Share

Sep 2, 2008

ஆகஸ்ட் 21

சென்ற ஆகஸ்ட் 21 தேதி எனக்கு பிறந்த நாள் . பிறந்தது பற்றி பெருமை என்ன இருக்கிறது . ஆனால் இந்த தேதியில் பிறந்ததில் எனக்கு ஒரு பெருமை பிறந்த அன்றே ஏற்பட்டுவிட்டது . "தோழர் ஜீவா "பிறந்த தேதி இது .

இந்த வருடம் க.நா.சு வின் மருமகன் பாரதி மணி க்கு போன் போட்டு என்னை அறிமுகபடுத்திகொண்டு அவருடைய ஆசியை பெற்றேன் . மனிதர்"உயிர்மை"பத்திரிகையில் சும்மா சிக்ஸர் ,பௌண்டரி யாக விளாசு,விளாசு என்று விளாசுகிறார் . என்ன ஒரு அனுபவங்கள் , என்ன ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை .க.நா. சு . உயிரோடிருந்த போது மருமகனுடைய ஆளுமை பற்றிஎதுவும் எழுதவில்லை .சொன்னதாகவும் தெரியவில்லை .

இ.பா வின் "மழை "நாடகத்தில் க.நா.சு. மகளோடு நடிக்கும் போது , மணி காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியும் .

இந்த திருமணத்திற்கு தி. ஜானகி ராமன் பண உதவி செய்தார் என்பதை க.நா.சு தன் "பித்தப்பூ " நாவலில் குறிப்பிட்டுள்ளார் .

பிறந்த நாள் அன்று அசோக மித்திரனுக்கு போன் போட்டேன் .ரிங் போயிற்று . எடுக்கவில்லை . பின் அவரே என்னை அழைத்து தன் ஆசியை சொன்ன போது நெகிழ்ந்து விட்டேன் . அய்யா கி.ரா . விடமும் ஆசி பெற்றேன் . ஆனால் சாரு நிவேதிதா விடம் அன்று தொலை பேசும்போது எனக்கு பிறந்த நாள் என்பதை சொல்ல மறந்தே போனேன் .

பிரமிள் என்னை 1989 மார்ச் 27 ல் சந்திக்க நான் தங்கியிருந்த மயிலாப்பூர் கற்பகம் லாட்ஜ் வந்திருந்த போது என் பிறந்த தேதி ஆகஸ்ட் 21 என அறிந்தவுடன், தேதி,மாதம் வருடம் கூட்டி பார்த்து அதுவும் மூன்று என கண்டு என் பெயரில் தாத்தா பெயரின் முதல் எழுத்தையும் இனிசியலில் அப்பா பெயருடன் சேர்த்து (இப்போது உள்ளபடி) R.P.Rajanayahem இங்ஙனம் 37 ல் அமைத்தார் . இப்படியே பெயரை வைத்து கொள்ளுமாறு மிகவும் மீண்டும் ,மீண்டும் வற்புறுத்தினார் .கிளம்பும் போதும் மீண்டும் ஞாபகப்படுத்தினார் .

"யாருக்கு தான் அவர் பெயர் மாற்றம் செய்யவில்லை? " - எஸ்.ராமகிருஷ்ணன் இப்படி என்னிடம் கேட்டார் . எல்லோருக்கும் தான் மாற்றினார். எத்தனை பேர் அவர் சொன்னபடியே பெயரை வைத்துக்கொண்டுள்ளார்கள் .ஆனால் அவர் சொன்ன படி கேட்டவன் நான் . இன்று வரை அந்த பெயரை பிடிவாதமாக அப்படியே வைத்துகொண்டிருப்பவன் நான் .

இதில் ஒரு வினோதம் தெரியுமா ? எண்கணித நூல் எதிலும் எந்த எண்கணித மேதையும் என் பிறந்த தேதி , மற்றும் தேதி மாதம் வருடம் கூட்டி வரும் எண்ணுக்கும் , பிரமிள் எனக்கு வைத்த நம்பரில் பெயர் வைக்க சிபாரிசு செய்யவில்லை .ஒத்துகொள்ளவே மாட்டார்கள் என்பது உண்மை .

பிரமிள் எனக்கு பெயர் வைக்கிற விஷயத்தில் ஏதோ பெரிய "விஷ பரீட்சை " செய்து பார்த்திருக்கிறார் போலும் .

ஆனால் என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனைகள் ,வீழ்ச்சி ஏற்பட்ட போதெல்லாம் "உங்கள் பெயரை நல்லபடி மாற்றிகொள்ளுங்கள் " என பலரும் பலவாறு வற்புறுத்திய போதும் பிரமிள் வைத்தபடியுள்ள பெயரில் ஒரு எழத்து கூட மாற்ற மறுத்து விட்டேன் .

