Share

May 1, 2016

2016 தமிழக சட்டசபை தேர்தல்


தமிழக அரசியல் தேர்தல் கணக்கு ரொம்ப சிம்ப்பிள். ஜெயலலிதாவை ஜெயிக்க மற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய விஷயம் அது. எதிர்கட்சிகளின் வாக்குகள் சிதறு தேங்காயாகி விட்ட பின் அதிமுக அமோக வெற்றி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

மூன்றாம் அணியாகிய தேமுதிக விஜயகாந்தை முதல்வராக முன்னிறுத்தும் மக்கள் நலக்கூட்டணிக்கு மிக மோசமான படுதோல்வி சர்வ நிச்சயம். மொத்தமே ஒன்றிரண்டு சீட் கிடைப்பது கூட துர்லபம். ஒரு வேளை இரண்டு மூன்று சீட் வெற்றி கிடைத்தால், ஒரு நான்கைந்து சீட் கிடைத்து விட்டால் கூட ராஜநாயஹம் கணக்கு தப்பாகி விட்டது என்று சந்தோஷப்பட என்ன இருக்கிறது?

கம்யூனிஸ்ட்கள் தனித்து நின்றே தோற்கலாமே. ஏன் இப்படி விஜயகாந்திற்கு குடை பிடித்து படுதோல்வியை தழுவ வேண்டும். இதில் என்ன ராஜ தந்திரம் இருக்கிறது? டி.வி. ஷோவில் சப்பை சீமானிடம் வீரம் பேசியது மட்டுமே போதுமானது என்பது தான் கம்யூனிச திருப்தியா?

இரண்டாவது பெரியகட்சியாகிய தி.மு.கவிற்கு ஒரு முப்பது இடம் கிடைத்தால் தான் கௌரவமும் மானமும் கொஞ்சமாவது, ஏதோ கொஞ்சமாவது தேறும். ஆனால் முப்பது சீட் என்பதே கிடைக்காமல் தான் போகுமோ என்னவோ?

2006ல் எதிர்கட்சிகள் எல்லோரும் (வைகோ நீங்கலாக) துணை நின்றுமே தி.மு.க மைனாரிட்டி அரசாகத்தான் இயங்க முடிந்தது. வைகோ தான் கடைசி நேரத்தில் நிலை மாறி அன்று கருணாநிதியின் இடுப்பை ஒடித்து விட்டதாக சொல்லப்பட்டதுண்டு.

இன்று போயும் போயும் இந்த விஜயகாந்தைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள வைகோவை ஜோக்கர் என்பது கூட தவறு. ஜோக்கர் என்பது ரொம்ப உயர்வான,மேன்மையான கதாபாத்திரம். ’வைகோ செல்லாக்காசு’ என்பது தான் சரியான விமர்சனம்.

வினோத விசித்திரம் - விடுதலை சிறுத்தைகளுக்கு எந்த விதத்தில் கருணாநிதியை விட விஜயகாந்த் ஏன் பெரிய ஆளாகத் தோன்ற வேண்டும்?
ஜி.கே.வாசன் வித்தியாசமானவர். காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் சேர்வது சாத்தியமில்லை என்பதாலும் ஜெயலலிதா கை விட்டதாலுமே மக்கள் நலக்கூட்டணிக்கு வந்தவர்.

பா.ம.க வின் தனியாவர்த்தனம், கைவிடப்பட்ட வரட்டு கௌரவ பாரதிய ஜனதா எல்லாம் வான வேடிக்கை கூட காட்ட முடியாத கம்பி மத்தாப்பூ போல.
காங்கிரஸ் கட்சி தவிர மற்ற கட்சிகளுக்கு கருணாநிதி மீண்டும் முதல்வராக ஒத்துழைக்கவே கூடாது என்ற பிடிவாதம் ரொம்ப கெட்டியாக இருக்கிறது. ஆட்சி மாற்றம் அவசியம் என்ற அடிப்படை உண்மையை எப்படி இவர்களால் உதாசீனம் செய்ய முடிகிறது?பாரதீய ஜனதாவும், வாசனும் தான் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள கூட்டணியில் இடம் பெறமுடியாது. மேச்சா மதினிய மேய்ப்பேன் இல்லைனா பரதேசம் தான் போவேன் என்கிற பா.ம.க வை ஒதுக்கி விடலாம். மற்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்று கூட்டணி ஆட்சிக்கு முயற்சிக்காமல் மக்கள் செல்வாக்கு இல்லாத ஒரு நடிகரின் பின்னால் நிற்பது மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லாமல் வேறென்ன?

