Share

Feb 25, 2020

என் அப்பாவும் ஜெமினியும்


ஒரு விஷயம் நான் அதிகமாக எப்போதுமே
கேட்க நேர்ந்திருக்கிறது.
என் பால்ய காலம் தொட்டு.
எத்தனை ஆயிரக்கணக்கான தடவை.
கணக்கே கிடையாது.
என் 'தலைமுறைகள்' ஸ்டேட்டஸில் இப்போது
சாரு நிவேதிதா கமெண்ட் போட்டிருக்கிறார்.
'அப்பா ஜெமினி மாதிரியே  இருக்காங்களே'

நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது
ஒரு பத்தாம்  வகுப்பு படிக்கும் அக்கா
"டேய் உங்கப்பா அச்சு அசல் ஜெமினி கணேசன் மாதிரியே இருக்குறாருடா"
ஒரு நாள் மழை பெய்த போது பள்ளியில் இருந்து அழைத்து போக அப்பா வரக்காணோமேன்னு அழுத போது சொன்னாள் 'கடிதம் எழுதி மழையில போடு. அப்பா வருவார்.' அவளே டிக்டேட் செய்தாள். கடிதத்தை மழையில் வீசினேன்.
அந்த அக்கா என் அப்பாவுக்கு எழுதிய
காதல் கடிதம் அந்த பள்ளியின் மதர் சுப்பீரியர் கைக்கு சிக்கும்படியாகி, ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருந்தவளை உடனே, உடனே ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
மிக பிரபலமான ஒரு குடும்பத்தை சேர்ந்த
பெண் அந்த அக்கா.
I must admit that my father was very promiscuous.
இது பற்றி எங்கள் குடும்ப அந்த கால கிழவிகள் காதாட்டிக்கொண்டே,
என் அம்மாவிடம் சொல்லும் ஆறுதல்
"ஒன் புருஷன் என்ன பண்ணுவான். பாவம். அவுளுங்க வந்து அவன் மேல விழுகிறாளுங்க. சிறுக்கி முண்டைக"
சாயல் வேறு.
சாயல் என்பது ஒருவர் சொல்லும்போது இன்னொருவர் எனக்கு அப்படி தெரியல என்று மறுக்கும்படியாகவே இருக்கும். சம்பந்தப்பட்டவரே மறக்கலாம். 'எனக்கும் அவருக்கும் என்னங்க சாயல்'
உருவ ஒற்றுமை என்பது அப்படியல்ல. ஆச்சரியம் ஏற்படும்.
பிரபலங்களின் உருவ ஒற்றுமை சிலருக்கு அமைந்து விடும்.
ஏழாம் வகுப்பு படிக்கும் போது விபரீதமாக என் அப்பா பற்றி ஒரு பையன் சீரியஸாக "ஜெமினி ஏன் ஒன்ன பாக்க அடிக்கடி ஸ்கூலுக்கு வர்றாரு" வெள்ளந்தியாக கேட்டிருக்கிறான்.
சீனியர் ஸ்டூடண்ட்ஸ் தான் கன்ஃபர்மா சொன்னாங்களாம்.
கல்லூரியில் படிக்கும்போதும்.
என் அப்பா ஜெமினியை விட பத்து வயது இளையவர்.
கஸ்டம்ஸ் அன்ட் சென்ட்ரல் எக்ஸைஸ் ஆஃபிஸர்.
குற்றாலத்தில் அப்பா எண்ணெய் தேய்த்து விட்டு குளிக்க அருவியை நோக்கி சென்ற போது, ஆணும் பெண்ணுமாக ஒரு கூட்டமே "ஜெமினி கணேசன், ஜெமினி கணேசன்" என்று ஓடி வந்திருக்கிறது.
இதே போல விக்ரம சிங்க புரம் அகஸ்தியர் ஃபால்ஸிலும் நடந்திருக்கிறது.
எங்கள் குடும்ப திருமணம் ஒன்றில்
ஜெமினி கணேசன் கலந்து கொண்ட போது பலரும் குழம்பிப் போய் என் அப்பாவிடம் ஆட்டோக்ராப் கேட்டார்கள்.

ஜெமினியே " என்ன மாதிரி இருக்கீங்க" என்றார்.
ஒரு வயதான அம்மணி அப்பாவிடம் வந்து பரவசமாக " நான் டைரக்டர் கே. சோமுவோட தங்கச்சிப்பா, ஒன் படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்பா. " ஜெமினியின் படங்களாக சொல்ல ஆரம்பித்து விட்டார்.
கே. சோமு டவுன் பஸ், சம்பூர்ண ராமாயணம், பட்டினத்தார் படங்களின் இயக்குநர்.
..............
....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.