Share

Jun 26, 2020

ராஜநாயஹம் பற்றி வாசுகி பாஸ்கர்

பெரு மதிப்பிற்குரிய நண்பர் வாசுகி பாஸ்கர்
 என் எழுத்துக்கு மகுடம் சூட்டி கௌரவித்திருக்கிறார். 
படித்துப் பாருங்கள். 

"என் மகள் சிமிண்ட் ஷெல்ப்களில் ஏறும் குரங்கு சேஷ்டைகள் சமீபத்தில் அதிகமாகியிருக்கிறது, முந்தாநாள் காலை உயரத்திலிருந்த புத்தகங்களை ஜோஸ்யக்காரனின் கிளியைப் போல வீசிக்கொண்டிருந்தாள், கோவத்தில் எச்சரித்தபடி கீழே குனிந்து எடுத்த புத்தகம் "சினிமா பதிவுகள்"  R. P. ராஜநாயஹம் சார் எழுதியது. 

சங்கர் கொலைவழக்கு தீர்ப்பு வந்த நேரம், மன ரீதியாக தொந்தரவுக்கு உள்ளாகி எதைதையோ சிந்தித்துக் கொண்டிருந்த போது புத்தகம் கைக்கு கிடைத்தது. முற்றிலும் புதியவொரு அனுபவத்துக்காக படிக்கத் தொடங்கினேன், 240 பக்கம், போனதே தெரியவில்லை. Rejuvenate என்று சொல்வார்களே, அது போல பேரனுபவம். 

R. P. ராஜநாயஹம் சார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே விழுப்புரம் வந்தார், அவருக்கு விழுப்புரத்தில் ஒரு வேலை, கல்யாண சமாச்சாரம். நண்பர்கள் சிலர் பரிந்துரைக்க என்னை தொடர்பு கொண்டார், வழி போக்கன் கூட செய்யக் கூடிய உதவி, அதற்கு அவர் பதில் செலுத்திய அன்பு மிகை, அது அவரது சுபாவம். விடை பெறும் போது அவரது இரண்டு புத்தகங்களை கையொப்பமிட்டு கொடுத்திருந்தார், உன்னத மனிதரும் அருமை நண்பருமான வாசுகி பாஸ்கர் அவர்களுக்கு என்று முதல் பக்க கையொப்பம். இப்போது தான் கவனித்தேன்,  சாரின் வார்த்தைகளுக்கு நான் மிகை, பெருந்தன்மை பூடகம் இல்லை, நிஜம். 

இந்த இரண்டு புத்தகங்களையும் நான் மறந்தே போனேன், R. P. ராஜநாயஹம் சாரின் முகநூல் blog பதிவுகளை விரும்பி படித்து வந்தாலும் அவர் கொடுத்த புத்தகங்களுக்கு நான் இலக்கிய அந்தஸ்தோ ஆய்வு கௌரவமோ கொடுக்க வில்லை, இனாமாக கிடைத்தது இல்லையா, மனுஷ புத்தி. அதற்காக சாரிடம் நான் இப்போது மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இலக்கியமாவது மயிராவது, படிக்கிறவனுக்கு அனுபவத்தை கொடுக்காத இலக்கியம் எதற்கு? என்று சொல்வதின் மூலம் அவரின் இலக்கிய புலமையையும் நாம் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை, முற்றிலும் பிரெஷ்ஷான எழுத்துப் பாணி, சோர்வு தட்டுப்படவில்லை. காட்டாற்றின் வெள்ளத்தின் வேகம் கண்களுக்கு வெளிச்சம், ஆனால் "குதிச்சி பார்றா அப்பத்தான் தெரியும்" என்று மெளனமாக ஒரு ஆறு ஓடிக்கொண்டிருக்கும், அது தான் R. P. ராஜநாயஹம் சாரின் எழுத்து நடை, என்ன வேகம், எவ்வளவு தகவல்கள்? இடையிடையில் ஷேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலம். 

எம்ஜிஆரில் ஆரம்பித்து சாமிக்கண்ணு வரை, ஜுராசிக் பார்க் டூர் போல சினிமா டூர் ஆனால் வழக்கமான சினிமா வரலாறு இல்லை, பிரபலம் - பிரபலமில்லாதவர், வாழ்ந்தவர் - கெட்டவர் என்று சினிமாவின் 360 டிகிரி சமாச்சாரங்கள். சாமிக்கண்ணு கூட பிரபலம் தான், முள்ளும் மலரும் சாமிக்கண்ணு. ஆனால் அரிய செய்தி பராசக்தி படமாவதற்கு முன்னே அதன் நாடக வடிவத்தில் சிவாஜி ரோலில் குணசேகரனாக நடித்தவர் சாமிக்கண்ணு, எவ்வளவு தகவல்கள்? 