Sep 1, 2008

கதே தன் இளமை துவங்கி மரணம் வரை எழுதிய நாடகம்

74 வயதிலே கதே ஒரு சிக்கலை எதிர்கொண்டான். ஒரு பெண் .அவளுக்கு 19வயது தான். அவள் மீது சீரியஸாக காதல் வந்து விட்டது . அவளை விரட்டிக்கொண்டு போயும் பிரயோஜனம் இல்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது .
அந்த சோகத்தை தான் The Marienbad Elegy கவிதையாக வடித்தான் .

கதே Faust காவியத்தை 23 வயதில் எழுத ஆரம்பித்து 82 வயதில் இறப்பதற்கு முன் முடித்து விட்டான் . 1832ல் இறந்தான் .இரண்டு பாகங்கள் கொண்ட Faust எழுதி முடிக்க எவ்வளவு காலம்! Faustஒரு ரசவாத நாடகம் . ஜெர்மன் மொழியில் இவன் இதை எழுதினான் . 140 வருடத்திற்கு முனனதாக கிறிஸ்தொபேர் மார்லொவ் ஆங்கிலத்தில் Dr.Faustus எழுதிவிட்டு 29 வயதில் இறந்து போனான் என்பது முரண் நகை .
மார்லோவின் நாடகத்திற்கும் , கதே யின் நாடகத்திற்கும் நிறைய மாறுதல் உண்டு .
கதை நாயகன் Faustus விலக்கப்பட்ட அறிவை தேடுபவன் .மாயாஜாலம்,ரசவாதம் இவற்றில் விற்பன்னன் . மார்லொவ் இவன் கதையை நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் யுத்தமாக வடித்தான் .
முடிவு கதை நாயகனின் வீழ்ச்சி . சாத்தான் Mephistopheles வில்லனாக மார்லோவின் நாடகத்தில் வருவான் . அதே சாத்தான் ஒரு சேவகனாக கதே யின் நாடகத்தில் இருப்பான் .
59 வயதில் கதே தன் நாடகத்தின் முதல் பாகத்தை முடித்து விட்டான் . இதில் மார்கரெட் என்ற மாசற்ற பெண்ணை மயக்கி கதைநாயகன் Faustபின் இழந்து விடுகிறான் .
தத்துவ பிரவாகமாகிய இரண்டாம் பாகத்தில் Faust ட்ராய் நகர ஹெலனை திருமணம் செய்து ஒரு இலட்சிய சமுதாயத்தை உருவாக்குவான் .

கதே யின் நாடகம் மேடை யில் நடிக்க வேண்டிஎல்லாம் எழுதப்படவில்லை . Faustஒரு Closet drama . ஒரு தனிமையான வாசகன் வாசிப்பதற்க்காக . சில சமயம் ஒரு சின்ன கூட்டத்தில் சிறு அறையினுள்ளே சத்தமாக வாசிக்கப்படுவது தான் Closet drama .

ஜெர்மன் இலக்கியத்தில் Faust மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது .
கதே யை மேற்கோள் காட்டாத மேதைகள் குறைவு .
கதே ஒரு Polymath !`கற்ற ஞானி .
இப்போது உலகெங்கும் பலரும் பயன்படுத்திகொண்டிருக்கும் கீழ்க்கண்ட மேற்கோள்கள் கதே யுடையன தான் .

A man can stand anything except a succession of ordinary days.

A useless life is an early death.

Live dangerously and you live right.

There is nothing worse than aggressive stupidity.

மார்லொவ் எழுதிய Dr.Faustusதிரைப்படமாக 1966ல் ரிச்சர்ட் பர்ட்டன் ,எலிசபத் டைலர் நடித்து திரைப்படமாக வந்துள்ளது .
'Was this the face that launched a thousand ships
And burnt the topless towers of Ilium
Oh, Sweet Helen Make me immortal
With a kiss
All is dross that is not Helena '


மேற்கண்ட வசனங்களை ரிச்சர்ட் பர்ட்டன் எலிசபெத் டைலரை பார்த்து பேசம் காட்சி சிலிர்ப்பானது .

கதே பற்றியும் , கதே யின் Faustகூட திரைப்படங்களாக வந்துள்ளன என தெரிகிறது .

1926 ஆண்டில் ஒரு Silent movie யும் 1941இல்All that money can buy கூட கதே எழுதிய Faust.

Dr.Faustus நாவலாகவும் Thomas Mann எழுதி (நான்கு வருடத்தில் எழுதிவிட்டார் ) 1947 ல் வெளிவந்துள்ளது