Share

May 27, 2016

வெள்ளச்சாமியும் மாரியப்பனும்






மதுரை பரமேஸ்வரி தியேட்டருக்குப் பின்னால் இருந்த B-6 போலீஸ் ஸ்டேசனில் அப்போது வெள்ளச்சாமி என்று

ஒரு சப்- இன்ஸ்பெக்டர் இருந்தார்.

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, கரிமேடு, முரட்டம்பத்திரி, அழகரடி, புட்டுத்தோப்பு, கோமஸ் பாளையம், மேலப்பொன்னகரம், அரசரடி, ஆரப்பாளையம் பகுதியில் கேட்டுப்பார்த்தால் அந்தக்காலத்து ஆட்கள் இப்போதும் சொல்வார்கள். சரியான டெர்ரர்!

ரோட்டில் கூட்டமாக நிற்கவே முடியாது. ”வெள்ளச்சாமி ரெய்டுடா! டேய் வெள்ளச்சாமிடா!” சல்லிகள் பதறியடித்துக்கொண்டு ஓடுவார்கள். சல்லிகள் என்று இல்லை காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் எப்போதும் பதறிக்கொண்டே தான் இருப்பார்கள்.
சைக்கிளில் வருவார் வெள்ளச்சாமி. பின்னால் கான்ஸ்டபிள்களும் சைக்கிளில் வருவார்கள்.

அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் நான் நண்பர்களோடு பேசிக்கொண்டு நின்றிருந்தேன். எதிர் பாராமல் மேலப்பொன்னகரம் இரண்டாவது தெருவிலிருந்து ’சள்’ளென்று சைக்கிளில் வெள்ளச்சாமி போலீஸ் புடை சூழ வந்து
விட்டார். ”அப்படியே நில்லுங்கடா டே, ஓடாதே, ஓடுனா வீட்டுக்கு வந்து தூக்குவேன்.”
ஓட அவகாசமே இல்லை.
ஒரு பத்து பேர் சிக்கிக்கொண்டோம்.
என்னைப்பார்த்துத்தான் வெள்ளச்சாமி பேசினார். “ ஏன்டா இப்படி கும்பலா நிக்கிறீங்க?
படிக்கிற வயசில என்னடா சலம்பல். உங்க அக்கா தங்கச்சிங்க தான ரோட்டில போறாங்க.. அவங்களுக்குத் தான கஷ்டம்”
ஒரு சின்ன லெக்சர் கொடுத்தார்.
என்னைப்பார்த்தே எஸ்.ஐ. பேசியதால் நான் தான் மிரண்டு கொண்டே பதில் சொல்ல வேண்டியிருந்தது - “ சாரி சார்.. இனிமே இப்படி நிக்கவே மாட்டோம் சார்”

அவர் மன்னிக்கவில்லை. “ அப்படியே ஸ்டேசனுக்கு மரியாதயா நடங்கடா..” ஏற்கனவே பிடிபட்டு பலியாடாய் வந்து கொண்டிருந்த சிலருடன் நாங்களும் சேர்ந்து நடக்க வேண்டியதாகி விட்டது. சுற்றிலும் ஜனங்கள், கடையில் உள்ளவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அவமானமான அவமானம்…
மெய்யப்பன் 1 வது தெரு வரும் போது தெருவுக்குள் நான் ஓடி தப்பித்து விட்டேன்.

ஸ்டேஷனில் என்னைக்காணாமல் மற்றவர்களிடம் வெள்ளச்சாமி
“ எங்கடா அவன்? அவன்… லாங்க் ஹேர் ஸ்டைல்!
அவன் தான்டா..அந்த கண்ணாடிக்காரன் எங்கடா?”
”ஓடிட்டான் சார்!”
”அவன் அட்ரஸக்குடுங்கடா..”
”அவனோட அப்பா கஸ்டம்ஸ் ஆபிசர் சார்”
”யாரா இருந்தா என்னடா? யோவ் அவன் பேரு அட்ரஸ் வாங்கி வாரண்ட் அனுப்பு”
எல்லோரையும் கேஸ் எதுவும் போடாமல் வெள்ளச்சாமி திருப்பி அனுப்பிவிட்டார்.
அவனுங்க வந்து “ தோழரே! உனக்கு வாரண்ட் அனுப்பச்சொல்லிட்டாருய்யா வெள்ளச்சாமி” என்று என்னிடம் சொல்றாங்கே.. நான் அரண்டே போனேன்.

காலேஜில வகுப்பில கூட நிம்மதியே இல்லை. ஒரு வாரம் செத்துத்தான் பொழச்சேன். தெனமும் வீட்டுக்கு வந்தவுன்ன
“ உன்ன பெத்த வயத்தில பெரண்டைய தான் அள்ளி வச்சி கட்டணும்”னு எங்க அம்மா கூப்பாடு போட்டு வாரண்டைக் காட்டினால் என்ன செய்ய? அல்லது வாரண்ட் இல்லாட்டியும் பி- 6 ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி கான்ஸ்டபிள் வந்து சொல்லி விட்டால்?

