Share

Oct 20, 2017

கிருஷ்ணன் நம்பி – சு.ரா- கி.ரா – சூரியோதயம்


சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவல் படித்தவர்கள் அதில் வருகிற சூரியோதய காட்சியை மறந்திருக்க முடியாது.
”அப்போது கிழக்கே சூரியனின் விளிம்பு தெரிந்தது. நகத்தைப் பிய்த்துக்கொண்ட விரலிலிருந்து ரத்தம் கசிவதைப்போல் சூரியன் வருகிறது. ரத்த வெள்ளம்….”
“காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, கீழே இறங்கி, பாதை விளிம்பில் நின்று கொண்டு சூரியோதயத்தைப் பார்த்தேன்…….அற்புதத்திலும் அற்புதமான அந்தக் காட்சியைப் பின்னகராமல் பார்த்துக்கொண்டிருந்தேன். மனித ஜென்மங்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் இது. அதிகாலையிலும், ஒவ்வொரு நாளும், ஒரே மாதிரியாகவும், அதே சமயம் வெவ்வேறு விதமாகவும், கணங்கள் தோறும் மாற்றிக்கொண்டும்………….
”ஒவ்வொரு நாளும் இந்த விசுவரூப தரிசனத்திலிருந்து நாம் பெறக்கூடியவற்றில் மேலான ஞானம் லகுவாகவும் பக்குவமாகவும் நமக்குக் கிடைக்கும். வேறு எதிலிருந்தும் பெற முடியாத ஞானம் இதிலிருந்து பெற முடியும்…..”
ஜே.ஜே.சில குறிப்புகள் நாவல் 1981ல் க்ரியா வெளியீடாக வந்த போது ஏற்படுத்திய பரபரப்பு…..
அசோகமித்திரன் ஜே.ஜே. பற்றி “ அண்ணாந்துன்னா பாக்க வேண்டியிருக்கு.”
மிக பிரமாதமாக 1985ல் அசோகமித்திரன் “ஒற்றன்” நாவல் மூலம் படைப்பாளியாக எதிர்வினையாற்றினார். ஜே.ஜேக்கு பதில் என்று புரிந்து கொள்ளக்கூடாது. ஜே.ஜேக்கு சரியான சவாலான நாவல்.
இந்திரா பார்த்தசாரதியின் “ஏசுவின் தோழர்கள்” கூட ஜே.ஜே சில குறிப்புகளுக்கு குறைந்த ஒன்று அல்ல.
பின்னாளில் பிரமிள் குறுநாவல் ‘ப்ரசன்னம்’ சு.ரா.வின் ஜே.ஜேவுக்கு எதிர்வினை என்று வெளிப்படையாக சொன்னார்.
ந.முத்துசாமி தன்னுடைய ‘உந்திச்சுழி’ நாடகத்தை ஜே.ஜே என்ற கதாபாத்திரத்திற்கே சமர்ப்பணம் செய்தார்.
ஜே.ஜே சில குறிப்புகள் நாவல் ஏராளமாய் விமர்சனத்தை எதிர்கொண்ட நாவல். சாரு நிவேதிதாவின் விமர்சனம் ரொம்ப பிரபலம்.

1984ம் ஆண்டு ‘ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு விமர்சனம்’ என்ற ஒரு சின்ன புத்தகம் சாரு நிவேதிதா எழுதியிருந்தார். ஜே.ஜே சில குறிப்புகளை கடுமையாக விமர்சிக்கையில் ஜே.ஜே ஏன் ஸாண்டவரி என்ற எக்ஸிஸ்டென்ஸியலிஸ்ட் போல இல்லை என்று கேட்டு, அரவிந்தாட்ச மேனன் ஏன் சார்த்தர் மாதிரியில்லையே என அதிருப்தியுற்று, மாஸேதுங் அழுக்காகவும் குளிக்காமலும் இருந்ததை மிகவும் சிலாகித்து, ஜெனேயை விடவா ஜே.ஜே பெரிய கொம்பன் என்றெல்லாம் சாரு நிவேதிதா கொந்தளித்திருந்தார்.


2002ல் ஜூலை 16ந்தேதி எனக்கு ஒரு ஈமெயில் அனுப்பினார். அதில் அவர் எழுதியுள்ளதை அப்படியே தருகிறேன்.
My dear R.P.Rajanayahem,

I totally rejected nearly sixty criticisms on J.J. 
Criticisms is a matter of opinion and opinions of writers always tend to vary, assuming they are recording their real voice, which is not often the case, especially in our milieu. 
Difference in opinions are understandable. But if anybody distorts FACTS that are standing in my favour, surely I will try to expose the deliberate falsifications of writers who ever they are.

- Sundara Ramaswamy 

ஜே.ஜே நாவலை கிருஷ்ணன் நம்பியின் நினைவுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் சுந்தர ராமசாமி.

