Share

Jul 12, 2019

பெரியப்பாவும் தண்டவாளமும்


”உங்க பையன் தண்டவாளத்தில தல வச்சி படுத்திருக்கான்.”
என்ற பதற்றமான வார்த்தைகளுக்கு பதிலாக
வி.கே.ராமசாமி ஏதோ ஒரு படத்தில் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் சர்வசாதாரணாக பதில் சொல்வார். ”தலவாணி ஒன்னு வச்சுக்கிட்டு படுக்கச் சொல்லு.”


1940களில்
செய்துங்க நல்லூர் வீட்டுக்கு அருகிலேயே ரயில்வே ஸ்டேஷன். வீட்டின் எதிர் புறம் கொஞ்ச நடை தூரத்தில், எரனூறு அடியில் திருச்செந்தூர் போகிற ரெயில் பாதை.
என் பெரியப்பா பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம். துறுதுறுப்பாக இருப்பார். கடைசி வரை அந்த துறுதுறுப்பும் சுறுசுறுப்பும் அவரிடம் இருந்தது. (அப்பா, பெரியப்பா இருவரும் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸில் படித்தவர்கள். இருவரும் பின்னால் கஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் அதிகாரிகள்.)
டவுசர் போட்ட பையனாய் பெரியப்பா எங்க ஆச்சியை ரொம்ப பயமுறுத்துவாராம். கோபம் வந்து விட்டால் உடனே ஓடிப்போய் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து விடுவார். ஆச்சி என்ன வேலையில் இருந்தாலும் அப்படியே போட்டு விட்டு பதறிக்கொண்டு ஓடிப்போய் “ஏலே மாசி, சொன்னா கேளுலே, வேணாம்லே, எந்திலே, ரயில் வர்ற நேரம்ல. ஓம் மேல ஏறிரும். மாசி எந்தி.. எந்தில..அய்யோ..ஏம்ல இப்படி எசளி பண்ணுத.. என் கண்ணுல..எந்தில..” என்று மன்றாடி, கெஞ்சி கூத்தாடி தண்டவாளத்தில் இருந்து சிரமப்பட்டு தூக்கி சமாதானப்படுத்தி இழுத்துக்கொண்டு ”இனிமெ இப்படி செய்யாதலே” என்று புலம்பிக்கொண்டே வீட்டுக்கு அழைத்து வருவாராம்.
ஒவ்வொரு தடவையும் பெரியப்பா இப்படி கோவிக்கும் போதெல்லாம் வேதாளம் முருங்க மரம் ஏறிய கதயா, தலைய இரு பக்கமும் ஆட்டிக்கொண்டே உதட்ட பிதுக்கிக்கொண்டு ஓடிப்போய் தண்டவாளத்தில் படுக்க, ஆச்சி பதறிக்கொண்டு நான் என்ன பண்ணுவேன், எனக்கு என்னன்னோ வருதே, இவன பெத்த வயித்துல பெரண்டய அள்ளி வச்சி கட்ட..” என்று பின்னாலேயே போய் சமாதானப்படுத்தி..என் அப்பாவும் அத்தையும் கூட அம்மை கூட ஓடி, ’அண்ணே, எந்திண்ணே’ என்று அழுவார்களாம்.
பெரிய பெரியப்பா செல்லத்துரை (இவர் பெயர் தான் எனக்கு. தொர) மட்டும் முகத்தில் சலனமில்லாமல் திண்ணையில் நின்று கொண்டிருப்பார். (ரெண்டு பெரியப்பாவுக்கும் ஒரு வயது தான் வித்தியாசம். ஒரே வகுப்பில் தான் பள்ளியிறுதி வரை படித்தார்கள். பெரிய பெரியப்பா பின்னாளில் மாநில அரசு அதிகாரியாக இருக்கும்போது திருமணமாகும் முன்னரே விக்கிரம சிங்கபுரத்தில் இருபத்தியொரு வயசில் இறந்து போனார். சித்தப்பா ஒருவர் எட்டு வயசில் பாலகனாக இறந்து போனார்.)
தாத்தா ராஜநாயஹம் பிள்ளை   ஒரு நாள் பெரியப்பா மீண்டும் தண்டவாளத்த பாத்து ஓடினப்ப, ஆச்சியிடம் ” ஏட்டி, நீ தான் அவன செல்லங்கொடுத்து இப்படி கெட்டு குட்டிச்சுவராக்கற.. அவன் தண்டவாளத்தில கெடக்கட்டும். கொற மாயம் பண்ணுதான்.சொன்னா கேளு.. போகாத.. அவன் ரயில் வர்றத பாத்ததும் தானா எந்திரிச்சி வருவாம் பாரு” என்று சமையல் கட்டிலேயே நிற்கச்சொல்லி விட்டார். ஆச்சி பரிதவிப்பு நீங்கவில்லை. தாத்தா எங்க ஆச்சி கைய கெட்டியா பிடிச்சிக்கிட்டாராம். ரயில் கூவுற சத்தம் கேட்டுருக்கு. “கைய விடும்ய்யா..என் பிள்ள..என் பிள்ள” 
ஆச்சி தவித்திருக்கிறாள்.
தண்டவாளத்தில் படுத்திருந்த பெரியப்பா தலய தூக்கி, தூக்கி வீட்ட பாத்து ’அம்மய இன்னும் காணுமே’ என்று தவித்திருக்கிறார். செய்துங்க நல்லூரில் ரயில் வந்து விட்ட சத்தம் கேட்டிருக்கு. இன்னும் அஞ்சே நிமிசத்தில வண்டிய எடுத்துடுவான். பெரியப்பா தண்டவாளத்தில் தலய வக்க, தலய தூக்கி பாக்க, தலய வக்க, தலய தூக்கி பாக்க…

ரெயில் திரும்ப கூவிடுச்சி..ஸ்டேஷனில் இருந்து ரெண்டே நிமிஷத்தில் இந்த பகுதிக்கு வந்துடும்.

பெரியப்பா தலய தூக்கி கிளம்பி விட்ட ரயில பாத்தார். தண்டவாளத்தில இருந்து எழுந்தார். தலய ஆட்டிக்கொண்டே, கோபம் குறையாமல் உதட்ட பிதுக்கிக்கொண்டே தான் வீடு நோக்கி வந்திருக்கிறார்.
நடுவழியில வரும்போதெ திருச்செந்தூர் ரயில் இவரை கிண்டல் செய்வது போல இன்னொரு முறை கூவியதாம்.
பெரியப்பா ரயிலை திரும்பிப்பார்த்தும் உதட்டை பிதுக்கி ’போ’ என்று தலையை ஆட்டி விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

'தாங்குவார் கோடி இருந்தா தளர்ச்சி கேடு ரொம்ப உண்டு.'







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.