Share

Jan 24, 2013

கலை ஞானி உன்றன் அருமை அறிகிலார்



கமல் ஹாசன் என்ற கலைஞானியை, பேரறிவாளனை முறித்துப்போட்டுவிடும் முயற்சி தீவிரமடைந்து விட்டது. 

நினைவு தெரிந்த நாள் முதல் கமல் படங்களைப் பார்க்கும்போது கிடைக்கும் திருப்தி வேறு படங்களில் கிடைத்ததேயில்லை.
ரஜினியின் படங்கள் விரும்பிப்பார்த்ததேயில்லை. என் மகன்கள் சிறுவர்களாயிருக்கும்போது ரஜினி படத்திற்கு அழைத்துப் போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போதெல்லாம் தியேட்டரில் அவர்களை உட்கார வைத்து விட்டு இருப்பு கொள்ளாமல் நடமாடிக்கொண்டு இருப்பேன். அப்படி நான் கடமையே என்று என் மகன்களுக்காக தியேட்டருக்குப் போயிருந்த போது ஒரு படம் பார்க்கும்போது அசந்து போய் ஒன்றிப் போய் விட்டேன். அந்தப் படம் ’பாட்ஷா’!

மோகன் லாலின் மணிச்சித்திர தாழ் பார்த்து விட்டதால் சந்திரமுகி பார்க்கவில்லை.
சந்திரமுகி துவங்கி எந்திரன் வரை ஒரு ரஜினி படமும் நான் பார்த்ததேயில்லை.
விஜய்காந்த் படங்கள் பார்த்ததேயில்லை. கேப்டன் பிரபாகரன், ரமணா கூட பார்த்ததில்லை.
ரஜினியை பிடிக்காது என்றில்லை. ரஜினி படங்கள் முழுமையாக பார்க்க எனக்கு பொறுமையில்லை. டி.வியில் தான் ஏதேனும் சேனலில் ரஜினி படக்காட்சிகள் பார்க்கக்கிடைக்கின்றதே.
ஆனால் கமல் படங்கள் கடந்த 30 வருடங்களில் பெரும்பாலும் எந்தப்படத்தையும் இரண்டாவது முறையாக பார்க்காமல் விட்டதேயில்லை!
சாமானியர்களுக்கு இருக்கிற சில சந்தோஷங்களுக்கும் இப்போது ஆப்பு விழுகிறது.
ஒரு movie connoisseur  ஆகிய எனக்கே மனம் நொறுங்கிப்போய் விட்டதென்றால் கமல் ஹாசன் என்ற அந்த மகத்தான, சீரிய கலைஞன் மனம் என்ன பாடு படும்.

கமல் எந்தப் படம் எடுத்தாலும் ஏதேனும் ஒரு பிரிவினர் கோபப் படுவது தொடர்கதையாகி இப்போது கமல் என்ற ஆலமரத்தை வேரோடு பிடுங்கிப் போட்டு விடும் வக்கிரம் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

திரையுலக வாழ்க்கையில் ஏதோ ஆரம்ப காலத்தில் தான் ஒரு நடிகனுக்கு சினிமா சான்ஸ் சரியாக வாய்க்காத நேரங்களில் அவமானங்களை, தடைகளை சந்திக்க நேர்ந்திருக்கும். ஆனால் இப்படி ஒரு கலைஞன் விசுவரூபம் எடுத்த பின்னும் கமலுக்கு நேரும் அச்சுறுத்தல் மிகவும் அபத்தமானது. 
ஔரங்கசீப்களால் ஒரு பெருங்கலைஞனின் திரைக்காவிய முயற்சி தீர்ப்பிடப்படும் சீரழிவு.
கார்ட்டூன் துவங்கி சினிமா வரை கலாச்சாரக்காவலர்களின் வன்முறை தலை விரித்தாடுகிறதே !
இது பொதுப்பிரச்சினை கிடையாது என்று சொன்னால், கமல் என்ற கலைஞனுக்கும் ராஜநாயஹம் என்ற movie connoisseur க்குமான  தனிப்பட்ட சிக்கல் என்று கலாச்சாரத்தீவிரவாதிகள் மதிப்பிடுவார்களேயானால் நான் எப்போதும் சொல்வதைத் தான் இப்போதும் சொல்ல வேண்டியிருக்கிறது- We both have an aweful time to be alive!

ஜாதி, மதம், அரசியல் கொள்கைகள், குழுக்கள் இன்று கலையின் விரிந்த சுதந்திர சாதனைகளை கொலை வெறியுடன் அணுகும் துர்ப்பாக்கியம்.
எந்த யோக்யதையும் இல்லாத கலாச்சார தீவிரவாத அமைப்புகள் இன்று சினிமா டிஸ்கசனில் துவங்கி வசனம், காட்சியமைப்பு என்று ஒரு முழுப்படத்திலும் மூக்கை நுழைக்க உரிமை கோரும் அருவருப்பான நிலைக்கு உண்மைக்கலைஞர்களின் நிலை பரிதாபம்.

