Share

Jul 30, 2019

மணிக்கொடியில் ஒரு முஸ்லிம் எழுத்தாளர் ‘ம ஆலி சாஹிப்’


வரப்பு குறும்பூ பற்றி தி.ஜா அடிக்கடி கவனப்படுத்துவார்.

சிறுத்து,மலர்ந்து கிடக்கிற நீல, வெள்ளை மற்றும் மஞ்சள் என்று விதவிதமான பூக்கள். அவை என்ன நேர்த்தியாக, ஒரு ஒழுங்குடன் அமைந்திருக்கின்றன. அவற்றை யாரும் கவனிப்பதில்லை. பெண்கள் தலைக்கு வைத்துக்கொள்வதில்லை. பூஜையிலும் அவை இடம் பெறுவதில்லை. யாரையும் நின்று பார்க்க வைக்காத, யார் கண்ணையுமே உறுத்தாத இந்த குறும்பூக்களின் சௌந்தர்யம்.
ம ஆலி சாஹிப் என்ற எழுத்தாளர் பற்றி கேள்விப்பட்டிருக்க முடியுமா? ஒரு முஸ்லிம். புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, மௌனி, சி.சு.செல்லப்பா, ந,சிதம்பர சுப்ரமண்யம், கி.ராமச்சந்திரன், சிட்டியெல்லாம் எழுதிய மணிக்கொடியில் கூட ம ஆலி சாஹிப் ஒரு கதை எழுதியுள்ளாராம். அசோகமித்திரன் இவரைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அசோகமித்திரன் தன் எட்டு, ஒன்பது வயதில் ஆனந்த விகடனில் இவர் கதையொன்றை படித்திருக்கிறார். அவரை மிகவும் சங்கடப்படுத்திய கதை.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி நோயாளியாக படுக்கையில் இருக்கும் தன் தகப்பனை ஒரு சிறுமி பொறுப்பாக கவனித்துக்கொள்கிறாள். வேளாவேளைக்கு உணவு கொடுத்து அன்போடு பாதுகாக்கிறாள். அந்த வீட்டில் அந்த குடிகார நோயாளி தகப்பனும் அந்த மகளும் தான் இருக்கிறார்கள். அவன் முற்றிய வியாதியால் படுக்கையிலேயே இறந்து விடுகிறான். பாவம் பிணம் எனத் தெரியாமல் அந்த குழந்தை அதற்கு உணவளிக்க முயற்சி செய்கிறாள். தகப்பனும் சிறுமியும் முஸ்லிம். கதையை எழுதியவர் கூட முஸ்லிம். ம ஆலி சாஹிப் தான் அவர்.
ஜெமினி ஸ்டுடியோவில் பின்னால் இவர் கதை இலாகாவில் வேலை பார்த்திருக்கிறார். அங்கே, வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே அசோகமித்திரன் இந்த ம ஆலி சாஹிப்பை சந்திக்க வாய்த்திருக்கிறது.
மணிக்கொடி கி.ராமச்சந்திரனும் கூட ஜெமினி கதை இலாகாவில் வேலை பார்த்தவர் தானே.

அசோகமித்திரன் கதைகளில் வருகிற கோஹினூர் கட்டடம் மறக்கவே முடியாதது. இவருடைய மேஜையிருந்த அதே கட்டடத்தில் தான் அந்த முஸ்லிம் எழுத்தாளருக்கும் மேஜை ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் நான்கைந்து நாட்கள் ஜெமினி வாசன் தன் கதை இலாகாவினருடன் கலந்து உரையாடுவார்.ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட ஒரு அறை அது. கதை இலாகாவில் இருந்த ம ஆலி சாஹிப் உட்பட எல்லோரும் உரத்து பேசுவார்கள். வெற்றிலை பாக்கு, புகையிலை போடுவார்கள். டிபன் சாப்பிடுவார்கள். நண்பர்கள் விவாதம் நடத்துவது போல தோற்றம் தர இருப்பார்கள். ஜெமினி ஸ்டுடியோ சிக்கன நடவடிக்கையின் போது கதை இலாகா கலைந்து போகும்படியாயிருந்திருக்கிறது.
மாதச்சம்பளம் இனி இல்லாமல்  என்ன செய்ய முடியும், எங்க போவேன், என்ன செய்வேன் என்ற கவலையோடு     ம ஆலி சாஹிப் தன் மேஜையை காலி செய்யும்போது அசோகமித்திரன் அங்கே இருந்திருக்கிறார்.
வெளியே போன பின்னாலும் அந்த மணிக்கொடி எழுத்தாளர் எந்த வேலையிலும் பொருந்தக்கூடியவராய் இல்லையே என்ற துயரம் அசோகமித்திரனை ஆக்கிரமித்திருக்கிறது.
பொதுவாகவே ஜெமினி ஸ்டுடியோவில் சில வருடங்கள் யார் வேலை பார்த்தாலும் வெளி இடங்களில் வேலை பார்க்க தகுதியில்லாத அளவுக்கு அந்த நிறுவனம் அவர்களை மாற்றி விடும் என்று ஒரு சூழல் இருந்திருக்கிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.