Share

Apr 19, 2016

மதுரை அமெரிக்கன் கல்லூரி







மதுரை என்றால் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில். மதுரையின் முக்கிய அடையாள சின்னம் அமெரிக்கன் கல்லூரி.



கத்தோலிக்க கல்வி  நிறுவனமொன்றில் (செயிண்ட் ஜோசப்’ஸ்) தான் திருச்சியில் பள்ளிக்கல்வி பயின்றேன்.
கல்லூரி வாழ்க்கை மதுரை அமெரிக்கன் கல்லூரி.

தமிழகத்தில் மிகப்பிரபலமான கலைக் கல்லூரிகள் சேசு சபை பாதிரிகளால் நடத்தப்படும் சென்னை லொயோலா கல்லூரி, திருச்சி ஜோசப் கல்லூரி, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி போன்றவை.
சி.எஸ்.ஐ ப்ராட்டஸ்டண்ட்களால் நடத்தப்படுபவை மதுரை அமெரிக்கன் கல்லூரி, வேலூர் ஊரிஸ் கல்லூரி முதலியன.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிப்பதென்பது ரொம்ப கௌரவமானதாக கருதப்படுகிறது. 

கத்தோலிக்க பாதிரிகள் நடத்தும் கல்லூரிகளுக்கு சற்றும் பிரபலத்தில் இளைத்ததல்ல இந்த ப்ராட்டஸ்டண்ட் அமெரிக்கன் கல்லூரி. 

மதுரையின் புராதனமான கலாச்சார அடையாளம் அமெரிக்கன் கல்லூரி.
மதுரை நகரம், மதுரையைச்சுற்றி உள்ள அத்தனை ஊர்காரர்களில் உள்ள இளைஞர்களும் படிக்க ஆசைப்பட்ட கல்லூரி என்றால் அது அமெரிக்கன் கல்லூரி.

பொதுவாகவே மதுரையைச்சுற்றி உள்ள ஊர்களில் உள்ளவர்கள் அனைவருமே ‘உங்க ஊர் எது?’ என்றால் ’மதுரை’ என்று தான் சொல்வார்கள். ’மதுரையில எந்த ஏரியா?’ உடனே  கொட்டாம்பட்டி, விருதுநகர், வாடிப்பட்டி, வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி, கம்பம், உத்தமபாளையம், பண்ணைபுரம் …இப்படித்தான் பதில்!


இன்று வாழ்க்கையைத் திரும்பிப்பார்க்கும்போது எத்தனையோ துயர முள்களால் கிழிக்கப்பட்டு விட்ட இதயம், பெருமைப்படுகிற விஷயம் அமெரிக்கன் கல்லூரி மாணவன் என்பது.

நான் என்றில்லை, அமெரிக்கன் கல்லூரியில் கடந்த நூறாண்டு காலங்களில் படித்த தாத்தா காலத்து அப்பா காலத்து மாணவர்கள் எல்லோருக்கும், எங்கள் காலத்து மாணவர்களுக்கும், அதன் பின் வந்துள்ள மாணவர்கள் யாவருக்கும் ’அமெரிக்கன் கல்லூரி மாணவன் நான்’ என்ற பெருமிதம் ஒரு சாசுவத உரிமை.

வாஷ்பன், டட்லி, சம்ப்ரோ, வாலஸ் என்று  நான்கு ஹாஸ்டல்கள் கொண்டது. 
கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள கல்லூரி.
தமுக்கம் மைதானம் பக்கத்தில் தான். மெடிக்கல் காலேஜ், மீனாட்சி காலேஜ், வக்ஃப்ஃபோர்டு காலேஜ், லேடி டோக் காலேஜ், யாதவா காலேஜ், சட்டக்கல்லூரி இவற்றிற்கு மத்தியில் அமெரிக்கன் கல்லூரி.

அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை மிகவும் விசேஷமானது.
இன்றைக்கு நான்  ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறையில் ஹேம்லெட் பாடம் எடுக்கும்போது வசந்தன் நினைவு வருகிறது.

 ஷேக்ஸ்பியர் " ஹேம்லெட் " பாடம் வசந்தன் நடத்தினார் . ஹேம்லெட் என்றால் வசந்தன் ஞாபகம் தான் இப்போதும் வரும் . இரண்டாம் ஆண்டு இதே நாடகத்தை D.யேசுதாஸ் என்ற புரொபெசர் நடத்த வந்தார். அப்போது பொலோநியஸ் காரக்டராகவே அவர் மாறி விடுவார்.இப்போதும் பொலோநியஸ் பாத்திரம் அவரை(DY )நினைவு படுத்தும்.
மார்க் ஆண்டனி என்றால் பேராசிரியர் ஆர்.நெடுமாறன் தான்! ஜான் சகாயம் தான் மார்லோவின் டாக்டர் ஃபாஸ்டஸ்.