’கமல் ஹாசன்  கடவுள் நம்பிக்கையில்லாதவர்’ என்பது ஒன்று போதுமே இவர்கள் ஹராம் என்று முகத்தை சுளிப்பதற்கு. எனில் இந்த மனச்சாய்வுக்கு ‘அவர் சைத்தானின் ஆள்’ எனும் பிம்பம் ஒன்று போதுமே ’கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்’ என்று வெறுத்து புறக்கணிப்பதற்கு. பெண்கள் சினிமா பார்ப்பதே ஹராம் என்று ஊர்க்கட்டுப்பாடு விதிக்கிறவர்கள் தானே!


கமல் ஹாசன் என்ற கலைஞானிக்கு எதிரான ’தியேட்டர் உரிமையாளர், வினியோகஸ்தர், தயாரிப்பாளர் கூட்டமைப்பு’ அபத்தத்தையே சகிக்க முடியவில்லை எனும்போது கலாச்சாரக் காவல் தீவிரவாதத்தை எங்கனம் தாங்கிக்கொள்ள முடியும். 
’என் கலையுலக அண்ணா’ என்று கௌரவப்படுத்திய ரஜினி இந்த இக்கட்டான நேரத்தில் கமலுக்கு தன் தார்மீக ஆதரவை காட்ட உரத்து குரலெழுப்பியிருக்க வேண்டும்.

யாரை இவர்கள் வெறுக்கிறார்கள்? இவர்களின் மதிப்பீடுகளைத் தகர்ப்பவனை.ஆனால் அவனே படைப்பவன். மகா கலைஞன்!

.... 


http://rprajanayahem.blogspot.in/2012/05/we-have-aweful-time-to-be-alive.html 

http://rprajanayahem.blogspot.in/2009/01/blog-post_28.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_26.html


http://rprajanayahem.blogspot.in/2009/02/my-concern-is-always-with-not-so.html


http://rprajanayahem.blogspot.in/2008/07/blog-post_29.html


http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_5.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_8178.html

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_2678.html



Jan 22, 2013

அரைத்த மாவு



சினிமாவை ப்பொறுத்தவரை சில எவர் கிரீன் சப்ஜெக்ட் உண்டு.
அண்ணன் தங்கை பாசம். சிவாஜியே இதில் பாசமலர், பச்சை விளக்கு, அன்புக்கரங்கள் , தங்கைக்காக என்று பலவாறு சலிக்காமல் நடித்தார்.
எம்.ஜி.ஆர் துவங்கி பிற கதாநாயகர்களின் பல குடும்ப படங்களில் தங்கை ட்ராக் ஒன்று  கலந்தே தான் இருக்கும்.
பாரதி ராஜா வின் ’கிழக்குச் சீமையிலே ’ தாண்டி பாக்யராஜ் கூட விஜய்காந்தை போட்டு ’சொக்கத்தங்கம்’- அண்ணன் தங்கை பாசப்படம் இயக்கியிருக்கிறார்.

இன்னொரு எவர் கிரீன் சப்ஜெக்ட். ’அடங்காப்பிடாரி பெண்ணை அடக்குகிற கதாநாயகன்.’ மாமியாரோ, கதாநாயகியோ ரொம்ப திமிராயிருப்பாள். இந்தப்படங்களுக்கு பெண்கள் கூட்டம் மோதி அலைபாயும். வசூல் அள்ளும்.

சிவாஜியின் அறிவாளி, எம்.ஜி.ஆரின் பெரிய இடத்துப்பெண் இந்த வகை.
 பட்டிக்காடா பட்டணமா, கல்யாணமாம் கல்யாணம், சகலகலா வல்லவன், மன்னன் என்று கதாநாயகியின் திமிர் ஒடுக்கும் படங்கள்.

மாமியார் திமிர் ஒடுக்கும் படங்களில் பணமா பாசமா, பூவா தலையா, மாப்பிள்ளை போன்ற படங்களுடன் மீண்டும் பட்டிக்காடா பட்டணமாவையும் சேர்க்க வேண்டும்.
அடங்காப் பிடாரி வில்லி பெண்களை ஒடுக்கி ஜெயித்தாலும்
( படையப்பா ) ரசிகப்பெருமக்கள் பெரும் ஆதரவு தரும் உத்தரவாதம் உண்டு.

இந்த Triangle subject ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் துவங்கி இளமை ஊஞ்சலாடுகிறது வரை. ஒரு பெண், இரு ஆண்கள்.

இதே ட்ரையாங்கிளில் ஜெமினி கணேசன் என்றால் இரு கதா நாயகிகள் !


ஸ்ரீதரின் கல்யாண பரிசு, அவளுக்கென்று ஓர் மனம்.

கே.பாலசந்தரின் தாமரை நெஞ்சம், இருகோடுகள், வெள்ளி விழா.
  
திரைப்படங்களில் ஒரே பெண்ணை இரண்டு பேர் காதலிப்பது என்பது எப்போதும் கொஞ்சம் சீரியஸான விஷயம். ஏனென்றால் அது Classic situation என்பதாக எல்லோரும் நம்புவார்கள்.  ஆனால் அதுவே மூன்று பேர் ஒரே பெண்ணுக்கு நூல் விடுவது என்றால் கேலிக்கூத்தாகி விடுகிறது !



