Share

Oct 22, 2009

நாமக்கல் சேஷையங்கார்

நாமக்கல் நரசிம்ம ஐயங்காரின் பிரதான சிஷ்யன் சேஷையங்கார். இவர் திருக்குருங்குடியை சேர்ந்தவர் . ராமநாதபுரம்,கோயம்புத்தூர் ,சென்னை போன்ற ஊர்களில் சேஷையங்கார் வாழ்ந்தார். அவர் குருநாதர் ஊர் இவர் பெயருடன் சேர்ந்து நாமக்கல் சேஷையங்கார் என்றே அறியப்பட்டார் . வாத்தியார்களுக்கேல்லாம் வாத்தியார் என அந்தக்கால வித்வான்கள் நாமக்கல் சேஷையங்கார் பற்றி குறிப்பிடுவார்கள். இவர் மச்சினியும் வளர்ப்பு மகளுமாகிய எம் .எஸ் சௌந்தரம் பெற்ற மூத்த மகள் சியாமளா பாலகிருஷ்ணன் . பத்மாசுப்ரமணியத்தின் மூத்த அண்ணா தான் பாலகிருஷ்ணன்.


நாமக்கல் சேஷையங்காரின் சிஷ்யர்களில் பிரதானமானவர் சித்தூர் வி நாகய்யா.
நாகய்யா பற்றி ... எம். எஸ் . சுப்புலக்ஷ்மிக்கு ஜோடியாக ' மீரா ' படத்தில் நடித்தவர். புஷ்பவல்லிக்கும் ஒரு படத்தில்(கோரகும்பர் ) ஜோடியாக நடித்தவர் . அந்த புஷ்பவல்லி -நாகய்யா படத்தில் ஒரு சின்ன ரோல் ஜெமினி கணேசன் செய்திருக்கிறார். பின்னால் 1960களிலும் 1970களின் ஆரம்பத்திலும் அப்பா ரோல்,மாமனார் ரோல்களிலும் சாமியார் ரோல்களிலும் தமிழ் படங்களில் வந்து இடைவேளைக்கு முன் அல்லது படம் முடியுமுன் பெரும்பாலும் செத்துப்போவார் பாவம் . ஒரு பெரியவர் சொன்னார் . ஒரு படம் செகண்ட் ஷோ போயிருக்கிறார் . அந்த படத்தில் நாகய்யா இடைவேளையின் போதோ , அதன் பின்னரோ , என்ன எழவோ நாகய்யா இருமி அழுது கண்ணீர் விட்டு,நடுங்கும் குரலில் உருக்கமாக பேசிவிட்டு வழக்கம்போல செத்துப்போயிருக்கிறார் . படம் முடிந்து வீட்டுக்கு வந்து இரண்டரை மணி போல இந்த பெரியவர் தூங்கிவிட்டு காலை ஏழு மணிக்கு எழுந்து தினசரியைப் பிரித்தால் மூன்றாம் பக்கம் சின்ன புகைப்படத்துடன் " பத்மஸ்ரீ வி நாகய்யா மரணம் " என்று செய்தி சின்ன அளவில். செய்தி படித்த பெரியவருக்கு அதிர்ச்சி கிஞ்சித்தும் இல்லை . வருத்தமும் கொஞ்சம் கூட இல்லை . ஒரு ஐம்பது படத்திலாவது நாகய்யாவின் மரணத்தைப் பார்த்து சலித்திருந்த தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு யாருக்குமே இது செய்தியாக அப்போது சலனமேதும் ஏற்படுத்தவே இல்லை . ஆனால் நாகய்யா பன்முக ஆற்றல் நிறைந்தவர் . திரை இசைப் பாடல்களில் கூட இவர் சொந்தக்குரலில் பாடிய " திருமுருகா என ஒரு தரம் சொன்னால் உருகுது நெஞ்சம் " இன்றும் கேட்கக்கிடைக்கும். இப்போது தி நகர் பனகல் பார்க்கில் சிலையாக இன்று நிற்கிறார்!

நாமக்கல் சேஷையங்காரிடம் வைஜயந்தி மாலாவின் அம்மா வசுந்தரா இசை பயின்றிருக்கிறார் . டைகர் வரதாச்சாரியாரின் சிஷ்யன் பிரபல நடிகர் ரஞ்சன் கூட நாமக்கல் சேஷையங்காரிடம் பாடம் பயின்றவர் தான். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் இவரிடம் வந்து பல கீர்த்தனைகளை பாடம் கேட்டிருக்கிறார் .
நாமக்கல் சேஷையங்கார் அவர்களின் குருநாதர் நரசிம்ம ஐயங்கார் வீட்டுக்கு உஸ்தாத் அப்துல் கரீம்கான் கூட வந்து சங்கீத சர்ச்சைகளில் ஈடுபட்டிருக்கிறார் .

1955 ல் ஒரு நாள் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து மாலை நேரம் சந்தியாவந்தனம் , காயத்திரி, ராம ஜெபம் செய்து விட்டு கண் மூடிய நிலையில் பிரார்த்தித்த நிலையில் நாமக்கல் சேஷையங்கார் அமர்ந்திருக்கும்போது ,கோதுமைக்கஞ்சி இவருக்காக இவர் வீட்டு மாமி ( எம் .எஸ் . சௌந்தரத்தின் மூத்த சகோதரி ) எடுத்து வந்தபோது இவர் உயிர் பிரிந்தது .

நேர்மையான வாழ்க்கை சேஷையங்காரிடம் இருந்தது . ரொம்ப ஆச்சாரமான வாழ்வு வாழ்ந்திருக்கிறார் .

3 comments:

 1. சங்கீத உலகில் அவ்வளவாக பிரபலமடையாத நாமக்கல் சேஷையங்கார் போன்ற ‘Musicians' Musician'களை நினைவு கூர்வது மனதுக்கு உவப்பாகவிருக்கிறது.

  தில்லி கச்சேரிக்கு வந்திருந்த அரியக்குடியும், பாலக்காடு மணி அய்யரும் இந்த மகானைப்பற்றி ஒரு மாலைப்பொழுது முழுவதும் பேசிக்கொண்டிருந்தார்கள். அவரை சந்திக்கும் பாக்கியம் கிட்டவில்லை.

  நாகைய்யா தி.நகர் ப்ரும்ம கான சபாவின் Founder President என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  ராஜநாயஹம், இதைப்போல நிறைய எழுதவேண்டும். படிப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

  அன்புடன்,
  பாரதி மணி

  ReplyDelete
 2. "ராஜநாயஹம், இதைப்போல நிறைய எழுதவேண்டும். படிப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்". I am 200% with Bharathi Mani Sir on this.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.