எங்களுக்கு பெருமையான இன்னொரு விஷயம் எங்கள் தமிழாசிரியர் சாலமன் பாப்பையா.

அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த போது சேர்மன் பதவிக்குப் போட்டியிட்டு தோற்றேன்ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது என்னால் இன்றும் மறக்கமுடியாத விஷயம் ஒன்று. ஓட்டுக் கேட்டு கும்பிட்டு நடந்து வந்து கொண்டிருந்த என்னைத் தூக்கி தன் தோளில் உட்கார வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்த மாணவன் உண்டு! ஒரு முறை அல்ல. இப்படி பலமுறை
அந்தத் தேர்தலில் நான் தோற்றேன்.


தோல்வியடைந்த பின் கண் கலங்கிய நண்பர்களைத் தேற்ற,  நான் பாடிய பாடல்கள் அவர்களை மேலும்  நெகிழ்த்தி விட்டது.
அமெரிக்கன் கல்லூரியில் தேர்தலில் தோற்றவன் தான் ஹீரோ!

ந்தக்காலத்ில் முர இளர்குக்கு fashion அறிமுகப்பத்ுவு அமெரிக்கன் கல்லி English department Students ான்! ங்கைப்பார்த்த் ான் ர்ன் ட்ரெஸ் பற்றி அன்றெரிந்தொண்டார்கள்!
 


கல்லூரி கால விளையாட்டுப்பருவம் பற்றி எத்தனையோ நிகழ்வுகள் இன்றும் பசுமையாக இருக்கிறது.

டவுன் பஸ்சில் கல்லூரி நண்பர்களுடன் போய்க்கொண்டிருந்தேன்.
படிக்கிற காலம் கொஞ்சம் வேடிக்கை வினோதம் நிறைந்தது . பஸ்சில் மீனாக்ஷி காலேஜ் பெண் ஒருத்தியை பார்த்து பாலா  கமன்ட் அடிக்க ஆரம்பித்தான். இவனை கட்டுப்படுத்துவது எப்படி? தற்செயலாக ஒரு நல்ல ஐடியா!
' டே என் சொந்தக்கார பொண்ணுடா. பெரியம்மா மகள்.எனக்கு தங்கச்சிடா' என்றேன்.
பாலா  பதறிபோய் 'சாரி ..சாரிடா ' மிரண்டு விட்டான்.அடங்கி விட்டான்.

நாங்கள் அப்போது இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தது.இறங்கினோம்.
பஸ் புறப்பட்டதும் தான் அவனிடம் சொன்னேன். 'நான் சும்மா தாண்டா மாப்பிள்ளை சொன்னேன். ஒனக்கு எப்படி கடிவாளம் போட்டேன் பார்த்தியா ' பாலா  ' டே துரோகி! நயவஞ்சகா!! அந்த பெண் என்னை பார்த்து சிரித்தாள். அவள் கூடவே போவதாக இருந்தேன். கெடுத்து குட்டி சுவராக்கி விட்டாயே. என் வாழ்க்கையில் விளையாடி விட்டாயே, சைத்தானே அப்பாலே போ ' என பலவாறு திட்டி தீர்த்து விட்டான்.  அருண் தான் விழுந்து,விழுந்து சிரித்தான். 'டே மாப்பிள்ளை! சூப்பர்ரா!' என்று என்னை பாராட்டினான்.

மற்றொரு நாள். அமெரிக்கன் கல்லூரியில் ஒரு கிளாஸ் கேன்சல் ஆனதால்பிளின்ட் ஹௌஸ்’ முன் அமர்ந்திருந்தோம். ரவி, முபாரக், அருண்,ஜோ,முத்து, சீனி,பாலா எல்லோரும்.

ஒரு டீச்சர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்வது கல்லூரியின் முன்பக்கம் தெரிகிறது. உடனே பாலா  மூக்கு வியர்த்து விட்டது. ' டே அந்த டீச்செர் செம பிகர்டா ' என்று ஆரம்பித்தான். நிமிர்ந்து பார்த்தால் பகீர் என்று இருந்ததுஅருண் அக்கா! உடன் பிறந்த சகோதரி. அவருக்கு என்னையும் நன்கு தெரியும்.
பதறிபோய் நான் ' டே அருண் அக்காடா. " அருண் " டே என் அக்கா " என்கிறான்.
 பாலா" கொலைகாரன் ஆயிடுவேண்டா. இனிமே ஏமாற மாட்டேன்." 
கூப்பாடு போட்டு விட்டு ஓடிபோய் ' டீச்செர்! சூப்பர் டீச்சர்! ஆகா! எனக்கெல்லாம் சின்னபிள்ளையிலே இப்படி சூப்பர் பிகர் டீச்சர் கிடைக்கலையே.டாட்டா டீச்செர் .. அய்யய்யோ டீச்சர் போறாங்களே! ' என்று கண்டவாறு கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டான்.
இந்த அபத்தக்காட்சி முடியும் வரை வேறு வழியில்லாமல் ஆளுக்கொரு மரத்தின் பின்னால் நான், அருண் இருவருமே ஒளிந்து கொள்ளவேண்டியாதாகி விட்டது!


