“ மாலியோட புல்லாங்குழல் கேட்டீங்களா?”
நாகேஷ் ஜோக்!- “ கேட்டுப் பாத்தேன். தரமாட்டேன்னுட்டார். இப்பல்லாம் யாருக்கும் தர்ரதில்லயாம்!”
புல்லாங்குழல் மாலி. Child Prodigy.
மாலியோட காத்து யாருக்கும் வராது என்று இன்றும் சொல்பவர்கள் உண்டு.
இவருடைய Eccentricity பற்றி பல கதைகளும் கூட சொல்லப்படுவதுண்டு.
மாலி கச்சேரி கேட்க சதஸ் நிரம்பி வழிகிறது.
மாலி புல்லாங்குழல் எடுக்கிறார். கீழே வைக்கிறார். புல்லாங்குழலை எடுக்கிறார். கீழே வைக்கிறார். புல்லாங்குழலை எடுக்கிறார். வாயருகே கொண்டு போகிறார். கீழே வைத்து விடுகிறார். புல்லாங்குழல் எடுக்கிறார். துளைகளைப் பார்க்கிறார். புல்லாங்குழலை வருடுகிறார். மீண்டும் கீழே வைத்து விடுகிறார். ஆடியன்ஸை மதிக்கவேயில்லை. மீண்டும்..மீண்டும்..மீண்டும்..மீண்டும்..மீண்டும்..
ஒரு மணி நேரம் இப்படி செய்து விட்டு பின்னர் மாலியின் புல்லாங்குழல் இசைக்க ஆரம்பிக்கிறது. தேவ கானம்.
ஓவியன் எட்கர் டிகா சொன்னான் : “Art is vice. You don’t marry it legitimately.You rape it.”
"த்ரிவிக்ரமாவதாரத்திலே, பகவானோட தலை எங்கிருக்கின்னு தெரிஞ்சிக்க முடியலியாம் சிவப் பிரம்மாதிகளாலே.இவன் போய்எட்டிப் பிடுவான் போலிருக்கே!
அமிர்தத்தாலே காது, உடம்பு, மனசு, ஆத்மா எல்லாத்தையும் நனைச்சுப் பிடறான்." தி.ஜானகிராமன் ’மோகமுள்’ளில் சொல்வது இப்படி ஒரு தருணத்தைத்தானே!
ஒரு பெரியவர் சொன்னார்: “அன்று பலரும் கண்ணீர் விட்டு அழுது இசையில் கரைந்ததை பார்த்தேன். நானும் தான் அழுதேன்.”
மாலியின் ரஞ்சனி ராகம் தானம் பல்லவி, சிந்துபைரவி ராகம் தானம் பல்லவியெல்லாம் காதுக்குள்ளேயே இன்னும்.. இன்னமும் இனிக்கிறதே!
தியாகராஜ கேதார் கௌள கீர்த்தனை ”துளசி வில்வ” – கண்ணை இன்றும் ஜலத்தால் நிறைக்கிறது.
அந்த கதன குதூகல “ ரகுவம்ச சுதா”….
மாலியை கேட்டுக்கொண்டே செத்து விட்டால் சுகம். வேறென்ன வேண்டும்?
மாலியின் கச்சேரி ஒன்று நடந்து கொண்டிருக்கும் போது அவருடைய தந்தை அந்த சபாவுக்குள் நுழைகிறார். மாலி புல்லாங்குழல் வாசிப்பதை நிறுத்தி விட்டார். மூட் அவுட். சரியான கோபம். “ அவரை போக சொல்லுங்கள். அவர் போனால் தான் வாசிப்பேன்.”
மாலியின் அப்பாவை அங்கிருந்தவர்கள் வெளியே அனுப்பி வைத்தாக வேண்டிய நிர்ப்பந்தம். அவர் வெளியேறிய பின்னர் தான் புல்லாங்குழல் மீண்டும் இசைத்திருக்கிறது.
வீணை எஸ். பாலசந்தருக்கும் கூட அவருடைய அப்பாவிடம் இப்படி விரோத மன நிலை இருந்திருக்கிறதாம்.
கலைக் கோவில் படத்தில் இப்படி ஒரு காட்சி உண்டு.
வீணை வாசிக்கும் முத்துராமன் அரங்கத்தை விட்டு எஸ்.வி.சுப்பையாவை வெளியேற்றச் சொல்வார்.
ஸ்ரீதர் இந்த மாலி சமாச்சாரம் பற்றி கேள்விப்பட்டு தான் அப்படி ஒரு காட்சி அமைத்திருப்பாரோ என்னவோ?
................................
( மாலியின் சீடர் சங்கீத கலாநிதி புல்லாங்குழல் ரமணி அவர்களுடன் R.P.ராஜநாயஹம்)
.................................
http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html
http://rprajanayahem.blogspot.in/2009/11/blog-post_18.html
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.