நான் என் வாழ்க்கையில் ஒரு பக்கத்தை படித்து விட்டு வெடித்துச் சிரித்தது இந்தப் புத்தகம் தான், சிரிப்பு வராமல் கூட போகலாம், நீங்கள் அவர் ரசிகராக இருந்தால். ஜெய்சங்கர் பற்றிய பதிவு, எப்போதும் துருவென்று இருப்பார், பல்டியடிப்பார், தாவிக்குதிப்பார், டப்பா படத்தில் கூட வெள்ளிவிழா படத்தில் நடிப்பதைப் போல உற்சாகமாக இருப்பார் என்கிறார். அடுத்தது, சினிமாவைத் தவிர வேறு பொழுது போக்கே அறியாத மக்கள் சினிமாவும் போரடிக்கும் என்று அறிந்துக்கொண்டது ஜெய்சங்கர் படங்கள் பார்த்த பிறகு தான்  (வெடித்துச் சிரித்தேன், மனைவி முறைக்கிறார்) 

1970 களில் மதுரை தமுக்கம் மைதானத்தில் என்னத்த கண்ணையாவும் கமலும் ஒரு நாடகம் நடிக்கிறார்கள், கன்னையா வீட்டு ஃப்யூஸை பிடிங்கிவிட்டு கமல் கன்னையாவின் மகளை கடத்துகிறார், மேடையில் ஒரே இருட்டு. இந்தாங்க இதெ மெயின்லே சொருவுங்க என்று ஃப்யூஸை தூக்கி போட்டு கமல் எஸ்கேப் ஆகிறார், அப்போ என்னத்த கன்னையா வசனம் 

" ஏன் தம்பி, சொருகுனா எரியுமா?"  

தமுக்கம் மைதானமே சிரிப்பில் அதிர்ந்து இருக்கிறது, "வரும் ஆனா வராது" என்கிற வசனத்தை தாண்டி என்னத்த கன்னையாவுக்கு ஒரு வரலாறு இருக்கிறது, என்னத்த கன்னையாவின் முன் தயாரிப்பில்லாத டைமிங் சென்ஸ் பயங்கரமாம், நமக்குத் தெரியுமா? வெற்றி பெற்று பணம் புகழ் அந்தஸ்து பெற்றவர்கள் மட்டுமே ஞானஸ்தர், மனித மதிப்பீடு, எவ்வளவு அபத்தம்? 

சினிமா பற்றியான நம் பொது அபிப்பிராயங்களை பல இடங்களில் அடித்து உடைக்கிறார். நம்பியார் படத்தில் தான் வில்லன், நிஜத்தில் சாந்த சொரூபி, சாமியார். இது சொல்லப்பட்டு வந்தவை, ஆனால் நம்பியார் முகம் சுளிக்கும்படி பயங்கர விரசமாக பேசக்கூடியவராம், காதை பொத்த வேண்டுமாம். மிகைப்படுத்தப்பட்ட ஜோடி பாலசந்தர் - நாகேஷ், நாகேஷை பாலசந்தர் பயன்படுத்தியதைப் போல யாரும் பயன்படுத்தியது இல்லை, இந்த ஜோடியை கமல் கூட பல இடங்களில் புகழ்ந்து இருக்கிறார், ஆனால் நாகேஷ் மித மிஞ்சிய ஓவர் ஆக்டிங் செய்ய ஆரம்பித்ததே பாலச்சந்தரால்  தான் என்று கவனப்படுத்துகிறார், உண்மையும் கூட.  

கமலஹாசன் கேமரா சென்ஸ் இல்லாமல் நடிக்க முடிந்ததில்லை, இந்த படத்தில் எனக்கு நிறைய வேலை இருக்கு என்கிற கமலின் மெணக்கீடலை சுட்டி காட்டுகிறார், சுபாவம் மாறாமல் இயல்பாய் இருப்பதென்பது கடும் பயிற்சி, அது இந்தியாவிலேயே வாய்த்தது மோகன் லால் ஒருவருக்குத்தான் என்கிறார், மறுக்க முடியுமா? ( கமல் ரசிகர்கள் நோ டென்சன், R. P. ராஜநாயஹம் கமலைப் பற்றிய ஆதர்சத்தையும் குறிப்பிட்டு இருக்கிறார், தீவிர கமல் ரசிகர் ) 

