Share

Nov 20, 2020

P. U. சின்னப்பா



ஒரு முழுமையான கச்சேரி பார்த்த திருப்தி 'ஜகதலப் பிரதாபன்' படத்தில்

 பி.யு. சின்னப்பா மூலம் கிடைக்கும்.


" தாயைப் பணிவேன் அன்புடனே தாயை பணிவேன். ஒரு தாயை பணிவேன் "- கல்யாணி ராகம்.

 இந்த பாடலில் விஷேசம் என்னவென்றால் மொத்தம் ஐந்து சின்னப்பாக்கள் இந்த பாடலில்!


 பாடகர் சின்னப்பா.

வயலின் வாசிப்பவரும் சின்னப்பா தான். 

மிருதங்க வித்வானும் சின்னப்பா.

இன்னொரு சின்னப்பா கஞ்சிரா வாசிப்பார். மற்றொரு சின்னப்பா கொன்னக்கோல் பாகவதர்!அமர்க்களம் தான். 

76 வருடங்களுக்கு முன் 

இப்படி புதுமை.


பின்னால் 'திருவிளையாடல் 'படத்தில் 

'பாட்டும் நானே பாவமும் நானே' பாட்டு 

சிவாஜிக்கு இதே போல அமைத்தார்கள். 


1944 ல் வெளி வந்த படம் ஜகதலப் பிரதாபன். அப்போது சின்னப்பாவுக்கு இருபத்தெட்டு வயது தான். 35வயதில் சின்னப்பா மறைந்து விட்டார். எம்ஜியாரை விட ஒரு வயது தான்

 மூத்தவர் சின்னப்பா. 


எம்ஜியார் பிறந்த ஜாதகத்தை வித்வான் வே.லட்சுமணன் 1911ல் வைத்து கணித்து குறித்தார். (ஏனென்றால் ஜாதகம் குறிக்க உண்மையான பிறந்த நேரம்,தேதி, வருடம் தேவையாயிற்றே)

அதன்படி பார்த்தால் எம்ஜியாரைவிட சின்னப்பா ஐந்து வயது இளையவர்.


எம். ஜி.ஆர் அமெரிக்கா ப்ரூக்ளின் ஹாஸ்பிடலில் இருந்து தமிழகம் திரும்பிய போது 

இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் அவர் வயது பற்றி" He is 67.But his old film world colleagues claim that he is 74. " என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


ஆனால் காலம்

எம்.கே .டி - பி .யு .சின்னப்பா ,

எம்ஜியார் -சிவாஜி ,

கமல் -ரஜினி

என திரைப்பட சகாப்தங்களை பிரித்தது!


எம் கே டி படங்களில் அவர் உட்கார்ந்தால் பாட்டு .. எழுந்தால் பாட்டு ...

நடக்கும்போது கூட ஒரு பாட்டு பாடுவார்.

 ஆள் ரொம்ப அழகானவர்.


 தியாக ராஜ பாகவதர் காலத்தில் 

பி யு சின்னப்பா அவருக்கு ஈடான நட்சத்திர நடிகர். 

குஸ்தி போடுவார்.

சொந்தக்குரலில் தான் பாடுவார்.

எம்.கே.டியை விட திறமையான நல்ல நடிகர்.


எம்.கே .டி பாடல்கள் ஜனரஞ்சகமானவை. 

ஆனால் பி .யு. சின்னப்பா பாடல்களை எல்லோரும் பாடிவிட முடியாது. 

சின்னப்பா தாளஞானம் மிகுந்தவர் என்பதால் அற்புதமாக ஸ்வரம் பாடுவார்.


"காதல் கனிரசமே, சந்ததம் கலாவதி 

மதி சேர் சரசே "சித்தரஞ்சனி ராகத்தில் 

'மங்கையர்க்கரசி 'யில் அஞ்சலி தேவியைப் 

பார்த்து பாடிய பாடல் பிரபலமானது. 


 'குமுதம்' வார இதழ் ஒன்றில் சின்னப்பாவின் மனைவி நடிகை கண்ணாம்பாஎன்று 'சுனிலிடம் கேளுங்கள் ' பகுதியில் தவறுதலாக ,அபத்தமாக குறிப்பிட்டிருந்தார்கள்.

 கண்ணாம்பா 'கண்ணகி ' திரைப்படத்தில் சின்னப்பாவின் ஜோடியாக நடித்தவர் தான்.

 ஆனால் அவருடைய கணவர் நாகபூசனம் என்பவர். 

இந்த நாகபூசனம் -கண்ணாம்பா தம்பதி 

பின்னால் எம்ஜியாரை வைத்து 'தாலி பாக்கியம் ' என்ற படம் தயாரித்து மிகுந்த அவஸ்தைக்கு உள்ளானார்கள்.

நாகபூஷனத்திற்கு பெருந்தொகை கொடுத்து படப்பிடிப்பு நேரத்தில் எம். ஜி. ஆர் உதவியதுண்டு. 


 கண்ணாம்பா வின் கணீரென்ற 'மனோகரா ' வசனம் யாராலும் மறக்கமுடியாதது.


... 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.