Share

Mar 16, 2021

"அரசியல் பிழைத்தோர்" நூல் பற்றி சிவகுமார் கணேசன்

 R. P. ராஜநாயஹம் "அரசியல் பிழைத்தோர்" நூல் பற்றி 

சிவகுமார் கணேசன் 


அரசியல் பிழைத்தோர்

R.P.ராஜநாயஹம் 

எழுத்து பிரசுரம் 


கண்ணதாசன்,மதுரை முத்து,கலைஞர்,எம்ஜி ஆர், ஈவிகே சம்பத் அன்பழகன்,நெடுஞ்செழியன்,

முக அழகிரி, மு க முத்து, காளிமுத்து, ஜேப்பியார் காமராஜரை தோற்கடித்த  சீனிவாசன் இவர்களோடு,பிரபலமாகாத மதுரை கம்மாக்கரை கண்ணுசாமி தேவர், தாமரைக்கனியை பெரிய ஆளாக்கி அரசியல்வாதிகளுக்கு நேரெதிராக அரசியலில் லட்சங்களை தொலைத்த இவரது மாமனார் சந்திரன் பற்றி நாமறிந்த நாமறியாத தகவல்களை விவரிக்கும் அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு.


வெற்றிகொண்டான் குறிப்பாக தீப்பொறி ஆறுமுகம் பேசுவதையெல்லாம் பழனியில்,சுற்று வட்டாரக் கிராமங்களில் ஓடி ஓடிக் கேட்டதெல்லாம் இப்போது இந்தப் புத்தகத்தை வாசிக்கையில் நினைவுக்கு வருகிறது.ஒங்களுக்கு வௌக்கஞ் சொல்லியே நான் ஓஞ்சு போயிட்டேன் என்று அடிக்கடி பொய்யாகச் சடைந்து கொள்ளும் தீப்பொறி ஆறுமுகத்துக்கு நடிகர்களுக்கு ஈடான நட்சத்திர அந்தஸ்து இருந்தது என்று ராஜநாயஹம் சார் சொல்வது உண்மைதான்.


1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கி, அன்றைய தினத்தந்தியில் தலைப்புச் செய்தியில், புகைப்படத்தில் இடம் பெற்ற மாணவர் தலைவர் ரவிச்சந்திரன் திமுகவில் கண்டு கொள்ளப்படாமல் போனது, அத்தனை தலைவர்கள்  இருக்க அண்ணா மறைவுக்குப் பின் கலைஞர் முதலமைச்சர் ஆனது,எமர்ஜென்சிக்கு பிறகு தேசிய அளவில் கருணாநிதியின் மாறிய பிம்பம். நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும் என்று எம்ஜிஆரின் பாடல் வரிகள் தீர்க்கதரிசனமாய், அவரை எதிர்த்த அத்தனை பேரும் அவரிடமே சரணடைந்தது பற்றியெல்லாம் படிக்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.


காமராஜரையும்,அவரைத் தோற்கடித்த சீனிவாசனையும் வானொலிப் பேட்டி எடுத்த சிட்டியிடம் கலைஞர் சொல்கிறார்.என்ன சார் இப்படி செய்திட்டீங்க.காமராஜரைப் பேட்டி எடுத்துட்டு அடுத்து பெ.சீனிவாசனப் பேட்டி எடுக்கறீங்க.இவனுக்கு என்ன யோக்கியதை இருக்குன்னு இவனையெல்லாம் பெரிய ஆளாக்கறீங்க?.கருணாதியின் முன் ஜாக்கிரதையையும், தீர்க்கதரிசனத்தையும் இந்தச் சம்பவம் சுட்டுவதாக கூறும் ராஜநாயஹம்,இந்தப் புத்தகத்தையே கலைஞருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.


திருவாருர் தங்கராசு மாநாட்டில் எம்ஜிஆர் கலந்து கொள்ளாததற்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லிக் கொண்டிருக்க,காரணத்தை திருவாருர் தங்கராசே சொல்கிறார்.படித்துப் பாருங்கள்.


அண்ணன் காட்டிய வழியம்மா, அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி ,நலம்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா?நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் என்று கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்களின் பின்னணியிலுள்ள அரசியல்  செய்திகள் சுவாரஸ்யமாயிருக்கின்றன.


நேற்று,நெருங்கிய உறவினர் ஒருவரின் விசேஷத்திற்கு பழனி சென்றிருந்தேன். விசேஷத்தில் என் கையில் இருந்த புத்தகத்தை, பார்க்கலாமா? என்று வாங்கிய என் உறவினர் அப்படியே அதில் மூழ்கி விட்டார்.புறப்படும்போது பாதி முடிச்சாச்சு என்று சிரித்தார். படிச்சுட்டு கொடுங்க என்றதற்கு நீ  மதுரை போகணும். அடுத்த முறை வரும் போது வாங்கிக்கறேன் என்று  திருப்பித் தந்தார். கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாதபடி அவ்வளவு சுவாரசியமானது நேரில் பேசுவது போல இருக்கும் R.P.ராஜநாயஹம் சாரின் எழுத்து .


புத்தகத்தைப் பெற தொடர்புக்கு 9840065000


...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.