திருப்பூரில் வேலை வாங்கிக் கொடுத்தவர் அப்போது அங்கே பாங்க் மேனேஜராக இருந்த சரவணன் மாணிக்கவாசகம்.
தானே ராஜா, தானே மந்திரி என்று வாழ்ந்து விட்டு எப்படி இனி கை கட்டி வேலை பார்க்கப் போகிறேன் என்ற கலக்கம் சொல்லி முடியாது.
பதற்றம் அதிகமாய் இருந்தது.
பெரும் பொருளாதார வீழ்ச்சி வீழ்த்தி விட்ட நிலையில் வேறு வழியுமில்லை.
சரவணன் பேங்க் கிளம்பும் போது ஒரு போன்.
எங்கள் இருவருக்கும் நண்பன் பேசியிருக்கிறான்.
"சரவணா, என்னய்யா இது. தோழர் (என்னைப் பற்றி தான் குறிப்பிடுகிறான்) எப்படிய்யா கை கட்டி வேலை பார்ப்பான். கனவுலயும் நடக்காதுப்பா.
கோபத்தில சட்டுனு எவனாயிருந்தாலும் கைய நீட்டிடுவானேய்யா. நம்பவே முடியல "
சரவணன் மையமாக 'இல்லண்ணே, தோழரோட நெலம. வேற வழியில்ல'
'என்னமோய்யா, அவனப்பத்தி ஒனக்கு தெரியாததா?"
சரவணன் மீண்டும் விளக்கம் சொல்லி முடித்து திருப்பூர் டிராபிக்கில் இருபது நிமிடத்தில்
காரில் பேங்க் சேர்ந்த பின் ஒரு போன் கால்.
அதே நண்பன் தான். "யோவ் சரவணா, தோழர் வேலைக்கு சேர்ந்திருக்கிற கம்பெனிக்கு இப்ப நீ போன் போட்டுக் கேட்டுப் பாருய்யா. இன்னேரமே தோழர் நிச்சயமா கோபத்தில எவனயாவது அடிச்சிருப்பான்யா!"
பஞ்சம் பிழைக்கப் போயிருந்த திருப்பூர் வாழ்க்கையை எதிர் கொள்ள மனதை எவ்வளவு திடப்படுத்தினாலும் தேம்பி அழும் நிலை.
கோபத்தை வெளிப்படுத்தி விடக் கூடாது என்ற சங்கல்பத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.
ஆனால் என் கோபம் impulsive act. கலக்கமும் பயமும் பதற்றமும் நிரந்தரமான விஷயம்.
..
ஆஃபிஸில் மூன்றாவது கேபினில் இருந்த போது ஒரு போன் கால். அது முதல் கேபினில் இருந்த ஒருவருக்கு. நான் அந்த கால் அங்கே போகும் படி டிரான்ஸ்பர் செய்தேன். அந்த நபர் மற்றொரு போனில் பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் 'உங்களுக்குத் தான்' என்று சைகையால் தெரிவித்தேன்.
அந்த ஆள் மற்றொரு போனில் தொடர்ந்து பேசி வைத்து விட்டு என்னிடம் 'நான் ஒரு போனில் பேசிக்கொண்டிருக்கும் போது எப்படி இன்னொரு கால் டிரான்ஸ்பர் செய்யலாம்' என்று கோபமாக சத்தமிட்டு, சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்குன்னு ஆட ஆரம்பிச்சிட்டார்.
மனதை உறைய வைத்துக் கொண்டு கண்ணை மூடி அவமானத்தை ஜீரணித்தேன்.
ஒரே வாரம். செய்தித்தாளில் பரபரப்பு செய்தி.
அந்த நபர் புகைப்படத்துடன். கடன் கொடுத்த ஒரு முதிய கிழவியை கொலை செய்து விட்டார். கொலை செய்து சாக்கில் பிணத்தைப் போட்டு மறைத்து, பிடி பட்டு கைது.
..
எதிர் கேபினில் இருந்து ஒருவர் "சார், இங்க வாங்க" என்று கூப்பிட்டார். தோரணையில் அது வெட்டிப் பேச்சுக்குத் தான் என்று தெரிந்தது.
அதோடு எனக்கு வேலையுமிருந்தது.
"எனக்கு வேலை இருக்கு " என்றேன்.
அந்த ஆளுக்கு கௌரவப் பிரச்சினையாகி விட்டது.
" சார், இனிமே இந்த கேபினுக்குள்ள நீங்க நொழஞ்சா கால வெட்டுவேன் சார் "என்று சீரியஸா கோபமாக சத்தமா ஒரு சவுண்டு.
அவமானத்தால் துடித்துப் போனேன்.
ஒரு பத்து நாள். அந்த நபர் காலில்
கட்டு விரியன் கடித்து, சீரியஸாகி.. விதி முடிஞ்சவனத் தான் கட்டு விரியன் கடிக்குமாமே.
ஆஸ்பத்திரி, படுக்கைன்னு ஆறு மாதம் படாத பாடு பட்டு அந்த ஆளு பொழச்சிட்டாலும் பழைய ஆளாயில்ல.
...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.