நான் தங்கவேலு காமெடிக்கு ரசிகனாக இருந்திருக்கிறேன், ஆனால் இதுவரை அதை சொல்லத் தெரிந்ததில்லை, புத்தகத்தை மூடி வைத்து விட்டு தங்கவேலுவை அசை போட்டேன், ஆமாம் பிரமாதமான நடிகன். எப்படி அவரை என் ஆதர்சமென பிரகடனப்படுத்தாமல் போனேன்? R. P. ராஜநாயஹம் அதை மீட்டெடுத்தார், ஈபன் அண்ணனுக்கு போன் செய்தேன். ஒரு மணி நேரம் தங்கவேலுவை பற்றிப் பேசினோம், கல்யாணப் பரிசில் அவர் ஒரு காட்சி சொன்னார். வேலை வெட்டி இல்லாத தங்கவேலு மற்றுமொரு வேலை இல்லாத நண்பனான ஜெமினி கணேசனை வீட்டுக்கு அழைத்து வந்து பெரிய கம்பெனியின் மேனேஜர் என்கிறார், "என்னப்பா பொய் சொல்ற?" என்று ஜெமினி கணேசன் காதில் கடிக்கிறார். தங்கவேலு ஸ்பாட்டிலேயே 

"அட யார்ரா இவன், உண்மையை கூட சொல்ல விட மாட்றான்" 

அந்த டைமிங் நினைத்து நானும் அண்ணனும் பத்து நிமிடம் சிரித்தோம்.  

நான் தங்கவேலு ரசிகன், மீட்டுக் கொடுத்தது R. P. ராஜநாயஹம் சார். 

சினிமா ஒரு பூதம், நல்லது கொஞ்சமும் கெட்டது நிறையவும் கொடுக்கும் அபூர்வ பூதம். திறமை ஒரு அளவுகோல் அதே நேரம் திறமை மட்டுமே அளவுகோல் இல்லை, எத்தனை அசாத்திய கலைஞர்களை அது மென்று சாக்கடையில் துப்பியிருக்கிறது? சினிமாவில் இருப்பவன் நேரம், காலம், ஆன்மீகம், ஜோசியத்தை தாண்டி சிந்திப்பது கஷ்டம் தான், எப்படி ஜெய்கிறான்? எதற்காக ஜெயிக்கிறான்? ஏன் ஜெய்கிறான்? ஏன் தோற்கிறான்? யாருக்குமே புலப்படவில்லை, myth . அதனால் தான் நேரம் காலம் ஜோசியம் பக்தி மயக்கமோ என்னவோ. 

எம்.கே.தியாகராஜ பாகவதர், அந்தக்கால பெண்களின் ஆதர்சம் என்பதை விட ஆர்கஸம், பெரு வாழ்வு வாழ்ந்த சீமான், அவரது சமாதி தேடி கண்டு பிடிக்கும் நிலையில் திருச்சியில் இருந்திருக்கிறது, அதுவும் மலம் போகுமிடத்தில். Strange 

சினிமாவை தன் வரலாற்றோடு இணைத்து எழுதிய பாணி Classic , சரோஜா தேவி பற்றி எழுதும் போது சரோஜா தேவி என்னும் புனைப்பெயரில் எழுதி வந்த காம ரசக் கதைகளை படித்து நீதி போதனை வாத்தியாரிடம் மாட்டிக்கொண்டாராம் ராஜநாயஹம். 
பின்னொரு நாள் பள்ளி விழாவில் "நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே" பாடினாராம், 

"இந்த பாட்டை பாட வேற ஆளே கிடைக்கலையாடா உங்களுக்கு" என்றாராம் நீதி போதனை.  

குறிப்பெடுக்கவில்லை, நினைவில் நின்றதை எழுதியிருக்கிறேன், இந்த புத்தகம் அதையும் தாண்டி பேசியிருக்கிறது, தகவல் களஞ்சியம்
 R. P. ராஜநாயஹம் சார். 
தகவல் தெரிந்தால் போதுமா? மொழி வேண்டுமே? சட்டகத்திற்குள் அடங்காத தனி நடை, சுவாரசியம். ராஜநாயஹம் சாரை சினிமா பயன்படுத்திக்கொள்ள தவறியிருக்கிறது, ஜெயித்திருந்தால் இந்த நூல் வந்திருக்குமா தெரியவில்லை, நினைத்தபடி மன நிறைவோடு வாழ்ந்தவர் பலர், அது பிரபலத்தன்மை என்கிற விதிகளுக்கு கீழ் இயங்க வேண்டியதில்லை, 

நீங்கள் ஒரு அசாத்தியமான திறமைசாலி சார். அடுத்து உங்களது இலக்கிய பதிவுகள் நூலை எடுத்து வைத்திருக்கிறேன். மீண்டும் மன்னிப்பு கோருகிறேன், தற்செயலாகத் தான் படிக்க ஆரம்பித்தேன், நல்ல நேரம் விபத்தில் தொடங்கியதைப் போல, நல்ல அனுபவம், உளப்பூர்வமாக நன்றி சார்."

- வாசுகி பாஸ்கர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.