Share

Jul 2, 2019

அப்பா வாசித்த வாத்தியம்


முப்பது வருடங்களுக்கு முன் புதுவையில் கி.ராஜநாராயணன் என்னிடம் சொன்ன ஒரு விஷயம் இன்று காலை அடி மனதில் இருந்து மேலெலும்பி வந்தது.
நினைவின் ஞாபக அடுக்கில் இருந்து அவ்வப்போது இப்படித்தான் ஏதோதோ எட்டிப்பார்க்கும்.

கி.ராவின் சினேகிதர் ஒருவர். வங்கியில் நிர்வாகியாக இருந்தார் என்று சொன்னதாக ஞாபகம்.
வங்கி நிர்வாகியின் தகப்பனார் இறந்த போது நடந்த சம்பவம்.
பூத உடலுக்கு பலரும் வந்து இறுதி மரியாதை செய்து கொண்டிருந்த நேரம். இறந்தவர் சங்கீத ஞானம் மிக்கவர் என்பதோடு ஒரு வயலினிஸ்ட்.
இறந்தவரின் அபிமான தாரம் அழுது கொண்டே வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.
அபிமான தாரமாயிருப்பவர் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் வெறுப்பையும், கசப்பையும் பெறுபவராகவே இருக்க வேண்டியிருக்கும்.
அந்த பெண் கதறல் “அய்யோ, என்ன விட்டுட்டு போயிட்டீங்களே”
அப்போது தகப்பனை இழந்த கவலையில் இருந்த மகனுக்கு கோபமும் துவேசமும் பெருகியிருக்கிறது.
விக்கித்த நிலையில் கணவரின் பிணத்தருகே இருந்த தன் தாயிடம் மகன் ஆவேசமாக புலம்பியிருக்கிறார். “ இங்க பாரும்மா, அப்பா செத்தப்பிறகும் இந்த பொம்பள நம்மள கேவலப்படுத்த வந்துட்டா பாரும்மா”
அந்த விதவைத்தாய் தன் கணவனின் அபிமான தாரம் பற்றி உடனே தீர்க்கமாக மகனிடம் சொல்லியிருக்கிறார்.
“ அப்பா வாசிக்கிற வயலின் மேல் உனக்கு ரொம்ப பக்தியும், மரியாதையும் இருக்கில்ல. அந்த வயலின் ரொம்ப பவித்திரமானது தான. அந்த வயலின் போல தான் இவள். உன் அப்பா வாசித்த வாத்யம் போல் தான் இவளும். உனக்கு சித்தி. இன்னொரு தாய் தான். அப்பாவின் வயலினுக்கு கொடுக்கிற அதே மரியாதய நீ அப்பாவின் பிரிய சினேகிதிக்கும் கொடுக்க வேண்டும்.”
……..
அப்பாவின் ஆசை நாயகி பற்றி “ என் தாயி தங்காயி “ என்று கவிஞர் மகுடேசுவரன் கவிதை 

‘என் முகச் சாயலில் இறந்த என் தந்தையின் ஆசை முகத்தைக் கண்டவள் போல கண்வடிய நிற்பாள் என் தாயி தங்காயி’

யாரோ ஒரு இஸ்லாமியக் கவி பாடினாள் ‘தேவடியாள் என் தாயாக வேண்டும். நான் தேவடியாள் வீட்டு நாயாக வேண்டும்’

God invented concubinage, Satan marriage.
- Francis Picabia
............

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.