வருடம் 1950.
கவிஞர் வைத்தீஸ்வரன் அவருடைய மாமா வீட்டில் இருந்து தான் படித்து கொண்டிருந்திருக்கிறார். சும்மா வளர்ந்த பையன்.
மாமா திரைப்பட நடிகர் எஸ். வி. சகஸ்ர நாமம் அப்போது தான் சேவா ஸ்டேஜ் நாடக கம்பெனி ஆரம்பித்துள்ளார்.
வால்டாக்ஸ் ஒற்றை வாடை தியேட்டரில் தான் நாடக காட்சிகள் நடந்திருக்கிறது.
முதல் நாடகம் 'மோகினித்தீவு'
டி. கே. பாலச்சந்திரன் தான்
முதல் நாடக கதாநாயகன்.
பாலச்சந்திரன் பின்னால் பல மலையாள படங்களில் நடித்தவர்.
அதனாலோ என்னவோ கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக இயங்கியவர்.
தமிழில் கே. எஸ். கோபால கிருஷ்ணன் இயக்கிய தெய்வத்தின் தெய்வம், குல விளக்கு போன்ற படங்களில் நடித்தவர்.
குல விளக்கு படத்தில் இவருக்கும் விஜயஸ்ரீக்கும்
ஒரு பாடல்.
ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈஸ்வரி பாடிய
'கொண்டு வந்தால் அதை கொண்டு வா வா,
பால் குடிக்கிற நேரம் அல்லவா
உண்டு மகிழ்ந்திட ஓடி ஓடி வா
பழம் உண்ணுகிற நேரம் அல்லவா '
ஒற்றை வாடை தியேட்டரில் எழுபது வருடங்களுக்கு முன்பு சகஸ்ர நாமம் மோகினித்தீவு நடக்கிற போது வைத்தீஸ்வரனுக்கு கோடை விடுமுறை.
அதனால் இவருடைய மாமா இவரை
அந்த தியேட்டருக்கு போக சொல்வாராம்.
பகல் மூன்று மணிக்கு போய்
டிக்கெட் கவுண்டரில் இருப்பார்.
ஆறு மணிக்கு க்ரீன் ரூமுக்கு போய் இவரே முகத்தில் பவுடர் பூசிக்கொள்வார்.
மேக் அப் மேன் இவருடைய தலையில்
ஒரு பழைய Wig ஐ மாட்டி விடுவார்.
பிறகு ஜிகினா தைத்த பழைய அழுக்கு அங்கி மாட்டிக்கொண்டு நாடகத்தில் அரச குமாரன் நிற்கும்போதெல்லாம் அவன் பின்னால் தண்டு பிடித்துக் கொண்டு நிற்கிற சேவகன்.
அப்போது வைத்தீஸ்வரன் போலவே அரச குமாரனுக்கு இன்னொரு சேவகனும் இன்னொரு பக்கத்தில் தண்டு பிடித்துக் கொண்டு நிற்பான். அரசன் முன்னும் பின்னும் நகரும் போது இந்த இரண்டு சேவகர்களும் நகர வேண்டும்.
அந்த இன்னொரு சேவகன் ஏ. எல். ராகவன்.
இப்படி உபரி நடிகனாயிருந்த ராகவனுக்குள் அப்போது தான் இசைப்பாடகன் உருவாகிக்கொண்டிருந்திருக்கிறான் என்பதை என்னிடம் கவிஞர் வைத்தீஸ்வரன் நினைவு கூர்கிறார்.
....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.