'மணிக்கொடி கி. ரா என்றறியப்பட்ட
கி. ராமச்சந்திரன் என்ற A. K. ராமச்சந்திரன்'
'அசோகமித்திரனின் திரையுலக கதாபாத்திரங்கள்'
என்ற என் வித்தியாசமான மாறுபட்ட ஒரு கட்டுரை 2004 ம் ஆண்டு 'கனவு' சிறு பத்திரிகையில் வெளியான போது
மணிக்கொடி சிட்டி "மணிக்கொடி கி. ரா பற்றி இப்போது நீங்கள் எழுதியிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
உங்கள் தலைமுறையினர் யாரும் இவரை அறிந்து இராத நிலையில் நீங்கள் இவ்வளவு தெரிந்து வைத்திருப்பது வியப்பளிக்கிறது. அவரை கனப்படுத்தியிருக்கிறீர்கள்." என்று எனக்கு கடிதமே எழுதியிருந்தார்.
அப்போது சிட்டிக்கு 94 வயது.
நடுங்கும் விரல்களால் அவரே எழுதுவார்.
படிக்க சிரமமாக இருக்கும் பவித்ர கையெழுத்து.
மணிக்கொடியில் ‘சொத்துக்குடையவன்’,
ஹாஸ்ய பத்திரிக்காசிரியன் போன்ற பல கதைகளை எழுதியவர்
A.K.ராமச்சந்திரன் என்ற கி.ரா.
ஒவ்வொரு மணிக்கொடி இதழும்
வெளி வருவதற்கு கி.ராமச்சந்திரனின்
ஒரே மோதிரம் அடகு வைக்கப்படும்.
பின்னாளில் இவர் ஜெமினிஸ்டுடியோ
கதை இலாகாவில் வேலைக்கு சேர்ந்தார். ஔவையார் படத்தில்,வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இவர் பெயரை டைட்டிலில் பார்க்கலாம்.
க.நா.சு தன் ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலை இவருக்கும் சேர்த்து சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
அந்த நூலில் மணிக்கொடி கி.ரா. பற்றி
க.நா.சு சொல்வது
‘ கி.ராமச்சந்திரனின் சொந்த வாழ்க்கை
அவ்வளவு சுத்தமானதல்ல.
அந்தக் காலத்தில் ஒரு சாமியார்
ஒருவர் இருந்தார்.
ஒரு சாரார் அவரை கயவன், அயோக்கியன் என்றும், அவர் மகான், சித்தர் என்று மறுசாராரும் அபிப்பிராயம் கொண்டிருந்தனர்.
அந்த சாமியாரிடம் மணிக்கொடி கி.ராமச்சந்திரனுக்கு மிகுந்த ஈர்ப்பு இருந்தது’
கி.ராமச்சந்திரனே கூட கடைசியில் ஒரு சாமியாராகவே மாறிவிட்டார்!தி.ஜானகிராமன் ஒரு முறை அவரை சாமியாராக சந்திக்க நேர்ந்து, பின் க.நா.சுவிடம் உயர்வாக
‘கனிந்த சாமியாராகத்தான் ராமச்சந்திரன் தெரிந்தார்’ என கூறியிருக்கிறார்.
அதன் பின்னாலொரு தடவை க.நா.சு வீட்டிற்கு வந்து கி.ரா பூஜையெல்லாம் செய்தாராம்.
புதுமைப்பித்தன்,கு.ப.ரா.,மௌனி,ந.பிச்சமூர்த்தி,
சி.சு.செ, சிதம்பர சுப்ரமணியன் ஆகியோர் மரணம் பற்றியெல்லாம் நமக்குத்தெரியும்.
சிட்டி தன் 96 வயதில் 2005ல் மறைந்தார்.
ஆனால் மணிக்கொடி கி.ராமச்சந்திரன்
மாயமாய் மறைந்து விட்டார்.
என்ன ஆனார்,
அவருடைய மரணம் எப்படி, எப்போது சம்பவித்தது என்று யாருக்குமே தெரியாது.
Unsung, unhonoured, unwept.
'கி.ராமச்சந்திரன் மிகவும் துன்பத்துக்குட்பட்டவர். புதுமைப்பித்தன், கு,ப.ரா,
சி.சு.செல்லப்பா,தி.ஜா ஆகியோர் வாழ்க்கையிலும் சிக்கல்கள் இருந்தன.
நாம் அறிவது, அறியக்கூடியது மிக மிகக் குறைவு. நடந்ததைப் பற்றி க.நா.சு கூறுவது போல என்றென்றுமாக கருத்து தெரிவிக்கக்கூடாது' என்று தான் அசோகமித்திரன் சொல்லக் கூடியவர்.
"மானசரோவர் நாவலில் கோபால் கதாபாத்திரம்
கி. ராமச்சந்திரன் தானே? "என்று நான் கண்டு பிடித்துக் கேட்ட போது அசோகமித்திரன் பிரமித்து சொக்கிப்போய் சொன்னார்
" அடடே, அட ராமச்சந்திரா, எப்படி, எப்படி ராஜநாயஹம் உங்களால் இதையெல்லாம் கண்டு பிடிக்க முடிகிறது? நீங்கள் என்னை மீண்டும், மீண்டும் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள்! "
'அசோகமித்திரனின் சீடன் ராஜநாயஹம்' என்று என் மீது ஒரு முத்திரை உண்டு.
http://rprajanayahem.blogspot.com/2012/07/blog-post_17.html?m=0
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.