Share

Jun 18, 2020

'சினிமா எனும் பூதம்' பற்றி சிவகுமார் கணேசன்

சினிமா எனும் பூதம்
R. P. ராஜநாயஹம்
Zero Degree Publishing 

சிவாஜி,எம்ஜிஆர்,முத்துராமன்,கமல்,ரஜினி போன்ற பிரபலங்களை மட்டுமல்ல,திரைப்படங்களில் சில காட்சிகளே வந்து போன பி.டி.சந்தானம்,ஹரிநாத் ராஜா,டவுன் பஸ் கண்ணப்பா,ஆதித்யன் போன்ற அபிரபலங்களைப் பற்றியும் நாமறியாத செய்திகளை,மெலிதான நகைச்சுவை மிளிரும் தொய்வில்லாத நடையில் 312 பக்கங்களில் சொல்லும் புத்தகம்.

தண்ணிலவு தேனிறைக்க எழுதிய மாயவநாதன்,வாராய் நீ வாராய் எழுதிய கா.மு.ஷெரிப், காவேரி ஓரம் கவி சொன்ன காதல் எழுதிய கே.டி.சந்தானம்,கம்பதாசன் முதலான நாம் மறந்த கவிஞர்களைப் பற்றி எத்தனை தகவல்கள்.

M.R.ராதா,நாகேஷ்,சந்திரபாபு அடேயப்பா எப்பேர்ப்பட்ட கலைஞர்கள்.

திரைப்பட உருவாக்கத்தில் படாதபாடு படும் புரடக்ஷன் அஸிஸ்டென்ட்ஸ்,அஸிஸ்டென்ட் டைரக்டர்கள்,70களில் தமிழ் ரசிகர்களை ஆக்ரமித்திருந்த இந்திப் படங்கள்,இந்திப் பாடல்கள்,கழிவறையாகிப் போன எம்.கே.தியாகராஜ பாகவதரின் சமாதி என ஏராளமான தகவல்களை, திரைப்படத் துறையில் பணிபுரிந்ததால் அலட்சியமாகச் சொல்லிச் செல்கிறார்.

வி.குமாரின் நித்தம் நித்தம் ஒரு புத்தம் புது சுகம் நான் தேடுவேன் பாடல்,டி.ராஜேந்தரால் வசந்தம் பாடி வர வைகை ஓடி வர ஆனது.சங்கர் கணேஷின் விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா பாடல்,வாள மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் கல்யாணமானது எனபதைச் சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார்.

ரத்னமாலாவுக்கும் சிவாஜி கணேசனுக்குமான உறவு, நம்பியாரைப் பற்றிய மனோரமாவின் நம்ப முடியாத கமெண்ட்,ஜெமினி,சௌகார் ஜானகி,கமல்,அம்பரீஷ் போன்ற பலரின் மறுபக்கத்திலெல்லாம் வெளிச்சத்தைப் பாய்ச்சியவர், பாலாஜியின் மறுபக்கத்தைச் சொல்லும் போது யாருக்குத்தான் அப்படி ஒரு மறுபக்கம் இல்லை என்று கடந்து போகிறார்.

அத்தனை நடிக, நடிகையர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள்.தயாரிப்பாளர்கள் என நாமறிந்த, நாமறியாத, நாம் மறந்த அத்தனை பேரையும் ஆச்சர்யமான தகவல்களோடு நினைவுபடுத்தும் இந்தப் புத்தகத்தை சினிமா ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.

... 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.