Share

Sep 28, 2020

காருக்குறிச்சி அருணாசலம்

 'சிங்காரவேலனே தேவா’ ஆபேரி ராக பாடலுக்கு                 நாதசுரம் வாசித்த காருக்குறிச்சி அருணாச்சலம். 


தன் பெயர் ‘கோவில் பட்டி அருணாச்சலம்’  

என்று குறிப்பிடப்பட்டால் விரும்ப மாட்டார்.

 ‘காருக்குறிச்சி அருணாச்சலம்’ என்று குறிக்கப்படவேண்டும் என்பார். 


ஒரு புகைப்படம் அபூர்வமானது. அதில் மூன்று மனைவிகளோடு அவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இருக்கிறது. 


தன்னுடைய குருநாதர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை போலவே தானும் மூன்று பொண்டாட்டிக்காரன் என்று காருக்குறிச்சி சொல்லிக்கொள்வார்.


1921ம் வருடம் ஏப்ரல் 26ம் தேதி பிறந்த காருக்குறிச்சி 1964ம் வருடம் ஏப்ரல் 7ம் தேதி மறைந்திருக்கிறார்.

 மாரடைப்பால் இறந்தார்.



காருக்குறிச்சியின் முதல் மனைவியின் அப்பா முத்தையா புலவர். 

கி.ராவிற்கு அருணாச்சலத்தின் ஷட்டகர் பொன்னுசாமி மிகவும் பரிச்சயமானவர்.


முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி உடனே மறைந்திருக்கிறார். ஆனதால் முதல் மனைவியின் உறவினரான மற்றொரு    பெண்ணை மணந்தார் காருக்குறிச்சி. அவருக்கு குழந்தைகள் பிறந்தார்கள்.

 பின்னர் நடிகை ஈ.வி.சரோஜாவின் 

ஒன்று விட்ட சகோதரியை கல்யாணம் செய்து கொண்டார். தஞ்சாவூர்க்காரர். இவருக்கும் குழந்தைகள் உண்டு.


எல்லா குழந்தைகளையும் மூத்த முதல் மனைவி அன்போடு வளர்த்து ஆளாக்கினார்.


‘கொஞ்சும் சலங்கை‘ யில் நாகஸ்வர வித்வானாக ஜெமினி கணேசன் நடிப்பைப் பார்த்து பிரமித்துப்போய் காருகுறிச்சி

 “அது எப்படிய்யா? நாகஸ்வரம் இந்த இடத்தில் மேலே தூக்கணும், இங்க இறக்கணும், 

சீவாளியை இப்படி இப்படிச் சுத்தம் பண்ணணும் இவ்வளவு நேர்த்தியா உன்னால முடிஞ்சது. எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடேன்” என்று மனம் விட்டுப் பாராட்டியதைப் பற்றிப் புளகாங்கிதத்துடன் என்னிடம் சொன்னபோதே, காருகுறிச்சி பற்றிய நினைவுகளில் மூழ்கி, நெகிழ்ந்து உடைந்த குரலில்,

 ‘ நல்ல மனுஷனெல்லாம் அற்பாயுசிலே

 போய்ச் சேந்துட்டான்’ என்று என்னிடம் ஏங்கினார் ஜெமினி.




நான் காருக்குறிச்சியின் கடைசி மகள் ராஜத்திடம் விசாரித்தேன். 

ஜெமினி கணேசன் பணம் எதுவும் தரவில்லையாம். 

 கோவில்பட்டி செல்லையா தேவர் தான் கோவில்பட்டி காருக்குறிச்சி அருணாசலம் மணிமண்டபம் கட்டுவதற்கு பொருளுதவி செய்திருப்பதாக தெரிகிறது. கமிட்டி தலைவராக வசூல் செய்திருக்கிறார். 


சாவித்திரியோடு வந்து ஜெமினி கணேசன் மணிமண்டபத்தை 

திறந்து வைத்திருக்கிறார். 

கல்வெட்டில் நன்கொடை ஜெமினி கணேசன் - சாவித்திரி என செல்லையா தேவர்                   பெயருக்கு மேலே குறிக்கப்பட்டிருக்கிறது. 


காருக்குறிச்சிக்கு  சரவண பவன் என்று 

ஒரு மகன். 

டாக்டர் ச. வீரப்பிள்ளை என்பவர் கிராவுக்கும் எனக்கும் நல்ல நண்பர். 

சரவண பவனை காரைக்காலில் சந்தித்ததாக கிராவிடம் சொன்னார் வீரப்பிள்ளை.


கி.ரா பழைய நினைவில் மூழ்கி 

என்னிடம் சொன்ன விஷயம் ஒன்று.

காருக்குறிச்சியின் மகனை நாகசுர வித்வானாக்க வேண்டும் என்று கி.ரா வற்புறுத்தியிருக்கிறார். காருக்குறிச்சி அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.

 மறுத்துத்தலையை ஆட்டினார்.

 ’நாகசுரம் வாசிப்பவனுக்கு சரியான மரியாதையை இந்த சமூகமும் சங்கீத உலகமும் தருவதேயில்லை’ என காரணம் சொன்னாராம்.


காரு குறிச்சியின் 'சகானா' வாசிப்பு 

ஒலி நாடாவில் கேட்கும்போது 

ஒரு தடவை 

எனக்கு 'இப்போதே மரணம் வாய்த்து விடாதா'

 என ஒரு நிறைவு ஏற்பட்டது.

………

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.