Share

Nov 7, 2020

டி. எம். எஸ். சினிமா பாட்டுக்கச்சேரி

 T. M. சௌந்தர்ராஜன் சினிமா பாட்டுக்கச்சேரி கேட்பது வேடிக்கையாக இருக்கும். 


'ஒரு பக்கம் பாக்கிறா ஒரு கண்ண சாக்கிறா, 

அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவா சிரிக்கிறா, சிரிக்கிறா, சிரிக்கிறா' பாடலை பாடுவதற்கு முன் கொணட்டுவார். 

 பல கொணஷ்டை  செய்து விட்டு அப்புறம் தான் பாடவே ஆரம்பிப்பார். பாடும் போதும் கொணட்டிக்கொண்டே தான் 

  இந்த பாட்டை பாடுவார். 

 'அர கொற வார்த்த சொல்லி பாதியை' என நிறுத்தி 'முழுங்குறா' என்பதை பாடாமல் முழுங்கி, சைகையில் சொல்வார்.


ஏதாவது ஒரு பாட்டின் இடையில் பாடுவதை நிறுத்தி ஆர்க்கெஸ்ட்ரா கலைஞர்களிடம் 

' எனக்குப் புரிஞ்சா தான் ஆடியன்ஸுக்குப் புரியும் ' என்று கண்டிப்பார். 


"கல்யாண சாப்பாடு போடவா, தம்பி கூட வா, "

பாடும் போது ' காரு வச்சி அழைக்கணும், கச்சேரி வைக்கணும் ' வரியடுத்து  நீளமாக பாகவதர் பாடுவது போல ரொம்ப நேரம் அனுபவித்து' ஸ்வர வரிசை' பாட ஆரம்பித்து விடுவார். ஸ்வர வரிசை பாடி முடித்து மெதுவாக 'காரு வச்சி அழைக்கணும், கச்சேரி வைக்கணும்' னு பாடலை தொடரும் போது ரசிகர்கள் விசிலும், கைத்தட்டலும் கலகலப்பாய் கேட்கும். 

சுதந்திரமாக ரொம்ப ரிலாக்ஸ்டாக 

டி. எம். எஸ் கச்சேரி. 


சிவாஜி பாட்டு பாடு, எம். ஜி.ஆர் பாட்டு பாடு என்று கட்சி கட்டுவார்கள். 


டி. எம். எஸ் நடித்த 'கல்லும் கனியாகும்' படப்பாடல் 

"கை விரலில் பிறந்தது ராகம், என் குரலில் வளர்ந்தது கீதம் " பாடும் போது எம். ஜி.ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு என்று கூப்பாடு. விசில் சத்தம். 

பாட்டை நிறுத்தி சௌந்தர்ராஜன்  உதட்டுக்குள் விரல் விட்டு சவாலாக பெரிய விசில் அடிப்பார். 

" எனக்கும் விசில் விடத்தெரியும் " 

Playfulness. 

ஆதங்கத்துடன் சலித்து சொல்வார் 

" அவங்க ரெண்டு பேருக்குமே 

என் குரல் தானடா. நான் பாடி நடிச்ச என் பாட்ட

 பாட  விட மாட்டேங்கிறீங்களேடா" 


சீரியஸான சினிமா பாடல் ரசிகர்கள் பலர் 'பாட்ட ஒழுங்கா பாடாம ஏன் இந்த சேட்ட' ன்னு எரிச்சல் கொள்வதுமுண்டு. 


சீர்காழி கோவிந்தராஜன் சினிமா பாட்டு கச்சேரியில் பாடும் போது 

குதூகலம், சோகம் என்ற பாவத்தை காட்டி கண்ணை உருட்டி, தலையை ஆட்டி வார்த்தைகளை அழுத்தி பாடுவார். பாடலில் கவனமாய் இருப்பார். 


' யோவ் சீர்காழி கச்சேரி தான்யா கேக்க நல்லாருக்கும் ' என்பவர்கள் உண்டு. 


..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.