Share

Dec 24, 2019

ரவிசங்கர் 92 - வசந்த கோகிலம் 32


’ட்விங்க்ள் ட்விங்க்ள் லிட்டில் ஸ்டார்
ஹவ் ஐ வொண்டர் வாட் யு ஆர்’
பாடலுக்கு மெட்டு போட்டபோது
மொஸார்ட்
ஐந்து வயது சிறுவன்.
’சாரே ஜஹான் சே அச்சா’ பாட்டுக்கு மெட்டு போட்ட சிதார் மேதை ரவிசங்கர்
92 வயதில் இறந்தார்.

ஏழு வருடங்களுக்கு முன்.
அன்று கூட இங்கே ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம்.
இருபது வருடங்களுக்கு மேலாக அல்லா ராக்கா தபலாவுடன் அந்த சிதார் என் காதுகளுக்கு புகட்டிய தேசி,சுத்த சரங்,யேமன் சரங்…’
அவருடைய மாமனாரும் குருவுமான அலாவுதீன் கான்,
அண்ணா நடன மேதை உதய் சங்கர்,
மைத்துனர் சரோட் அலி அக்பர் கான்,
மகள்கள் நோரா ஜோன்ஸ், அனுஷ்கா..
Illustrious relatives.
ரவிசங்கர் காதல் மன்னன்.
92 வயதில் நிறைந்த வாழ்வு என்று தான் சொல்லவேண்டும்.
32 வயதில் மறைவது? என்.ஸி.வசந்த கோகிலம் குறைவாழ்வில் இறந்து போனவர். அறுபத்து எட்டு வருடங்களுக்கு முன்.
’நேத்திரங்கெட்டவன் காலன் - தன் முன்
நேர்ந்ததனைத்தும் துடைத்து முடிப்பான்’
- பாரதி
வசந்த கோகிலம் கேரளாவில் பிறந்து நாகப்பட்டினத்தில் தான் வளர்ந்திருக்கிறார்.
Ifs and buts போட்டு வாழ்க்கையை விசாரிப்பது உலக இயல்பு எனில்
வசந்த கோகிலம் நிறை வாழ்வு வாழ்ந்திருந்தால் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை அந்தஸ்து
ஒப்பீடு செய்யும்படி ஆகியிருக்குமோ.
எப்போது கேட்டாலும் ஏதோ நேற்று ரிக்கார்டிங் செய்த பாடல்களோ என்ற பிரமை வசந்த கோகிலம் பாடல்களில் ஏற்படுகிறது.

‘ ஏன் பள்ளி கொண்டீரய்யா’ என்று அந்த குரல் கேட்கும்போது இன்று இங்கு ஒரு இருபது வயது பெண் பாடுவது போல’ இருக்கிறது.
சங்கராபரண ராக ‘மஹாலக்‌ஷ்மி ஜெகன் மாதா’
சண்முகப்ரியா ‘தந்தை தாய் இருந்தால் உலகத்தில்’
காம்போதி ‘ஆனந்த நடனம்’
வசந்த பைரவி ராக ‘நீ தயராதா’
முகாரியில் அழும் ‘ஏலாவதாரமு’
’ஜீவன் உள்ள குரல்’ என்று ஒரு cliché உண்டு தான்.
திருமண வாழ்வு என்பது தேவதைகளுக்கு எப்போதும் பெருந்தோல்வி தானே.
வசந்தகோகிலத்தின் முன்னாள் கணவனின் ஊருக்கு பின்னர் போக நேர்ந்த போது
அன்று அந்த இரவு
தோற்றுப்போன தாம்பத்தியத்தை நினைத்து மிகவும் சஞ்சலப்பட்டு தேம்பினாராம்.
எம்.எஸ்.க்கு ஒரு சதாசிவம் போல வசந்த கோகிலம் வாழ்விலும் ஒரு சதாசிவம் உண்டு.
சி.கே.சச்சி என்ற சதாசிவம்.
எம்.ஜி.ஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில் எல்லிஸ்.ஆர் டங்கனுக்கு அசோசியேட் டைரக்டர்.
இந்த சச்சியோடு தான் வசந்தகோகிலம் பின்னர் வாழ்ந்திருக்கிறார்.
1940ல் ’சந்திரகுப்த சாணக்யா’ படத்தில் வசந்த கோகிலம் நடித்த போது மேக் அப் சாமான்கள் லண்டனிலிருந்து சச்சி தருவித்தாராம்.
’வேணுகானம்’ படத்தில் வி.வி.சடகோபனுடன் வசந்தகோகிலம்.
சி.கே.சச்சி இயக்கிய’கங்காவதார்’(1942) படத்தில் கங்கையாக வசந்தகோகிலம்.
பாகவதரின் மனைவியாக ’ஹரிதாஸ்’ படத்தில்
வசந்த கோகிலம்.
’ஆஹாஹா என்ன பாட்டு அந்தம்மா வசந்தகோகிலம் சோகமா பாடுற பாட்டு’ என்று அஷ்டாவதானி பி.பானுமதி மெய்மறந்திருக்கிறார்.
அந்திம காலத்தில் நினைவுக்குழப்பம். ஹரிதாஸ் படம் என்பதற்கு சிவகவி என்றும் ஆற்றங்கரையில் என்பதற்கு குளங்கிட்ட அந்தம்மா சோகமா உக்காந்து பாடுற பாட்டு என்று 22-02-2001 குமுதத்தில் தவறுதலாக பானுமதி குறிப்பிட்டிருந்தார்.
வால்மீகியில் டி.ஆர் ராஜகுமாரி,
யு.ஆர்.ஜீவரத்தினத்துடன்
வசந்தகோகிலமும் நடித்தார்.
இந்தப்படம் ஹரிதாஸ் வெற்றிக்கு பின்
அதன் இயக்குனர் சுந்தர் ராவ் நட்கர்னியால் உற்சாகமாக தியாகராஜ பாகவதர் மீண்டும் நடிக்க ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் கைதாகியதால் ஹொன்னப்ப பாகவதர் நடித்தார்.
டி.எஸ்.பாலையா கூட வால்மீகியில் உண்டு.
எம்.எஸ்க்கு ரொம்ப களையான அழகு முகம். மீரா,சகுந்தலை படங்களில் பார்க்கலாம். ஆனால் வசந்த கோகிலம் முகம் பற்றி அப்படி சொல்லமுடியாது. பெண்மையின் நளினம் கூட நடிப்பில் குறைவு என்பது ஹரிதாஸில் தெரிகிறது.
ஆனாலுமே
வசந்தகோகிலம் ரொம்ப அழகு என்று தான் பெரியவர்கள் சொல்வார்கள்.
எலும்புறுக்கி நோய் படுத்திய பாட்டில் வசந்தகோகிலம் 1951ம் ஆண்டு நவம்பரில் 7ம் தேதி கமலஹாசன் பிறந்த தேதியில் தான் இறந்திருக்கிறார்.ஆனால் அப்போது கமலஹாசன் பிறந்திருக்கவில்லை.அதற்கு சரியாக மூன்று வருடம் கழித்து தான் பிறந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் என் பக்கத்து வீட்டில் இருந்த வசந்தா மாமி ‘வசந்தகோகிலம் ரொம்ப பிராபல்யமா இருக்கறச்ச தான் நான் பொறந்தேன்.அதான் நேக்கு வசந்தகோகிலம்னு எங்காத்தில பேர் வச்சா’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.