Share

May 4, 2019

குதம் தான் கெட்டொழிந்ததே அம்மா


வார்னிஷ் குடித்து 20 பேர் சாவு, வார்னிஷ் குடித்து 30 பேர் சாவு, வார்னிஷ் குடித்து 15 பேருக்கு கண் பார்வை பாதிப்பு என்றெல்லாம் பத்திரிக்கையில் செய்தி வந்து கொண்டிருந்த காலங்களில்
ஆரப்பாளையம் வைகைக்கரை பயிர்க்குழியில் ரொம்ப சர்வ சாதாரணமாக ’கலக்கு முட்டி’ அடிக்கிற வேலை நடந்து கொண்டிருந்தது.
கலக்கு முட்டி என்பது வார்னிஷ் தான். வாத்து கழுத்து போல பாட்டிலின் கழுத்து என்பதால் ’வாத்து கழுத்து’ என்றும் அறியப்படும். கொன்ன வாய் ராசு தான் அப்ப டீலர்.
வார்னிஷ் கார்க் திறந்து ஒரு சட்டியில் ஊற்றப்படும். தண்ணீர் கலக்கப்படும். அரக்கு மாதிரி சட்டி ஓரத்தில் ஒதுங்கும். சட்டியை ஆட்டி ஆட்டி அலசுவது போல செய்ய வேண்டும். நிறைய அரக்கு வரும். அதை கையால் வெளியே எடுத்துப் போட வேண்டும். நன்றாக அலசிய பின் துணியால் அதை வடி கட்டி இன்னொரு சட்டியில் ஊற்றி அதன் பின் எலுமிச்சை பழம் ஒன்றை அதில் பிழிந்து விட்டு ஆட்டு மூக்கனும், தொல்லையும், மண்ட மூக்கனும், குருவி மண்டையனும், மொட்டயனும் டம்ளரில் ஊற்றி குடிப்பார்கள்.
ரிக்ஷாக்காரன் நெட்ட ஆலமரத்தான் ஆரப்பாளயம் பார்க்குக்குள் நுழைந்து தனித்தமிழ் முயற்சியுடன், தாப்பில் இருந்தவர்களைப்பார்த்து செய்தி சொன்னான் “ நம்மையெல்லாம் இன்பத்தில் ஆழ்த்தி, இமயத்தின் உச்சிக்கே கொண்டு சென்ற ’கொன்ன வா’ ராசுவை நாய்த்தாழங்கெ ’கொண்டுக்கு’ போய் விட்டார்கள். கையேத்தி கட்டி ’கொண்டுக்கு’ போய்விட்டார்கள்”
நாய்த்தாழர்கள் என்றால் போலீஸ்காரர்கள்.
போலீஸ் ரெய்ட் பண்ணி கொன்ன வா ராசுவை அடித்து இழுத்துக்கொண்டு போய் விட்டார்கள் என்ற செய்தி கேட்டு கலங்காத நெஞ்சமும் உண்டோ?
இப்படி தான் கலக்கு முட்டி டிமாண்டுனால மற்ற போதை நாடி மனம் திசை திரும்பும்.
பழரசம் என அறியப்பட்ட ’ஈத்தரை’ சில இடங்களில் விற்பார்கள். அதுவும் நல்ல போதைக்கு தான். பழரசம் என்பது அதனை குறிக்கும் கௌரவமான பெயர் என்றாலும் ஆரோக்கியமானதல்ல. ஈத்தரை சரியான ஈத்தரை தான். திட்டுவதற்கே கூட ’இவன் சரியான ஈத்தரை’ என்றால் ரொம்ப மட்டமானவன் என்று அர்த்தம்.
ஈத்தரை – ஈக்கள் மொய்க்கும் அசுத்தமான தரை.
மதுரை டவுன் சுண்ணாம்புக்கார தெருவில் ஜிஞ்சர் கிடைக்கும். மீனாட்சியம்மன் வடக்கு கோபுரத்தை ஒட்டி ஒரு மெடிக்கல் ஷாப்பில் அப்ப ரகசிய விற்பனையில் ஜிஞ்சர் உண்டு. ஜிஞ்சரில் தண்ணி ஊத்தி குடிக்குறப்ப ஒரு ’அவிச்ச முட்ட’ சாப்பிட ரெடியா இருக்கணும். குடிச்சவுன்ன முட்டையை வாயில போட்டு சாப்பிடனும். இல்லனா தள்ளாடிடும். போத ஆள கவுத்துடும்.
குதிர வண்டி ஸ்டாண்ட் ஒட்டி போஸ்கா தண்ணி கிடைக்கும். போஸ்கா தண்ணி குதிரைக்கு கொடுப்பது. இது ரொம்ப சீப்.
போஸ்கா தண்ணி போத கொஞ்சம் சிக்கலானது. கவனமாயிருக்கணும்.
எல்லாம் எக்கனாமிக்கல் விஷயம் தான். பொருளாதார சிக்கல். சாராயம் காஸ்ட்லி. ஆனா இதெல்லாம் போத அதிகம். காசு கம்மி.
குருவி மண்டயன் ரெண்டு நாளா தாப்புக்கு ஆப்சண்ட். ஓந்தி தள்ளி ரொம்ப அசதியா வந்தான்.
என்னடா? ஒடம்பு சரியில்லயா?
குருவி மண்டையன் கவிதையாக பதில் தந்தான்.
“கஞ்சா, கலக்கு முட்டி, ஜிஞ்சர், ஈத்தரை, போஸ்கா தண்ணி போன்ற குற்றப்பொருட்களை உட்கொண்டதால் குதம் தான் கெட்டொழிந்ததே அம்மா”
சோகமான கவிதையென்றால் கவிதை வரி முடிவில் ஒரு அம்மாவை கட்டாயம் சேர்க்க வேண்டும்ப்பா. குருவி மண்டையன் வலியுறுத்தல். கவிதையை முடிக்கும்போது ’அம்மா’ என்பதை மிகுந்த உருக்கமான பாவத்துடன் சொல்வான்.
’குதம் கெட்டொழிந்ததே’ பொழிப்புரை – வயித்தால
குண்டி அவுட் ஆஃப் ஆர்டர்.
சும்மா பீச்சாங்குழல் மாதிரி ரெண்டு நாளா வயித்தால பீச்சிக்கிட்டு அடிக்குது. நிக்கவே மாட்டேங்குது. டிசண்ட்ரியா, டயோரியாவான்னு டாக்டராலயே டயக்னோஸ் முடியலயாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.