Share

Oct 3, 2021

நடிகர் வீரராகவன்

 நடிகர் வீரராகவன். 


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். வெங்கடேஸ்வரா பால் கோவா கடையை 

'சிங்கு' கடை என்பார்கள். அதையொட்டி கோவிலுக்கு நுழையும் பகுதியில் பத்து வைஷ்ணவர்கள் சூழ நடு மையத்தில் அமர்ந்திருந்தார். 


அவரைப் பார்த்தவுடன் புன்னகையொன்றை

 என் முகத்தில் கவனித்தவுடன் 

எழுந்து இரு கை கூப்பி வணங்கினார். 

பதில் வணக்கம் செய்து விட்டு 

அவரிடம் சென்றேன்.

 சினிமா நடிகராக அடையாளம் கண்டதால் 

எழுந்து நின்று வணங்கினார் என்பது

 பெரிய விஷயம். 


அவர் மேஜர் சுந்தர்ராஜனின் தாய் மாமா. 

பிரபலமான 'ஞான ஒளி' நாடகத்தில் 

ஆண்டனியாக மேஜர் நடித்த போது 

இவர் தான் இன்ஸ்பெக்டர் லாரன்ஸாக நடித்தவர். 


எல். ஐ. சி. யில் வேலை பார்த்துக் கொண்டே திரைப்படங்களிலும் நடித்தவர். 


சென்னையில் ஷூட்டிங்கில் அவரை நான் பார்த்ததுண்டு. 

பாண்டி பஜார் பகுதியில் 

ஒரு பள்ளிக்கூடத்தில் ஷூட்டிங். 

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிக் கொண்டிருந்தார்.

வீரராகவன் பேராசிரியராக. 

அம்பிகாவும், ரவீந்தரும் கல்லூரி மாணவர்கள். 

பாடத்தை கவனிக்காமல் வகுப்பில் 

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டு, சைகையால் பேசிக்கொண்டு.. 

எஸ். ஏ. சந்திரசேகர் சிரித்த முகத்துடன்

 இயக்கிக் கொண்டு இருந்தார். இயக்குநராக பிரபலமாகாத காலம். 


வீரராகவன் எப்போதுமே சிரித்த முகத்துடன் தான் காணப்படுவார். 

படங்களில் கூட பொதுவாக சிரித்த முகத்துடன் தான் ஜட்ஜாக, வக்கீலாக, டாக்டராக,

 போலீஸ் ஆஃபிசராக, அப்பாவாக, 

பெரிய மனிதராக நடிப்பார். 


மேஜருக்கு பெரிய குளம் சொந்த ஊர். 

வீர ராகவன் சொன்னார் " நான் கும்பகோணம்"


உடனே நான் இலக்கியம் பேச ஆரம்பித்தேன். 

அவர் கு. ப. ரா, மௌனி, தி. ஜானகிராமன் படித்திருக்கிறார். திரிலோக சீதாராம் கூட அவருக்கு அறிமுகம். 

தமிழ் படங்களில் துணை நடிகர் ஒருவர்

 எம். வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு பற்றியெல்லாம் பேசியது வித்தியாசமாக இருந்தது. 


ஒரு நடிகராகவே அவர்  பேசுகையில் தன்னை காட்டிக் கொள்ளவில்லை. 

ஒரு பெரியவரிடம் அளவளாவிய திருப்தி.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.