Share

Aug 2, 2008

அருந்ததியருக்காக இலக்கிய வெளிவட்டம் நடராஜன்

அருந்ததிய இனம் பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் . மற்ற தலித் இனங்களில் ஊடுருவிய கிறித்துவ மதம் இவர்களை அசைக்கவே முடியவில்லை . சொல்லப்போனால் பிராமணர் துவங்கி அனைத்து ஜாதியினரிலும் கிறித்துவ மதம் ஊடுருவி பலரை மதமாற்றம் கடந்த நூற்றாண்டுகளில் செய்திருக்கிறது. அப்படி ஒரு வைராக்கியம் அருந்ததிய மக்களிடம் இருந்திருக்கிறதே . இதைப்பற்றி அறிய வந்தபோது "நிஜமாகவா நிஜமாகவா " - ஆச்சரியமாக இருக்கிறது .

1996 ம் வருடம் ராஜபாளையத்தில் ஜஸ்டிஸ் மோகன் கமிசன் முன் இந்த அருந்ததிய மக்களுக்காக ஆஜர் ஆகி தன்னையே ஒரு அருந்ததிய பிரஜை ஆகவும் அதனால் அவர்களின் பிரதிநிதி எனவும் முன்னின்று இலக்கிய வெளி வட்டம் நடராஜன் அண்ணாச்சி ( ஜனகப்ரியா )பேசினார் - "அய்யா! வணக்கமுங்க .ஊருலே 18 ஜாதி இருந்தா அந்த பதினெட்டிலும் கீழானவங்க நாங்க . நீங்க கீழ்சாதின்னு சொல்றவங்க கூட எங்களுக்கு தண்ணி குடுக்க மாட்டங்க . பள்ளர் பறையர் எல்லாம் எங்களுக்கு எஜமான் தானுங்க .

எல்லோரிடமும் நாங்க அனுபவிக்கிற கொடுமை கொஞ்சநஞ்சமா . பீ அள்ளுறதை நாங்க செய்றோம் . ஊரிலே யாரும் செத்தா நாங்க தான் வெட்டியானா நின்னு எரிக்கிறோம் .எங்க மேல வீச்சம் அடிக்குதன்னா எப்படிங்க .

நாங்க சோப் போட்டு குளிக்கிறது கிடையாதுன்னா ? சோப் குடுங்க வீடு கொடுங்க எங்க பிள்ளைகளை படிக்க வையுங்க " இப்படி ஆரம்பித்து வாங்கு வாங்கு என்று அருந்ததிய இனத்து அவமானங்களையும் , சிறுமை ,வாழ்க்கை போராட்டங்களையும் பிட்டு பிட்டு வைத்த போது நீதிபதி அருகில் இருந்த தாசில்தாரும், சப் - கலக்டர் இருவரும் சில விஷயங்களை ஆட்சேபிக்க முயன்ற போது ஜஸ்டிஸ் மோகன் அவர்களை கடிந்து கொண்டு " அவர்கள் பிரச்சனைகளை பேச விடுங்க "என நடராஜனை தொடர்ந்து பேச அனுமதித்து இருக்கிறார் .

அருந்ததிய இனத்துடன் நெருங்கிப்பழகி அவர்களின் உறவினராகவே ஆகி விட்டவர் நடராஜன் அண்ணாச்சி . சிலவருடம் முன் மாற்கு உடன் பணியாற்றி அருந்ததிய மக்களின் குழந்தை களுக்கு கல்வி கற்பித்த போது அவர்களின் பிரச்சினை அனைத்தையும் அறிய அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால் தன்னையே அருந்ததியர் மக்களில் ஒருவர் ஆக்கி மோகன் கமிசன் முன் ஆஜர் ஆனார் .

Aug 1, 2008

கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன்

பிரஞ்சு கவிஞன் ஆர்தர் ரைம்போ 16 லிருந்து 19 வயது வரை தான் கவிதை எழுதினான் . குழந்தை ஷேக்ஸ்பியர் என்ற பெயர் பெற்றவன் . 37 வயது வாழ்ந்து "கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன் "என்று அடையாளமும் காணப்பட்டவன் .

ஆங்கில கவிஞன் கீட்ஸ் அவன் எழுதிய மொத்த கவிதைகளில் அவன் புகழுக்கு காரணமான கவிதைகளை எல்லாம் ஒரு ஒன்பது மாதத்திற்குள் தான் எழுதினான் . Baby of the poets !26 வயதிற்குள் இவன் வாழ்வே முடிந்துவிட்டது .

இங்கே தமிழில்" ஆடு புழுக்கை போடுவது போல அப்பப்ப மொத்தம் மொத்தமா தொடர்ந்து போடும் "கவிஞர்கள் எப்போ நிறுத்தபோறான்களோ?

பால் பருவத்தில் எழுதுவதாக பூரித்து புளகாங்கிதமடையும் மடையன் எல்லாம்

ரைம்போ , கீட்ஸ் பற்றி எப்போ தான் தெரிந்துகொள்ளபோறான் ?

"நான் இருக்கேனே பல விதமான கற்பனையை அப்படியே மனதில வச்சுகிட்டு

தவிக்கிறேன் யா . அதையெல்லாம் எடுத்து வெளியே விட வேண்டாம் ."

என்று

அல்லாடுறான்களே . சான்சே இல்லை .