Share

Dec 16, 2019

ச.து.சு யோகியார்



க.நா.சு. தன் 'இலக்கியச்சாதனையாளர்கள்'  நூலை
சமர்ப்பிப்பது கொஞ்சம் வித்தியாசமாக
காணிக்கை
“நான் தமிழில் எழுத ஆரம்பித்த காலத்தில்
எனக்கு மிகவும் நெருங்கிய தோழர்களாக இருந்து,
சில சமயம் எதிர்த்துச் சொல்லியும்
சில சமயம் ஆதரித்தும் உதவிய
நண்பர்கள் நினைவுக்கு
இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்.
அவர்களில் முக்கியமானவர்கள் என்று
நான் நினைப்பவர்கள்
சொ.விருத்தாச்சலம் என்கிற புதுமைப்பித்தன்,
ஏ.கே.ராமச்சந்திரன் என்ற கி.ரா,
ச.து.சு.யோகியார்”
‘குட்டி இளவரசன்’
அந்த்வான் செந்த் சமர்ப்பணம் அழகு.
நூலிலும் ச.து.சு.யோகியார் பற்றி க. நா. சு.  மற்றவர்களை விடவும் ஓரளவு சிறப்பாகவே சொல்கிறார்.
ஒரு நாலேகால் பக்கத்தில் அவரை பற்றி எழுதியுள்ள விஷயங்கள் யோகியாரின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும்படி இருக்கிறது.
1932லிருந்து 1960 வரையிலான காலங்களில் க.நா.சு அவரோடு பழகி நட்பு கொண்டிருந்திருக்கிறார்.

ச.து.சு. யோகி கவிஞர். பால பாரதி என அழைக்கப்பட்டவர்.
துறவி என்ற பிம்பம் இவருக்கு.

போலீஸ் வேலை பார்த்தவர்.
1930களின் ஆரம்பத்தில் ஈ.வெ.ரா. பெரியாரின் பாசறையில் இருந்தவர்.
இரு சகோதரர்கள் 1936ல் கே.பி.கேசவன், பாலையா, எம்.ஜி.ஆர் நடித்து வந்த திரைப்படம். இதற்கு யோகி தான் ஸ்க்ரீன் ப்ளே.
பின்னர் 1939ம் வருடம் ’அதிர்ஷ்டம்’ ச.து.சு.யோகி இயக்கத்திலேயே வெளி வந்த வெற்றிப்படம்.
நடிகர்கள் வி.வி.சடகோபன், டி.சூரிய குமாரி,
கொத்தமங்கலம் சுப்பு, கே.ஆர்.செல்லம்.
’அய்யா என் சிறு பெண் ஏழை என் பால்’ அதிர்ஷ்ம் படப்பாடல்
டி.சூரியகுமாரி பாடியது. யோகியே எழுதியிருந்தார்.
’கவிச்சக்ரவர்த்தி கம்பன்’ நூல் எழுதியவர்.
யோகியின் ’தமிழ் குமரி’ கவிதைத் தொகுப்பு ரொம்ப முக்கியமானது.
சிறந்த கவிதைத்தொகுப்பாம்.
அற்புதமான கவிதைகள் கொண்டிருந்திருக்கிறது.
காசில்லாக் கனகரத்தினம், மேரி மக்தலேனா, தமிழ்க்குமரி, ஜோதிச் சரிகை,கண்மணி ராஜம் போன்ற உன்னத கவிதைகள்.
கம்யூனிச எதிர்ப்பு கவிதைகள் ‘கம்மூனித் தெம்மாங்கு’ என்று எழுதினாராம். தெம்மாங்காக யோகியே பாடிக் கேட்பதை பற்றி க.நா.சு சிலாகிக்கிறார்.
ஒரு தாய் தாசி தன் மகளுக்கு சொல்லும் அறிவுரை ‘நற்றாயிரங்கல்’ காவியம். அதையும் அவரே பாடிக்காட்டுவார்.

யோகியின் அப்பா துரைசாமி ஐயர் ஒரு வக்கீல். அவரிடம் நன்கு ஆங்கிலம் கற்றார்.

இவருடைய மொழிபெயர்ப்புகள் உமர் கய்யாமின் கவிதைகள், அமெரிக்க கவி வால்ட் விட்மனின் Leaves of Grass.
மனிதனைப் பாடுவேன் என்று விட்மனின் அந்த படைப்பிலிருந்து பலவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். இது இப்போது மீண்டும் பதிப்பில் வருவது அவசியம்.
ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ நாவலை மொழிபெயர்த்திருக்கிறார்.
கவிதை, இலக்கியம், மேஜிக், யோகம், சாஸ்திரம், மரபு எல்லாவற்றிலும் தடம் பதித்தவர். மேஜிக் நிபுணர். இதையே வாழ்வோபாயமாக சில காலம் கொண்டிருந்திருக்கிறார்.
திருமூலர் மரபில் 49வது தலைமுறையினனாக வந்த சித்தராக தன்னைப் பற்றி நம்பியவர்.
திருமூலர் திருமந்திரத்தில் அணுவை பிளப்பதற்கு விஞ்ஞான வழி சொல்லியிருப்பதாக ஒரு தீஸிஸ் சப்மிட் செய்து அரசாங்கத்திடம் இருந்து அந்தக்காலத்தில் ரெண்டாயிரம் ரூபாய் பணம் வாங்கினார்.
திருமூலர் ஃபார்முலாவில் அணுவை பிளந்து காட்ட பத்து லட்சம் பட்ஜெட் போட்டு யோகி கவனப்படுத்திய போது, விஞ்ஞான நிலையத்தில் இருந்து பதில் ஏதும் இவருக்கு கிடைக்கவில்லை.
சிறுவனாக இருக்கும் போது ஊட்டியில் நடந்த பதினெண் சித்தர் கூட்டத்துக்கு யோகி கள்ளு வாங்கி வரும் பையனாக சேவை செய்தது பற்றித் தத்ரூபமாக வர்ணிப்பாராம்.
யோகியோடு பழகியதைப் பற்றி சிறந்த அதிர்ஷ்டம்  என்று க.நா.சு அபிப்ராயப்படுகிறார்.
”பலவிதங்களில் என் வாழ்க்கையும் மனமும் வளம் பெறுவதற்கு உதவியவர் ச.து.சு. யோகியார். தெரிந்து கொடுத்து உதவினார் என்று இல்லாமல் இருக்கலாம்; அவர் இருந்ததனாலே, அவரை அறிந்ததனாலேயே, தானாகவே என் வாழ்க்கை வளம் கூடியதாக நினைத்துப் பார்க்கும் போது தோன்றுகிறது.”
க.நா.சுவின் இந்த கனமான வார்த்தைகள்
பிரிட்டிஷ் இயக்குனரின் ”I Daniel Blake” படத்தின் வசனமொன்றை நினைக்கச் செய்கிறது.
“He gave us things that money cannot buy.”


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.