Share

Mar 12, 2021

"மணல் கோடுகளாய்" பற்றி சரவணன் மாணிக்கவாசகம்



மணல் கோடுகளாய் ..- R.P. ராஜநாயஹம்:


ஆசிரியர் குறிப்பு:


பெரிதும் கவனம் பெற்ற "சினிமா எனும் பூதம்" நூலாசிரியர்.  மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலஇலக்கியம் படித்தவர். கலைத்துறையில் சினிமா, கூத்துப்பட்டறை போன்ற தளங்களில் பணியாற்றியுள்ளார். நடிப்பு பயிற்சியாளராகவும், எழுத்தாளராகவும் திகழும் இவர் பரந்த வாசிப்பும், இலக்கியம், சங்கீதம், சினிமா மட்டுமன்றி பல Topicகளில் சரளமாகப்பேசும் , எழுதும் திறமையும் வாய்ந்தவர். தன்அனுபவச் சிதறலாய் இந்தக் கட்டுரைத்தொகுப்பு.


அனுபவங்கள் அந்தந்த வயதுக்கேற்றாற் போல் அமைவதில்லை, அந்தந்த வாழ்க்கைக்குத் தகுந்தாற்போல். செல்வமும், செல்வாக்கும் நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் இவர். அதே போன்ற குடும்பத்தில் மணமுடித்தவர்.  வறுமை எத்தனை வழியில் என்றாலும் வரும். செல்வம் பிறப்பில், திருமணத்தில் இல்லை அதிர்ஷ்டத்தில். அதில் கடைசி மட்டுமே இவருக்குப் பாக்கிஇருக்கிறது.


அப்பாவைப்பெற்ற ஆச்சியுடனான நெருக்கம் இவர் பலமுறை எழுதியது. மொத்தமாகப் படிக்கையில் சிறுவயதில் கொள்ளும் உறவுகள், எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் இல்லாததாலேயே பசுமரத்தாணி போல் பதிந்துவிடுகின்றன எனத் தோன்றுகிறது.


பத்துவயதில், நான்கு நாள் நட்பும் அப்போது சொல்லிக் கொடுத்த நாட்டுப்பாடலை இப்போதும் நினைவுகூர்வதும் இவரது Uniqueness. ஞாபகசக்தியே இவருக்கு வரம், அதுவே சிலசமயங்களில் சாபம்.


நீதிபோதனை வகுப்பில் புத்தகத்தின் நடுவே சரோஜாதேவி புத்தகம் படித்தது, மதுரை விளாங்குடி டூரிங் தியேட்டரில் பார்த்த படங்கள்,  திரையுலக, மெட்டட்டோர் வேன் சொந்தமாக வைத்திருந்த அனுபவங்கள், பிராந்திக்கடை அனுபவங்கள்,  ஆயில் ஏஜன்ஸி அனுபவங்கள், கெமிக்கல் பேக்டரி அனுபவங்கள் குறித்து இன்னும் சொல்லாதவற்றைச் சொல்வதற்கும், இவையல்லாது முகநூலில் ஏற்கனவே பகிர்ந்த அனுபவங்களும், பகிராத அனுபவங்களும் என்று இன்னும் சொல்வதற்கு இவருக்கு ஏராளமாகவே இருக்கின்றன.


Individual Choice என்ற தலைப்பில் வரும் கட்டுரை இவரது தைரியமான, நேர்மையான எழுத்துக்கு ஒருபதச்சோறு. இரண்டாம் பகுதியில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஆனால் கட்டுரை சொல்வது போல் தனிவிருப்பை யாரும் கேள்விகேட்க முடியாது. நான் சொல்வது முதல்பகுதி குறித்து. படித்துப் பாருங்கள்.


Child is the Father of the Man போன்ற கட்டுரைகள் மற்றும் குழந்தைகளைப்பற்றி இவர் எழுதும் எல்லாக் கட்டுரைகளும் அறிவின்தளத்திலிருந்து முற்றிலும் விலகி முழுக்கமுழுக்க உணர்வின்தளத்தில் எழுதியவை. உணர்வுத்தளத்தில் எழுதும் எழுத்துக்கள் தி.ஜா எழுதியது போல் பண்ணையார்வீட்டு அம்மா எண்ணெய் குளியலுக்காக நகைகளைக் கழட்டி வைத்து உட்கார்ந்திருப்பதைப்போல் தனியழகு.


ஜோதிடம் கட்டுரையைப் படித்ததும் நினைவுக்கு வந்தது, நான் கல்லூரியில் படிக்கையில்  இவர் என் ஜாதகத்தை அலசி, எனக்கு விபரீத ராஜயோகம் வருவதாகச் சொன்னது. 


மணல் கோடுகள் அனுபவத்தின் காலடித்தடங்கள். அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம் என்பது ஐம்பதைக் கடந்த பெரும்பான்மையினருக்குத் தோன்றும். If ifs and buts were candies and nuts we'd all have a very Merry Christmas. இவரது இந்த நூல், தன் அனுபவங்களைப் பார்வையாளன் கோணத்தில் அதிகம் Judgemental  இல்லாமல் சொல்லிக் கொண்டே போவது.


புத்தகங்களில் கற்பனை கதாபாத்திரங்களுடன் உணர்வுபூர்வமாக நெருங்கி, அவர்கள் சிரிக்கையில் சிரித்து, வேதனைப்படுகையில் வேதனைப்பட்டு அவர்கள் இறந்தால் மனக்கிலேசம் அடைந்து யாருடனும் பேசப்பிடிக்காத வாசகர்களை எனக்குத் தெரியும்.  ஆனால் தன்அனுபவ எழுத்துக்கள் படிக்கும் பொழுதே இது புனைவல்ல என்று நினைவுறுத்திக் கொண்டே இருப்பவை. அதுவே நெருங்கிய நண்பரின் நூலாக இருந்து, அவர் கடந்துவந்த பாதை கற்களாலும், முட்களாலும் நிறைந்திருந்தால்.......

எதுவும் சொல்வதை விட சொல்லாமல் இருப்பதே நல்லது. " காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ ?"

#தமிழ்கட்டுரைநூல்கள் 


பிரதிக்கு;


B4books யாவரும் பப்ளிஷர்ஸ்

90424 61472

முதல்பதிப்பு பிப்ரவரி 2021

விலை ரூ 190.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.