என் இளைய மகன் அஷ்வத் யு.கே.ஜி படிக்கும்போது அப்பாஸும் வினித்தும் தபுவை காதலிக்கிற ’காதல் தேசம்’ படம் பார்க்கும்போது “கதை சரியில்ல... ஆளுக்கு ஒரு அக்காள லவ் பண்ண வேண்டியது தான... ஏன் இப்படி ஒரே அக்காவ ரெண்டு பேரு லவ் பண்றாய்ங்க.....?” என்று குழம்பிப் போய் என்னிடம் கேட்டான்.


உத்தரவின்றி உள்ளே வா (1971) ஸ்ரீதரின் சித்ராலயா தயாரிப்பில் என்.சி.சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளி வந்தது. வசனம் கோபு.
ஸ்ரீதரிடமிருந்து பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் போன பின் என்.சி.சக்ரவர்த்தி தான் அசோசியேட் டைரக்டர். என்.சி.சக்ரவர்த்தி இயக்குனரான பின்னும் ஸ்ரீதரோடேயே தான் இருந்தவர். ஸ்ரீதர் எப்போதும் ’டே சக்கி டே சக்கி ‘ என்று சொல்லிக்கொண்டே தான் இயக்குவார்.இயங்குவார்.

படத்தில் ரவிச்சந்திரன், நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி , மாலி நால்வருமே கதாநாயகி ஜானகி என்ற பெயரில் வரும் நடிகை காஞ்சனாவை சீரியஸாக காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
”டேய் ஜானகியப் பத்தி என்னடா நினைக்கிறீங்க” என்ற ரவிச்சந்திரனின் கேள்விக்கு  “ ரொம்ப நினைக்கிறோம். ராத்திரி ஒரு பய தூங்கலே” என்ற  நாகேஷின் பதிலுக்கு தியேட்டரே அதிரும்.

’உத்தரவின்றி உள்ளே வா’ பாடல் காட்சியில் ரவிச்சந்திரன், நாகேஷ் வெண்ணிற ஆடை மூர்த்தி மூவருக்கும் காஞ்சனாவோடு டூயட் பாடுவதாக கனவு. மாலி அந்த பாடலிலேயே ’எனக்கு வேண்டாம்’ என்று தலையை ஆட்டி ஒதுங்கி விடுவார். 
( மாலி தன் சித்தப்பா சாயலில் இருப்பதாக காஞ்சனா சொல்லி விடுவார்!) 

காஞ்சனா மீதான நாகேஷின் மையல், தவிப்பு சொல்லி முடியாது. விரட்டி விரட்டி சைட் அடிப்பார். ஒரு வழியாக ரவிச்சந்திரன் தான் காஞ்சனாவை தட்டிக்கொண்டு போய்விடுவார். அதன் பின் நாகேஷ் பாதி மனசோடு வேறு வழியே இல்லாமல் ரமா பிரபாவோடு எரிச்சலாக செட்டிலாவார். வெண்ணிற ஆடை மூர்த்தி விரக்தியோடு சச்சுவோடு சேர்வார்.

சி.வி.ராஜேந்திரன் இயக்கிய கலாட்டா கல்யாணத்தில் ஒரு சுவையான காட்சி. சிவாஜியின் காதலி ஜெயலலிதாவைப் பார்த்தவுடன் நாகேஷ் நடிப்பு! தனக்காக சிவாஜி பார்த்திருக்கிற பெண் தான் என நினைத்து நாகேஷ் கொஞ்ச நேரம் செய்யும் சேட்டை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.

’இன்று போய் நாளை வா’ படம் சித்ராலயாவின் ’உத்தரவின்றி உள்ளே வா’ வெளி வந்து சரியாக பத்தாண்டுக்குப்பின் வெளி வந்தது.
அப்போது ஸ்ரீதரோ, என்.சி.சக்ரவர்த்தியோ,கோபுவோ கொந்தளித்து எங்க படம் ’உத்தரவின்றி உள்ளே வா’ படத்தின் காப்பி இந்த ’இன்று போய் நாளை வா’ என்று கோபப்பட்டு செட்டில்மென்ட் வேண்டும் என்று கேட்கவில்லை.

பின்னால் ’முந்தானை முடிச்சு’ படம் வெளி வந்த போது கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பதறி ரொம்ப கோபப்பட்டு “ என்னுடைய ’கற்பகம்’, ’சித்தி’ படங்களை முந்தானை முடிச்சில் பாக்யராஜ் காப்பியடித்து விட்டார்’’ என்று பெருங்கூப்பாடு போட்டார்.



”கண்ணா லட்டு தின்ன ஆசையா’’ பாக்யராஜின் படம் வெளி வந்து முப்பத்திரெண்டு வருடத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.
இப்படி ’இன்று போய் நாளை வா’ வை ஈயடிச்சான் காப்பியடித்து
’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் எடுத்திருக்க வேண்டாமே!