Share

Mar 28, 2009

கூறாமல் சந்நியாசம் கொள்

'சித்தி ' என்று ஒரு கதை . சின்னம்மா என நினைத்து விடக்கூடாது . ஆத்மசித்தி ! புதுமைப்பித்தன் எழுதியது . சந்நியாசம் பற்றிய கதை தான் . சந்நியாசத்திற்கான பக்குவம் இல்லாமல் தவிப்பது பற்றி .இந்த கதையில் செண்பகராமன் என்பவர் அரைகுறை சந்நியாசி !
...
எனக்கு தெரிந்த  பெரியவர் ஒருவர் தீப்பெட்டி ஆபிஸ் அதிபர் .ரொம்ப கீழே ஏழையாய் இருந்து பின் பெரிய பணக்காரர் ஆனவர் . வயது அப்போது பதினைந்து வருடம் முன் எண்பத்திஒன்று . ரொம்ப ஆன்மீக தேடல் . நிறைய சுவாமியார்களை தேடியவர் . ஒரு சாமியாரிடம் கடைசியில் ஐக்கியமாகி அவரே தெய்வம் என பூஜித்துக்கொண்டிருந்தார் .
சம்சார,வியாபார வாழ்வு வாழ்ந்தார் . எப்போதும் என்னிடம் ' விரைவில் நான் சந்நியாசம் வாங்க வேண்டும் . இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி .முடித்தவுடன் கிளம்பி விடுவேன் . நீங்க சொல்லுங்க . .. நான் எப்ப சந்நியாசி ஆவேன் ' என பார்க்கும் போது எல்லாம் ' நான் சந்நியாசி ஆகணும் ' என்ற திரும்ப திரும்ப சொல்வார் .
அப்போது அவர் மனைவி இறந்து விட்டார் ! இவர் வடநாடு போயிருந்தார் . அவசரமாக திரும்பினார் . அவர் வந்தவுடன் காட்டுக்கு பிணம் கிளம்பியது . அறுபது வருடம் அந்த அம்மாவோடு வாழ்ந்தவர் . சுடுகாட்டில் பிணத்தை எரிப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் . அந்த நேரத்தில் இவர் காட்டில் தன் தீப்பெட்டி ஆபிஸ் கணக்குபிள்ளையை கூப்பிட்டு " சேட்டு சரக்குக்கு பணம் எவ்வளவு அனுப்பினான் " என்றார் . ' ஏப்பா மெழுகு வந்திடிச்சா " என்றார் .பேரனை கூப்பிட்டார் " சேட்டு லேபிளை மாத்த சொன்னான் . நான் முடியாதுன்னுட்டேன் . " " தீப்பட்டி ஆபிஸ் வேன் நான்கும் ஆர் டி ஒ ஆப்பிஸ் எப்ப ரெனியூவல் " மெக்கானிக் ரிப்பேர் வேலை பார்த்தாச்சா .'" ஏப்பா !கொத்தனார் காசி என்ன ரொம்ப காசு கேட்கிறான்" "ஆமா காட்டிலே மிளகா போட்டிருந்ததே . என்னாச்சி ?"
மனைவி பிணம் எரியூட்டப்படும் போது கூட பல வியாபார, வீட்டு விஷயங்களை அலசி கொண்டிருந்தார் .
.....
சில நாள் கழித்து பஜாரில் ஒரு கடையில் என்னை பார்த்தார் ." சொல்லுங்க ! நான் எப்ப சந்நியாசம் வாங்கணும் . இன்னும் தொழில் ,வீட்டு விஷயம் சில முடித்துவிட்டால் நான் கிளம்பிடுவேன் ." என்றார் .
இவருக்கு நான் ஒரு கதை சொன்னேன்.
" சிரகாரி ,சிரகாரி ன்னு ஒருத்தன் . அவன் பெண்டாட்டி அவனை கோபம் வரும் போது அடி வெளுத்து விடுவாள் . புருஷன் பொஞ்சாதி சண்டையில் புருஷனை உரித்து விடுவாள் .
இவன் வீட்டில் அடி வாங்கி வெளியே வந்து விழுந்து (தலையில் முடியில் நான்கைந்து ஈர்க்குச்சி) எழுந்து பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து " யோவ் ! உம்மகிட்ட சந்நியாசம் எப்படி வாங்குறது ன்னு நூறு தடவை கேட்டுட்டேன் . என்னை இந்த சண்டாளி கொலை செய்யுறதுக்கு முன்ன சொல்லி தொலையும் .இல்லேன்னா கொலை பழி உம்மேலே தான் . என் பாவம் உம்மை சும்மா விடாது "
பக்கத்து வீட்டுக்காரன் பதிலே சொல்லாமல் " வீட்டுக்குள்ள போ " என சமாதானமாக சொல்வான் . அடிக்கடி இப்படி அவன் அடி வாங்கும்போதெல்லாம் " யோவ் சந்நியாசம் எப்படி வாங்குறது சொல்லு .இந்த மூதேவி கிட்ட இருந்து தப்பிக்கணும் ." என்று பக்கத்து வீட்டுக்காரனிடம் புலம்புவான் .
ஒரு நாள் வீட்டுக்குள்ளிருந்து விளக்குமாறு அடி வாங்கி வெளியே வந்து விழுந்தவுடன் ' யோவ் சந்நியாசம் எப்படி வாங்குறது சொல்லுய்யா " என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.
பக்கத்து வீட்டுக்காரன் சட்டென்று எழுந்தான் . தான் கட்டியிருந்த நாலு முழ வேட்டியைவிருட்டென்று கிழித்து கோமணமாக தனக்கே கோமணமாக கட்டிக்கொண்டான் . " இப்படி தாண்டா ! " என சொல்லி விட்டு திரும்பியே பார்க்காமல் அவன் விறு விறு என நடந்து விட்டான் . பக்கத்து வீட்டுக்காரன் சந்நியாசி ஆகி கிளம்பி போயே விட்டான் !
இந்த சிரகாரி அடுத்த தடவை பொண்டாட்டி கிட்ட அடி வாங்கியவுடன் வெளியே தெருவுக்கு ஓடி வந்து எதிர்த்த வீட்டுக்காரனிடம் கேட்க ஆரம்பித்து விட்டான் " யோவ் சந்நியாசம் போறது எப்படி சொல்லுயா "
எப்படி கதை....
இந்த கதையை சொன்னவுடன் அங்கிருந்தவர்கள் எல்லாம் தீப்பெட்டி தொழில் அதிபரை பார்த்து சிரித்து விட்டார்கள் ! அவரும் சிரித்து விட்டார் .
நான் சொன்னேன் " நீங்க சந்நியாசி ஆகவே மாட்டிங்க ! நிறைய பேரை இன்னும் நீங்கள் சாமியாரா ஆக்க வேண்டியிருக்கு !"
சம்சாரியாகவே,வியாபாரியாகவே தான் சில வருடங்களுக்கு பின் அவர் இறந்தார் !

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.