க.நா.சுவின் ’இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலில் உள்ள கட்டுரைகள் படிக்க மிகவும் சந்தோஷம் தருபவை.
எப்படியோ ந.பிச்சமூர்த்தி பற்றி இதில் எழுதாமல் விட்டிருக்கிறார்.
சி.சு செல்லப்பாவை வேண்டும் என்றே தான் தவிர்த்திருப்பார்.
1985ல் இருந்து எத்தனை தடவை இந்த நூலை நான் வாசித்திருக்கிறேன்.
முதுமையில் குங்குமத்தில் தொடராக எழுதப்பட்ட கட்டுரைகள். எவ்வளவு ஆளுமைகள் பற்றி சின்ன சின்னதாக பேசுகிற தொனியிலேயே எழுதியிருக்கிறார். ஆராய்ச்சிக்காரனும், கல்வித்துறையாளனும், செக்குமாட்டு விமர்சகனும் ’இதில க.நா.சு. என்னத்த எழுதிட்டாரு. பொறுப்பே இல்லாத எழுத்து. தன்னப்பத்தியே எழுதியிருக்காரு. ஆளுமைகள பத்தி கூட தெளிவில்லாம சொல்லியிருக்காரு’ என்று கால் மேல கால் போட்டு, கண்ண விரிச்சி, உதட்ட பிதுக்கி தலைய ரெண்டு பக்கமும் ஆட்டுவான்.
இது பொக்கிஷம் என்பேன்.
பி.ஸ்ரீ.ஆச்சாரியா கிருஷ்ணன் நம்பியின் மாமா. அப்பாவின் சகோதரியின் கணவர்.
பி.ஸ்ரீ ஆச்சாரியா பற்றி அவர் எழுதியதை மீண்டும் நேற்றிரவு வாசித்துக்கொண்டிருந்தேன்.
வெள்ளக்காரன் காலத்தில் ஆச்சாரியா போலீஸ்காரர். அரசு ஆணையின் பேரில் பாரதியாரை ஃபாலோ செய்து, அவர் பிரசங்கங்கள் பற்றி சர்க்காருக்கு ரிப்போர்ட் செய்தவர்.
தமிழ் பண்டிதர்களின் கைகளில் அகப்பட்டுக்கொண்டு மக்களுக்குக் கிட்டாததாக இருந்ததை, பத்திரிக்கை வாயிலாக எல்லோருக்கும் விளங்கும்படியாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்தவர்களில் முதலாமவர் பி.ஸ்ரீ.ஆச்சாரியா தானாம். அவருடைய கம்ப சித்திரம் ஆனந்தவிகடனில் தொடராக வந்து பின் நூலாகி மதிப்பும் கவனமும் பெற்றதாம்.
பி.ஸ்ரீ.ஆச்சார்யா எழுதிய ஸ்ரீராமானுஜர் நூலுக்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது பற்றி க.நா.சு. முதல் தடவை ஒரு இலக்கிய நூலுக்கு கொடுக்கப்பட்டதாக திருப்தி தெரிவிக்கிறார
(1965ல் பி.ஸ்ரீக்கு சாஹித்ய அக்காடமி விருது கிடைத்தது)
பி.ஸ்ரீ. 1960களில் வாலாஜா ரோட்டில் க.நா.சு. வீட்டுக்கு இரண்டு மாடி ஏறி வருவார் என்று எழுதியிருப்பதைப் படித்தவுடன் என் பார்வைக்கு மட்டும் சில விஷயம் கவனப்பட்டது.
ஒரு நூலை அடுத்தடுத்த கால கட்டத்தில் மீண்டும் மீண்டும் எடுத்து வாசிக்கும் போதும் புதிய விஷயங்கள் புலப்படும்.
ந.முத்துசாமியுடன் அவருடைய கடைசி மூன்று வருடங்கள் நெருங்கி பழகியவன் என்பதால் அவர் மூலம் எனக்கு தெரிய வந்த விஷயங்கள் ’ பி.ஸ்ரீ 1960களில் வாலாஜா ரோட்டில் க.நா.சு. வீட்டுக்கு இரண்டு மாடி ஏறி வருவார்’ என்ற வரியில் ரொம்ப கனமானது.
இந்த வரியை வேறெவரும் சுலபமாக கடந்து செல்வார். ராஜநாயஹத்தால் முடியவில்லை.