சுந்தர ராமசாமியின் கிருஷ்ணன் நம்பியின் நினைவோடை (2003)யில் பிரசுரமானது. அதில் நம்பியும் சுராவும் பார்த்த சூரியோதயத்தைத் தான் ஜே.ஜேயில் விவரித்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
1976ல் நம்பி பிழைக்கவே இனி வழியில்லை என்ற மருத்துவ உண்மை தெரிந்த பின் நடந்த ஒரு நிகழ்வு.
“ அதிகாலையில் அவன் (கிருஷ்ணன் நம்பி) முதலில் எழுந்தான்.
 கொஞ்ச நேரம் கழித்துப் புறப்படுவோமே என்று சொன்னேன். புறப்பட்டோம்.
 கார் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ மீட்டர் போயிருக்கும். 
அப்போது தான் அந்த அருமையான சூரியோதயத்தை நாங்கள் பார்த்தோம். ஜே.ஜேயில் நான் விவரித்திருந்தது கூட அந்த சூரியோதயத்தைத்தான்.
 தென்னை மரங்களின் மேலாக சூரியன் மெல்ல மேலெலத்தொடங்கியிருந்தது. 
அந்தக் காட்சியை நன்றாக பார்ப்பதற்குத் தோதான இடத்தில் காரை நிறுத்தும்படிச் சொன்னான். இறங்கினோம். அங்கு ஒரு பாலம் இருந்தது. கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றோம். அங்கிருந்த திண்டில் அமர்ந்து கொண்டான். 
கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழியத்தொடங்கியது. அந்த சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காகத் தான் அவன் அதிகாலையில் புறப்பட வேண்டும் என்று சொன்னானா? இனி இது போன்ற காட்சிகளை பார்க்க முடியாதே என்ற விஷயத்தை, மரணத்தை அந்தக் காட்சி அவனுக்கு நினைவு படுத்தியதா…….?”
.............................

கி.ராஜநாராயணன் தன் தொண்ணூறாவது வயதில் குமுதத்தில் “வேதபுரத்தார்க்கு” என்ற சுயசரிதைத் தொடர் ஒன்றை 2012ல் ஆரம்பித்து எழுதி அது புத்தகமாக 2014 வந்திருக்கிறது.

அந்த வேதபுரத்தார்க்கு நூலில் கிருஷ்ணன் நம்பி நல்ல திடகாத்திரமாக, ஆரோக்கியமாக இருக்கும்போது கி.ராவுடன் ரயில் பயணத்தின் போது பார்த்த சூரியோதயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.ரா அதை விவரிக்கிறார் : “ மதுரையிலிருந்து கிருஷ்ணன் நம்பியுடன் நான். அதிகாலை நேரத்தில் ரயிலில் வந்து கொண்டிருந்தோம். கோவில் பட்டியைப் பார்த்து. வானம் வெளுக்க ஆரம்பித்தது.
இப்பொ ஒரு அதிசயம் நிகழப்போகிறது என்று கிருஷ்ணன் நம்பிக்குத் தெரியாது. காரணம் அவர் மேற்கே பார்த்துக்கொண்டிருந்தார், என்னிடம் பேசிக்கொண்டு.
மனசுக்குள் நான் அவரை திடீரென்று ‘அதெப் பாருங்க’ என்று கிழக்கே பார்க்க வைக்க வேண்டும்.
சில காட்சிகளை எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது கடல் அலைகளைப் பார்ப்பது போலெ. கடல் விளிம்பில், மலை முகட்டில் சூரியப் பிறப்பையும் மறைவதையும் பார்த்திருப்பார்கள். தரையில் அவை நிகழ்வதைப் பெரும்பாலோர் பார்க்க வாய்ப்புக்கள் கிடைத்திருக்காது.
ஒரு தாயின் வயிற்றிலிருந்து ஒரு குழந்தை உதிப்பது போல சூரியனின் தலை தெரிய ஆரம்பித்தது.
எதை இப்படி வாய்பிளந்து கவனிக்கிறார் என்று நம்பியும் திருப்பிக் கிழக்கே பார்த்தார். அவரையும் அந்தக் குழந்தைச்சந்தோசம் பற்றிக்கொண்டது.

“ஓ” என்று குரல் கொடுத்துக் கத்திக்கொண்டு ரயிலும் ஓடிக்கொண்டிருந்தது தாளத்துடன்.
ரயிலுடன் நம்பியும் சேர்ந்து ஆனந்தக்குரல் கொடுத்தார்.

கண்கூசாத ஒரு பிரம்மாண்டமான பவள உருண்டையாகக் காட்சி தந்தான் சூரியத்தேவன்.
இப்படி ஒரு வாய்ப்பு ஒருவருக்கு எப்போதாவது தான் வாய்க்கும்.”

……………………............

ஃப்ரஞ்ச் கவிஞன் ஆர்தர் ரைம்போவின் Eternity கவிதையில்
"It has been found again,
What? - "ETERNITY"
It is the sea fled away
with the sun!"


It has been found again. What? – Eternity. It is the sea gone with the sun.

it (the sun) will rise (again).

…………………………….


1 comment:

Note: Only a member of this blog may post a comment.