ரெண்டு மாசமா எனக்கு வாரண்டும் வரல. போலீஸும் வரல.
கொஞ்சம் பயம் தெளிஞ்சிருந்திருச்சி.

முதல் அத்தியாயம் இத்துடன் முடிந்தது.
இனி இரண்டாவது அத்தியாயம் இருக்குதே!


சொந்த ஊர் செய்துங்க நல்லூரில் இருந்து எங்கள் கருங்குளம் வயலில் விவசாய வேலை பார்த்துக்கொண்டிருந்த மாரியப்பன் மதுரைக்கு வந்திருந்தான்.
மாரியப்பனின் விசுவாசம் அலாதியானது. என் பெரியப்பா மகன் பெயர் பாலு. என் பெயர் துரை. அவன் தன் மகனுக்கு
பால் துரை என்று பெயரிட்டான். பெரிய முதலாளி மகன் பெயரும் சின்ன முதலாளி மகன் பெயரும் இணைத்து சேர்த்து
தன் மகனுக்கு பெயரிட்டிருப்பதை செய்துங்க நல்லூரில் எல்லோரிடமும் பெருமையாக சொல்லிக்கொள்வான்.


அவனுக்கு வேண்டியது வாங்கித்தர விரும்பி அவனை அழைத்துக்கொண்டு தெருவில் ஏ.ஏ. ரோட்டை நோக்கி நடந்தேன்.
”மொதலாளி! முன்னால சின்னவரு (என் அப்பா) நாகப்பட்டினத்துல இருந்தப்ப கூட அங்க வந்திருக்கேன். அப்ப நீங்க சின்னப்பையன்! கடல்ல கப்பல் எல்லாம் பாத்தேனே!” என்று சந்தோஷமாக சொல்லிக்கொண்டே வந்தான்.
மொதலாளி, மொதலாளி என்று வார்த்தைக்கு ஒரு மொதலாளி போட்டுத்தான் பேசுவான்.

”உனக்கு என்னடா வேணும்!” – நான்.
பெட்டிக்கடையில் வெத்தலை பாக்கு புகையிலை வாங்கித்தரச்சொன்னான். ஒரு கூல்டிரிங்ஸ் வாங்கிக்கொள்ளச்சொன்னேன்.
“குண்டு போட்ட சோடா கலர் தான் வேணும். காளி மார்க் கலர்லாம் ஒத்துக்காது” என்று சங்கடப்பட்டான்.
”தொரை! தோழரெ! தாழன் யாரு?”
பாண்டி விசாரித்தான். இன்னும் சிலர் ஆர்வத்துடன் என்னை சூழ்ந்து கொண்டார்கள்.
”எங்க வயல்ல வேல பார்க்கிற மாரியப்பன்!”

இவ்வளவு தான்..இவ்வளவில் எஸ்.ஐ வெள்ளச்சாமி அதே மேலப்பொன்னகரம் ரெண்டாவது தெருவிலிருந்து அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் போலீஸ்காரர்கள் புடை சூழ ’சள்’ளென்று நுழைந்தார்.
”அப்படியே நில்லுங்கடா! எவனும் ஓடக்கூடாது!”

அடச்சே….. விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ?

உயிரை வெறுத்து நான் தலை தெறிக்க என் தெருவுக்குள் மின்னல் வேகத்தில் ஓட ஆரம்பித்தேன். பறக்க ஆரம்பித்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆடிக்காத்தில அம்மியே பறக்குதே! அப்பளத்தின் கதி.........! மாரியப்பன் அரண்டு மிரண்டு போய் தவித்து தக்காளி வித்து…. நிலைமையின் தீவிரம் உறைத்து.. சுதாரித்து..என்னைத் தொடர்ந்து கூப்பாடு போட்டுக்கொண்டே ஓடோடி வருகிறான்.
“ அய்யோ நான் செத்தேன்.. காப்பாத்துங்க மொதலாளி! என்னை விட்டுப்போட்டு ஓடுதியளே!மொதலாளி! மொதலாளி! அய்யய்யோ மொதலாளி! அய்யோ மொதலாளி!அய்யோ அய்யய்யோ!“


துள்ளி வரும் சூறைக்காற்று… துடிக்குதொரு தென்னந்தோப்பு… இல்லை ஒரு ’பாதுகாப்பு’….. ?


வீட்டுக்கு வந்து தான் நின்றேன் நான்.
மாரியப்பன் ஓடி..ஓடோடி,ஓடோடி வந்து சேர்ந்து இறைக்க, இறைக்க சொன்னான்: ”போலீஸ்னா எனக்கு ரொம்ப பயம் மொதலாளி! அடி பிச்சிப்போடுவானுங்க மொதலாளி! போலீஸ்னா எனக்கு ரொம்பப் பயம் பாத்துக்கிடுங்க! இந்தப்போலீஸ்காரப்பயலுவள எனக்கு வல்லுசா பிடிக்கவும் செய்யாது பாத்துக்கிடுங்க........”

……………………………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2016/03/blog-post_12.html

http://rprajanayahem.blogspot.in/2015/02/blog-post_7.html

1 comment:

  1. ஆஹா… ஆஹாஹா !
    இது தான் ராஜ நாயஹம் ஸ்டைல்….

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.