Reading is a multi-faceted process.
க.நா.சு. குடியிருந்த அந்த வீட்டுக்கு தான் க.நா.சுவுக்கு பின் முத்துசாமி மாட்டாங்குப்பத்தில் இருந்து குடியேறியிருந்திருக்கிறார்.
க.நா.சு. சென்னையில் இருந்து பின்னால் ராஜி மாமியுடனும் மகள் ஜமுனாவுடனும் (பின்னால் இவர் தானே பாரதி மணியின் மனைவி) டெல்லிக்கு போகும்போது முத்துசாமியை அந்த வீட்டில் குடியமர்த்த ஏற்பாடு செய்திருக்கிறார்.
க.நா.சு வின் அயலார் ஒரு சாஸ்திரி. கீழ் வீட்டில் குடியிருந்த சாஸ்திரிக்கு க.நா.சு.வின் நடவடிக்கைகள் அவ்வளவு சிலாக்கியமாக தெரிவதில்லை. அனாச்சாரமாக தோன்றியிருந்திருக்கிறது.
முத்துசாமி மீசையை திருகி விட்டுக்கொண்டு மாடி போர்ஷனுக்கு குடி வந்த போது இவர் காது படவே சாஸ்திரிகள் “ஒரு சூத்திரன் போனான். இன்னொரு சூத்திரன் வந்திருக்கான்” என்று சலிப்பாக சொல்லி தன் அதிருப்தியை வெளியிட்டிருந்திருக்கிறார்.
க.நா.சுவின் கட்டில் ஒன்றை முத்துசாமிக்கே கொடுத்து விட்டார். அந்த கட்டில் சென்ற வருடம் வரை இங்கே இப்போது கூத்துப்பட்டறை வீட்டில் இருந்தது. அதை காட்டி முத்துசாமி ‘இது க.நா.சு கொடுத்த கட்டில்’ என்று பல முறை காட்டியிருக்கிறார்.
இங்கே அய்யப்ப நகர் வீட்டுக்கு 1987ல் சொந்த வீட்டுக்கு குடி வரும் வரை அந்த திருவல்லிக்கேணி வாலாஜா ரோடு மாடி வீட்டில் தான் முத்துசாமியும் மாமியும் குழந்தைகளாய் அப்போது இருந்த நடேஷ், ரவி இருவருடனும் இருந்திருக்கிறார்கள். சென்னை வாழ்வின் கணிசமான பகுதி அந்த வாலாஜா ரோடு மாடி போர்ஷன் வீட்டில் தான்.
க.நாசுவுக்கு பின் முத்துசாமி அந்த வீட்டில் குடியிருந்த போது அங்கே மௌனி வந்திருக்கிறார். முத்துசாமியை பார்க்க வந்தவர் நடேஷ் சிறுவனாக ஓவியம் வரைவதை பார்த்து ரசித்திருக்கிறார்.
அசோக மித்திரன் வரும்போதெல்லாம் ஒரு மாங்காய் கொண்டு வந்திருக்கிறார். மாங்காய் பிராமணர்.
பிரமிள் அடிக்கடி வந்திருக்கிறார். அவர் குண இயல்பு படி வம்பு வளர்த்து முத்துசாமியிடம் மனஸ்தாபம் ஆகியிருக்கிறார்.
க.நாசுவுக்கு பின் முத்துசாமி அந்த வீட்டில் குடியிருந்த போது அங்கே மௌனி வந்திருக்கிறார். முத்துசாமியை பார்க்க வந்தவர் நடேஷ் சிறுவனாக ஓவியம் வரைவதை பார்த்து ரசித்திருக்கிறார்.
அசோக மித்திரன் வரும்போதெல்லாம் ஒரு மாங்காய் கொண்டு வந்திருக்கிறார். மாங்காய் பிராமணர்.
பிரமிள் அடிக்கடி வந்திருக்கிறார். அவர் குண இயல்பு படி வம்பு வளர்த்து முத்துசாமியிடம் மனஸ்தாபம் ஆகியிருக்கிறார்.
’ பி.ஸ்ரீ 1960களில் வாலாஜா ரோட்டில் க.நா.சு. வீட்டுக்கு இரண்டு மாடி ஏறி வருவார்’ என்ற ஒரு செய்தி தான் எவ்வளவு விஷயங்களை மேலெழுப்புகிறது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.