Share

Feb 3, 2025

கிளர்ந்தெழும் தாபம், அதி மதுர மதுர

கிளர்ந்தெழும் தாபம், அதி மதுர மதுர 
R.P. ராஜநாயஹம் நூல்கள் பற்றி 
வீரன்மணி பாலமுருகன்:
Veeranmani Balamurugan 

"இலக்கியத்தில் புனைவுகளில், அப்புனைவுகளில் சீமான் சீமாட்டிகளுக்கும் பிரபுகளுக்கும் கனவான்களுக்கும் , சாமானியனுக்கும் மட்டுமே இடமிருந்ததில்லை. இந்த உலகத்தால் கைவிட்டப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, வெறுக்கப் பட்ட குரூபிகளுக்கும், திருடர்களுக்கும், வேசைகளுக்கும் வஞ்சகர்களுக்கும் கூட இட மிருக்கிறது. அவர்களின் வாழ்வும் இலக்கிய அந்தஸ்து பெற்று இருக்கிறது.
 அந்த வகையில் தீவிர தமிழ் இலக்கியத்தில் அத்தகைய சில மனிதர்களின் வாழ்வியலை காட்சிப் படுத்தியவர்களில் 
எழுத்தாளர் ஜி. நாகராஜனுக்கு இங்கு முக்கிய இடமிருக்கிறது. அத்தகு விளிம்பு நிலை வாழ்வியலின் தாத்பரியத்தை ஜெயகாந்தன் போன்றவர்கள் அதை வெகு ஜனபரப்பில் விரித்து வெளிச்சம் பரப்பினார்கள்.
 இதன் தொடரச்சியான போக்குகளில் ஒன்றாகத்தான் எழுத்தாளர் பன்முக கலைஞர் R.P. ராஜநாயஹத்தின்  அனுபவ சித்திரங்களான இந்த மதுர அதி மதுர கிளர்ந்தெழும் தாபம் எனும் இரு தொகுப்புகள். 


இதில் கோவில்களும் கோபுரங்களும் நிறைந்த மாமதுரையின் அதே வீதிகளில் வாழ்ந்த வேசைகளைப் பற்றியும் சல்லிகளை பற்றியும் அவர்களின் அன்றாடங்கள் பற்றியும் சுவாரஸ்யம் மேலோங்க எழுதிச்செல்கிறார் R.P.ராஜநாயஹம். 

இது மதுரையின் கால நகர்வொன்றின் தனித்த அடையாளம். இது போன்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய நீங்கள் விரும்பத் தகாத ஒரு வாழ்வியல் சித்திரத்தை வேறு எங்கும் காண முடியாது. இணையங்களில் தேடி அடைய முடியாது. ஆனால் அக்காலத்தின் சாட்சியாக நின்று அதன் குறுக்கு வெட்டு தோற்றத்தை அளிக்கிறது இந்த இரு புத்தகங்கள். 

சிலர் இப்பதிவுகளை ஆபாசமும் அருவெறுப்பும் நிறைந்தது என நினைக்கக் கூடும். அப்படி நினைப்பவர்களுக்கு கலையம்ச குறைபாடு இருக்கிறது என்று தான் கருத்த முடியுமே தவிர வேறு சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது ஆபாசம் அல்ல அத்தகு சித்திரங்களுக்கு உயிரூட்டும் கச்சா பொருள்கள் என்றே வாசிப்பவர்கள். உணர்வார்கள். 

கி. ராஜநாராயணன், கழனியூரன் தொகுத்து நாட்டுப் புற பாலியல் கதைகள் மறைவாய் சொன்ன கதைகள் எனும் பெயரில் தொகுப்பாக வெளி வந்திருக்கிறது. அதை ஆபாசம் என்று சொல்ல முடியுமா? அதெல்லாம் இலக்கிய அந்தஸ்து பெற்ற கிராம வாழ்வியலின் அழிக்க முடியாத கல்வெட்டுகள். 

மனித வாழ்வியலில் கேலி, கிண்டல், ஆபாசம் என எல்லாவற்றுக்கும் இடமிருக்கிறது. பலர் நினைப்பது போன்ற இணையதள மலினமான போர்னோ ஆபாசங்கள் அல்ல அவை கலையின் அம்சங்கள்.
 இரண்டுக்கும் நுட்பமான பெரிய வேறு பாடு இருக்கிறது. 

இந்த நூலில் RP ராஜநாயஹம் எதையும் வலிந்து எழுதிச் செல்லவில்லை.
 தான் கண்டதை அப்படியே ஒரு சாட்சியின் வாக்கு மூலமாக தனது பாணியில் கூறிச் செல்கிறார். அவர் வழியாக அக் காட்சிகளை, மாந்தர்களை காணும் வாய்ப்பை நாம் எழுத்தின் வழி தரிசிக்கிறோம் அவ்வளவுதான்.
 தூங்கா நகரின் ஒரு காலகட்டத்தின் யாராலும் தீட்டப் படாத சித்திரம் இது வாசித்துப் பாருங்கள்.

 புதிய அனுபவங்களை 
RP ராஜநாயஹத்துடன் சேர்ந்து நீங்களும் பெறுவீர்கள்."

நூல்கள் கிடைக்குமிடம் 

ஜெய்கிரி பதிப்பகம்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.