Share

Mar 26, 2021

தூய உம் வரவாலே

 


திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் காலேஜ் மற்றும் 

உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் 

கம்யூனிட்டி சென்டர் திறப்பு விழா. 


முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி

 திறந்து வைத்தார். 

அமைச்சர்கள் சி. பா. ஆதித்தனார்,

 ப. மாதவன், கே. வி. சுப்பையா ஆகியோர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள். 

விழாவில் கலந்து கொண்டு மாணவ வாழ்க்கை பற்றிய நினைவில் சிலிர்த்தார்கள்.


 கல்லூரியின் முன்னாள் மாணவர் 

நடிகர் எஸ். ஏ. அசோகன் கூட விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

கல்லூரி பள்ளி மாணவர்கள் திரைப்பட நடிகரை காண்பதில் அதிக உற்சாகம். 


அசோகனின் கல்லூரி வாசம் மட்டுமின்றி,

 பள்ளி படிப்பும் கூட செயின்ட் ஜோசப்ஸ் தான். 


பள்ளிச் சிறுவனான நான் தமிழக முதல்வரை வரவேற்று வாழ்த்துப் பா எழுதுமாறு பணிக்கப்பட்டேன். 

'தூய உம் வரவாலே மகிழ்ந்தோம் 'என்று அதில் ஒரு வரி. 

அதைப் பார்த்த ஒரு ஃபாதர் 

அது ஆகாது என்றார்.' உம் வரவாலே மகிழ்ந்தோம்'என்றால் போதும். 

தூய என்ற உன்னத வார்த்தையை கருணாநிதிக்காக பயன்படுத்துவது 

பெரும் அபத்தம் என்று புருவத்தைத் தூக்கி அதனை நீக்கினார். 


கல்லூரி முதல்வர் சி. கே. சுவாமி. 

கலைஞர் அன்று திறந்து வைத்த கட்டிடம் முழுமையாக இல்லாமல் பாதியாக. கட்டிட வேலை இன்னும் பாக்கி. 


கல்லூரி முதல்வர் அது பற்றி பேசும் போது குறிப்பிட்ட ஒரு விஷயம் "கட்டிடம் கட்ட ஏ. எஸ். ஜி. லூர்து சாமி பிள்ளை (அப்போதெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் பெயரோடு ஜாதியையும் சேர்த்துக் கொள்வார்கள்.இவர் முன்னாள் எம். பி. அடைக்கலராஜின் தந்தை. ) கொஞ்சம் உதவி செய்தார். நம்முடைய தமிழக முதல்வர் கருணாநிதி. கருணை உண்டு. நிதியும் உண்டு. கட்டிடம் முழுமையடைய உதவுவார்" 


ஒரு வசதியான கிறிஸ்தவ நிறுவனம் நிதியுதவி கேட்பது கலைஞருக்கு ருசிக்கவில்லை. அதோடு காங்கிரஸ் தலைவர் பெயரும் ரசிக்கும்படியாக இல்லை. போர்க்குணம் மிகுந்த கலைஞர் பேசும் போது இதற்கு பதிலளித்தார். "காங்கிரஸ்காரர்கள் எங்களிடம் ஆட்சியை இப்படி இந்த அரைகுறை கட்டிடம் போலத் தான் ஒப்படைத்து விட்டுப் போனார்கள். நாங்கள் செப்பனிட்டுத் தான் சரி செய்தோம். இப்போதும் பாருங்கள். நான் பாதியாய் உள்ள கட்டிடத்தைத் தான் திறந்து வைக்க வேண்டியிருக்கிறது. யாரோ காங்கிரஸ் தலைவர் பெயரை கல்லூரி முதல்வர் குறிப்பிட்டார்.  காங்கிரஸ்காரர் அரைகுறையாக கட்ட நிதி தந்திருக்கிறார். காங்கிரஸ்காரர்களுக்கு எல்லாமே அரை குறை தான். அவரிடமே மீதியையும் கட்டித்தர நிதி கேளுங்கள். "


அன்று முதியவரான தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பேசிய நெகிழ்ச்சியான செய்தியொன்று 

" இந்த கல்லூரியில் நான் படித்த போது ஒரு ஃபாதர் எனக்கு பேராசிரியராய் இருந்தார். 

அவருக்கு ஆஸ்த்மா வியாதியிருந்தது.

 அதனால் மிகவும் சிரமப்பட்டார். 

அவருடைய மாணவனான நான்

 அந்த வியாதியின் தன்மை பற்றிக் கேட்டேன். 

அவர் சொன்னார் 'இந்த கொடுமையான நோய் உனக்கு வரவே கூடாது'. 

எவ்வளவு நல்ல மனசு பாருங்கள். அவருக்கு உள்ள ஆஸ்த்மா எனக்கு வரக்கூடாது என்று மனதார நினைத்தார். எவ்வளவு பெரிய மனசு. 

எனக்கு மிகப் பெரிய ஆசி. 

இன்று இந்த முதிய வயதில் எனக்கு ஏதேதோ வியாதிகள் வந்திருக்கிறது. என்னன்னவோ. ஆனால் ஆஸ்த்மா மட்டும் எனக்கு இல்லை. "


...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.