Share

Oct 19, 2022

பார்த்த 'சாரதிகள்'

ஒவ்வொரு முறை கலைஞர் டிவிக்கு 'சினிமா எனும் பூதம்' தொடர் ஷூட்டிங் செல்லும் போதும், வரும் போதும் கேப் டிரைவர்கள் பலவிதமானவர்கள்.

நேற்று மாஸ்டர் பிரபாகர், மாஸ்டர் ராஜ்குமார் பற்றிய இரண்டு 'சினிமா எனும் பூதம்' ஷூட்.

கேப் டிரைவர் அஜித் ஒரு மலையாளி இளைஞர்.
கேப்பிடல் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். மோகன்லால் வீட்டுப் பக்கம் தான் டிரைவர் அஜித் வீடு.

சென்னை வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது.
அவருடைய தாய் மொழியில் தான் இயல்பாக பதில் பேசுகிறார்.

சமூக சூழலால், ஊடகங்களால் கொஞ்சம் கூட பாதிக்கப்படாத வாலிபன்.

கமல் தெரியவில்லை. 
"எனீக்கி அறியில்ல" என்பதாக பதில்.
'கமல்' என்ற வார்த்தை பாரதீய ஜனதா சிம்பலா? கை விரல்களை பூ போல் விரிக்கிறார். லேடிஸ் ஜுவல் 'கம்மல்' ? காதைத் தொட்டு கேட்கிறார்.

சக்கை போடு போட்ட கமலின்"விக்ரம்" சினிமா, டி.வி. பரபரப்பு கமலின் "பிக் பாஸ்" எதுவும் நிஜமாகவே தெரியவில்லை. போட்டோ பார்த்தால் கமல் தெரிந்த முகமா? பார்த்த முகமா? என்று கண்டு பிடிக்க முடியும். 
இதை மலையாளத்தில் அவர் சொல்லும் போது புரிந்து கொள்ள முடிகிறது.
அவருடைய ஜெனரல் நாலட்ஜில் ரஜினி, அஜித் இருக்கிறார்கள்.
விஜய் தெரியாது. கமல் தெரியாது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் என்பதை நன்கு அறிந்த டிரைவர் இந்த அஜித்.
உதயநிதி ஸ்டாலின் முதல்வரின் மகன் என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.

இது வரை தியேட்டருக்குப் போய் இரண்டே இரண்டு திரைப்படம்  பார்த்திருக்கிறார். ஒரு இந்திப் படம்.
'ஜெய்ஹோ' அந்த நடிகர் சல்மான் கானா என்று சந்தேகமாக குழம்புகிறார்.  இன்னொரு படம் மோகன்லால். படம் பெயர் ஞாபகம் இல்லை.

இன்னொரு டிரைவர். 
சினிமா எனும் பூதம் ஷூட் முடிந்து தேனாம்பேட்டையில் இருந்து மாம்பாக்கத்திற்கு கிளம்பும் போது வழியிலெல்லாம் 'மாம்பாக்கத்தில் உள்ள முருகேஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட வேண்டும். ஐநூறு வருட பாரம்பரியமான கோவில். கைங்கரியம் செய்யும் சிவனடியார்களை இந்த டிரைவர் நன்கு அறிந்தவர். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் பேராசிரியராக இருந்த பெரியநாயகம் என்ற சிவபக்தரிடம் இந்த மாம்பாக்கம் சிவன் கோவில் கைங்கரியம் பற்றி பேசினால் ஏதேனும் வழி பிறக்கலாம்.' என்று மிகுந்த அக்கறையுடன் பேசிக்கொண்டே வந்தார்.
அவருடைய பெயர் கேட்டேன். 
அந்த டிரைவர் பதில் "சார், என் பேரு கேப்ரியல்.நான் பெந்தகோஸ்து கிறிஸ்டியன்"

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.