Share

Oct 20, 2009

கவிதைக் கனி பிழிந்த சாற்றினிலே

புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமியும் " சிறுகதையில் கந்தசாமியிடம் கடவுள் எச்சரிக்கையுணர்வுடன் சொல்வார் :" உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம், உடன் இருந்து வாழ முடியாது "

கந்தசாமி இதற்கு கடவுள் முகத்தில் அடித்தாற்போல பதில் சொல்வார் ." உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு."

பிரபலமான தேவதேவன் கவிதை ஒன்று

"காட்சியளிப்பதே தன் கடமையென உணர்ந்தவராய்

எழுந்தார்

துயர் குழப்பமிக்க இவ்வுலகில்

தன் கடமை என்னவென்ற வெகு

யோசனைக்குப் பின் கடவுள் "

என்ன தான் எச்சரிக்கையாகவும் கௌரவ பிரக்ஞையுடனும் கடவுள் இருந்தாலும் அவரை டென்சன் ஆக்காமல் மானிட ஜன்மங்கள் இருப்பதில்லை . சமீபத்திய ஆனந்தவிகடன் ஒன்றில் 'யூத்து கூத்து' பகுதியில் ஒரு ஜோக் .

" கடவுள் எப்போ டென்சன் ஆவாரு "

" கல்யாணம் ஆகாத பொண்ணு கர்ப்பமாகி வயிறு ஊதிபோய் நிற்கும்போது அவங்க வீட்டிலே " ஐயோ கடவுளே ! இப்படி பண்ணிட்டியே !" ன்னு புலம்புறப்ப தான் "

....

ஊருக்கு சொல்லுமாம் பல்லி!கழனியில் விழுமாம் துள்ளி ! - இது சொலவடை .

பல்லி விழும் பலன் என்று சோதிட சாஸ்திரத்தில் ஒரு பகுதி உண்டு . " பல்லி தலையில் விழுந்தால் மரணம் " - இப்படி பீதி கிளப்பும் பலன்கள் !

வாலிழந்த பல்லியைப் பார்த்து பிரமிள் எது கவிதை எனக்கேட்டு எழுதிய கவிதை .

"கவிதை -

இறக்கத்துடிக்கும் வாலா?

உயிரோடு மீண்ட உடலா ?"

சுவரில் நிற்கும் பல்லி ஏன் அசையாமல் நிற்கிறது . சுவற்றையே தான் தான் தாங்கி சுமந்துகொண்டிருப்பதாய் பல்லி நினைக்குமாம் . தான் அசைந்தால் சுவர் விழுந்து வீட்டில் உள்ள மனிதர்கள் செத்து விடக்கூடாதே என்று ஆடாமல் அசையாமல் நிற்குமாம்!செருக்கு!நினைப்புக்கார பல்லி!

சுவற்றில் உள்ள பல்லியை பாப்லோ நெருடோ தன் கவிதையில் கூறுகிறார் :
“ A Drop of Crocodile on the wall”

மாம்பழத்தைப் பிழிந்தால் துளித்துளியாக மாம்பழச்சாறு தான் வரும் . திராட்சையைப் பிழிந்தால் துளித்துளியாக திராட்சைச்சாறு கிடைக்கும். ஆனால் கவிதைக்கனி பிழிகையில் வெளிவரும் சாறு அப்படியல்ல . -பல்லி A Drop of Crocodile ஆகிப் போகிறது.

6 comments:

  1. "மாம்பழத்தைப் பிழிந்தால் துளித்துளியாக மாம்பழச்சாறு தான் வரும் . திராட்சையைப் பிழிந்தால் துளித்துளியாக திராட்சைச்சாறு கிடைக்கும். ஆனால் கவிதைக்கனி பிழிகையில் வெளிவரும் சாறு அப்படியல்ல . -பல்லி A Drop of Crocodile ஆகிப் போகிறது." - Touché RPRji.

    ReplyDelete
  2. RPR!
    சமீபமாக உங்களின் பெரும்பாலான இடுகைகள் (இது உட்பட) சற்றே பூடகமாக, குறிப்பாக வேறு ஏதோ கருத்துக்கு பதிலடி கொடுப்பது போல் உள்ளதென்று நினைக்கிறேன்! பிரமையோ?!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  3. "கவிதை -

    இறக்கத்துடிக்கும் வாலா?

    உயிரோடு மீண்ட உடலா ?"

    “ A Drop of Crocodile on the wall”

    Only a poem has this power to express once thoughts in a varied multiple layers...!

    Poets... great human beings...

    ReplyDelete
  4. பிரமிளின் கவிதைகளில் ஒரு வித மிஸ்டிக் தன்மை எப்பொழுதும் இருக்கும்.

    ReplyDelete
  5. எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் உங்கள் பக்கத்தில் வந்து நிலைத்து விட்டேன்,சார்.

    என்னைத் தூண்டிய,எனக்குள் எந்த ஆர்வத்தினையும் தூண்டாத இரண்டு எதிர் முனைகளிலும் உங்களது எழுத்தின் பாணி என்னை ஆட்கொண்டது.

    ஆழ்மில்லாத இடம் எனக் காலை வைத்தால் ஆளையே விழுங்கிவிடும் ஆழத்தோடு ஓடும் நதி போல உங்களை நம்பிப் படிக்க முடியவில்லை!

    பரவசமான நன்றிகள்,நண்பரே.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.