R.P. ராஜநாயஹம் 'தழல் வீரம்' நூலுக்கு சரவணன் மாணிக்கவாசகம் முன்னுரை
ப. சிங்காரத்தைப் பார்க்கப் போயிருந்தோம். தமிழுக்கு இரண்டு நல்ல இலக்கிய நூல்களைக் கொடுத்தவர், முதுமைவாடை வீச அமர்ந்திருந்தார். அவரது படைப்புகள் குறித்து எதுவும் சிலாக்கியமான அபிப்ராயம் அவருக்கில்லை. அவரைப் பார்த்துவிட்டு வந்த பிறகு, அன்றைய பொழுது முழுக்க சிங்காரம் குறித்து, புயலிலே ஒருதோணி குறித்து நெருங்கிய ஒருவரின் துயரத்தைச் சொல்வது போல் அங்கலாய்த்துக் கொண்டே இருந்தார். அது தான் ராஜநாயஹம்.
இந்தத் தொகுப்பில் தான் மிக முக்கியமான கட்டுரையான 'ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை" அக்கட்டுரையின் பின்னான அரசியல் என்ற இணைப்புக் கட்டுரையும் இருக்கின்றன.
" ஊட்டிக்குப் போகாமல் சின்னவனின் சைக்கிளை சரி பண்ணியிருக்கலாம்" என்று முடியும் கட்டுரை இயலாமையையும், வேதனையையும் மட்டும் சொல்லவில்லை.
தமிழ் இலக்கியவாதிகள் தீவிர வாசகர்களுக்கு கையளிக்கும் பதில்மொய் வரிசையையும் சொல்கிறது.
இன்னொரு பிரபல எழுத்தாளர் நாங்கள் இருவரும் இருக்கையில் தான் சொன்னார்
" வாசகன் என்பதற்காகக் கிரீடம் எல்லாம் நாங்கள் வைக்க முடியாது".
இன்னமும், எல்லாக் காலங்களிலும் எழுத்தாளர்களை நேரில் சந்திக்க வாசகர்கள் சாரைசாரையாய் போய்க் கொண்டிருக்கிறார்கள். As flies to wanton boys நாம் எழுத்தாளர்களுக்கு.
The Catcher in the Rye இருவரில் யார் யாருக்குப் பரிந்துரை செய்தோம் என்பது நினைவிலில்லை. 2012ல் இந்த அமெரிக்க நாவல் குறித்து ராஜநாயஹம் எழுதி இருக்கிறார் என்பது நினைவிலிருந்தது.
தமிழில் பலரால் மறக்கப்பட்ட, கிருஷ்ணன் நம்பி, சார்வாகன், கோபி கிருஷ்ணன், சம்பத் போல யாருடைய பெயருக்குப் பின்னாலும் Slash ராஜநாயஹம் என்று டைப்செய்து பாருங்கள், கண்டிப்பாக ஒரு பதிவேனும் இருக்கும். இத்தொகுப்பிலும் சம்பத், கிருஷ்ணன் நம்பி குறித்து கட்டுரைகள் உள்ளன. கிருஷ்ணன் நம்பியின் 'தங்க ஒரு கதை" தமிழில் நல்லதொரு மாயயதார்த்தக் கதை.
கு.அழகிரிசாமி பற்றிய கட்டுரை கதைகளைப் பற்றி மட்டும் பேசாது, அவர் வெளியில் செருப்பை விடும் பாணியையும் சொல்கிறது.
1993ல் ஏ.வி.எம்.ராஜனின் பிரச்சாரம் குறித்த கட்டுரையில், 1965ல் "என்ன தான் முடிவு' படத்தில் ஏசுவைப்பற்றி அவர் சொல்வதும் வருகிறது. நினைவுகள் கால் நூற்றாண்டைத் தாண்டி ஒன்றுடன் ஒன்றை முடிச்சிடுகின்றன. நினைவுகள் சிலுவைகளாவது இப்படித்தான்.
இத் தொகுப்பில் இன்னும் எத்தனையோ பேர் வந்து போகிறார்கள், அவர்களை சுவாரசியமாக்குவது இவர் எழுத்து.
ஒன்றை வாசிக்கையில் வேறொன்று நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாதது. அது பிரத்தியேக வாசிப்பு அனுபவம். அதைத் தான் Mobi-dick - வாடிவாசல் கட்டுரை சொல்கிறது.
போர்ஹேயின் கதைகள் குறித்த கட்டுரையைப் படித்த உடனேயே, மதுரை சோமுவின் இசை பற்றிய கட்டுரை. சட்டென்று மாறும் சூழல் சர்ரியல் உலகை நினைவுறுத்திப் பின் சுயநினைவுக்கு வருகிறோம்.
இது தான் இவர் எழுதுவார் என்பதை யாரும், எப்போதும் யூகிக்கமுடியாது. அதுவும் தான் ராஜநாயஹம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.