தேர்தல் முடிந்த பிறகாவது இவர்கள் ஷேக்ஸ்பியரின் ‘டெம்பஸ்ட்’ நாடகத்தில் ஸ்டீபனோவை கொண்டாடிய காலிபன் பித்தம் தெளிந்து சொல்வது போல அறிக்கை விடுவார்களா என்று பார்க்க வேண்டும்.
"What a thrice-double ass were we to take this drunkard for a god,
and worship this dull fool.

  We will be wise hereafter, And seek for grace."


கம்யூனிஸ்ட்களுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும், கட்டெறும்பாய் தேய்ந்து விட்ட மதிமுகவுக்கும், த.மா.காவுக்கும் ஜெயலலிதா தங்களை மதித்து கூட்டணி சேர அழைக்கவில்லை என்ற ஏக்கம் உண்டு என்பதை மறைக்க முடியாது. மாறாக கருணாநிதி வெற்றிலை வெற்றிலை பாக்கு வைத்து தேமுதிகவை கூட அழைத்துப்பார்த்தார். வாசன் வருவதாய் இருந்திருந்தால் கூட இளங்கோவனை சமாதானப்படுத்த முயற்சித்திருப்பார்.

ஜெயலலிதா வெற்றி என்பது யதார்த்த சூழல். சந்தோஷமான விஷயமா என்ன?

இவ்வளவையும் மீறி திமுக உள்ளிட்ட தமிழக எதிர்கட்சிகள் அனைத்துமே ஒரே ஒரு விஷயத்தில் ஒற்றுமை. அது – ”ஒங்கொப்பன் மகனே! சிங்கம்டா!” ஏதோ தாங்கள் அமோக வெற்றி அடைய இருப்பது போல “ ஒங்கொப்பன் மகனே! சிங்கம்டா!” சவடால்.ஒரு வேளை இந்த கால் வாரி விடும் அரசியலையும் தாண்டி எதிர்கட்சிகள் கணிசமான தொகுதிகள் வென்று பகைமை மறந்து, மன மாச்சரியங்களை ஒதுக்கி  கூட்டணி ஆட்சி அமைக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட அது அவல துரதிர்ஷ்டம் தானே?
யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற பட்டனை வாக்குச்சாவடியில் அழுத்தப்போகும் வாக்காளர்கள் இந்த முறை சில லட்சங்களாவது இருந்தால் இவர்களுக்கு கொஞ்சம் உறைக்கலாம்.
…………………………………..


http://rprajanayahem.blogspot.in/2016/04/blog-post_7.html

http://rprajanayahem.blogspot.in/2014/09/blog-post.html


http://rprajanayahem.blogspot.in/2010/01/blog-post_07.html

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_23.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/1971.html

4 comments:

 1. I believe RPR is on the money here. 180-AIADMK, DMK-30 and the rest shared by Ma.Na.Koo, Pa.Ma.Ka, Pa.Ja.Ka etc..

  ReplyDelete
 2. மிக நல்ல பதிவு.

  amas32

  ReplyDelete
 3. இதுவும் கடந்து போகும் என்றே மன சாந்தி கொள்ள வேண்டும். தமிழ் நாட்டுக்கு வந்த கொடுமை.
  தேசம் ஞானம் கல்வி
  ஈசன் பூசை எல்லாம்
  காசு முன் செல்லாதடி
  பைபையாய் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும்
  மெய் மெய்யாய் போகுமடி குதம்பாய் மெய் மெய்யாய் போகுமடி

  நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது
  நல்லவரானாலும் இல்லாதவரை
  நாடு மதிக்காது குதம்பாய் நாடு மதிக்காது
  கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
  வெள்ளி பணமடியே குதம்பாய் வெள்ளி பணமடியே

  என்ற பாடல் ஞாபகம் வருகிறது.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.