக்கியக் கூட்டம் ஒன்றில் மோசமாக நடந்துகொண்ட 'பேராசிரியன்' ஒருவனுக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் இலக்கிய உலகின் இப்படிப்பட்ட அரசியல்களுக்கு தேவைதான் என்று சொல்ல வைக்கிறது. 


அவரது மூத்த மகன் கீர்த்தி திருப்பூரில் பதின்ம வயதில் வேலைக்குச் சென்றதைப் பற்றிய கட்டுரையில், 'கிரிக்கெட் வெளையாடுறாங்கப்பா" என்ற வரியை முதன்முறை முகநூலில் படித்தபோதும் மனசு கனத்துதான் போனது. அத்தோடு ஜோதிடம் பார்க்க கற்றுக்கொண்டு அவரடைந்த பலவித அனுபவங்கள் ஒருவகை என்றால், திருப்பூரில் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றிய தருணங்களில் குழந்தைகள் சார்ந்த பதிவுகள் நெஞ்சைத் தொடும் வேறொரு வகை! சென்னையில் கூத்துப்பட்டறையில் ரஜினி பேரனோடு அவரது உரையாடல்  குறித்த சிறு பதிவு ஒன்றும் உண்டு. :-)


இத்தனை அனுபவங்களில் அவரது துல்லியமான ஞாபக சக்தி நம்மை வியக்க வைக்கும். அதுகுறித்த பதிவும் ஒன்று உண்டு. அவரைப் பற்றி மறைந்த கி.ரா அய்யா மற்றும் சாரு நிவேதிதா எழுதிய பதிவுகளும் போனஸ். இதையெல்லாம் வாசிக்கும் போது அவர் எழுத வாய்ப்புள்ள (எழுத வேண்டுமென்று நான் விரும்புகிற) சுயசரிதைக்கான டீஸர் என்று கூட

இந்த நூலைக் கருதலாம். :-) மொத்தத்தில் நிறைவான வாசிப்பு அனுபவம் தரும் பிரதி! ❤️


மணல் கோடுகளாய்

R.P.ராஜநாயஹம்

யாவரும் பப்ளிஷர்ஸ்

ரூ. 190.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.