அமெரிக்கன் கல்லூரிஒபெர்லின் ஹால்’ முன் எனக்கும் மற்றொரு மாணவனுக்கும் வாய் தகராறு முற்றி கைகலப்பு என்று ஆகிவிட்டது.
என் மீது எந்த தவறும் கிடையாது. மதுரையில் அடிக்கடி பார்க்க கூடியது "கஞ்சா குடித்து மெண்டல் ஆவது. " அப்படி ஆனவன். என் மீது ஒரு எப்படியோ ஒரு பகையை மனத்தில் உருவாக்கி கொண்டான். Paranoid delusion. ஏற்கனவே பேராசிரியர்களின் ஓய்வறைக்கு சென்று பிரச்சினை செய்திருக்கிறான். இப்போது என்னிடம்.

இன்று வரை மன நிலை பாதித்தவர்களுக்கும் எனக்கும் ஒத்து போவதே இல்லை.என்னுடைய ராசி அப்படி.

திடீரென்று அவன் கத்தியை எடுத்து விட்டான்.
மதுரையில் கத்தியை சண்டையில் ஒருவன் எடுத்து விட்டால் மற்றவர்கள் ஒதுங்கி விடுவார்கள். விலக்கி விட மாட்டார்கள்.  
அவன் கத்தியால் குத்த பலமுறை கடுமையாக முயற்சிக்கிறான். ஆனால் நான் பயப்படாமல் அவனை அடிக்கிறேன். லாவகமாக கத்தி குத்திலிருந்து தப்பித்துக் கொண்டே அவனை தாக்குகிறேன்.

விலக்கி விட மாணவர்கள் எல்லோரும் பயப்பட்ட அந்த சூழலில்தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா என்னை பின் பக்கமாக வயிற்றோடு பிடித்து தூக்கி அந்த இடத்தை விட்டு வெளியேறி நடக்கும் போதே எங்கள் ஆங்கில பேராசிரியர் R.நெடு மாறன் அந்த கத்தி வைத்திருந்த மாணவனை இறுக்கமாக பிடித்து கொள்கிறார்.அவன் வேகம் தணியும் வரை அவர் பிடி தளரவே இல்லை! 

கத்திகுத்து விழுந்து உயிரையே இழந்திருக்க வேண்டிய என்னை அன்று காப்பாற்றியவர்கள் பேராசிரியர்கள் சாலமன் பாப்பையாவும்,நெடுமாறனும் தான்!

என் கல்லூரி காலத்தில் பாப்பையா எனக்கு பக்கத்து தெருக்காரர் கூட. அதனால் கல்லூரியில் பார்த்து கொள்வதோடு , ஏரியா வில் லீவு நாளையிலும் ..ரோடில் எப்போதும் அவருடன் உரையாடிகொள்ள முடியும்.

பெரியகுளத்தில் தபால் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது பாப்பையா,தமிழ்குடிமகன் எல்லாம் ஒரு வழக்காடு மன்றம் நடத்த வந்தார்கள்
 பாப்பையா நடுவர். உற்சாகமாக கூட்டத்தில் பேசிகொண்டிருந்தவர் முன் நான் போய் நின்றேன். அவ்வளவு கூட்டத்திலும் என்னை அடையாளம் கண்டு கொண்டு பேச்சை கொஞ்சம் நிறுத்தி என்னை பார்த்து " என்னய்யா இங்கே?" என்றார் . "இங்கே தபால் துறையில் வேலை செய்றேன் அய்யா." என்று நான் சொன்னேன் . "அப்படியா. ரொம்ப சந்தோசம் யா "- பதிலுக்கு அவர் சொல்லிவிட்டுஅதன் பின் தான் பட்டிமன்ற பணியை தொடர்ந்தார்.


எங்கள் ஆங்கிலத்துறை பேராசிரியர் R. நெடுமாறன்! "மார்க் ஆண்டனி "என்று தான இவரை பற்றி சொல்வேன் .இரண்டு திரை படங்களிலும் தலையை காட்டி இருக்கிறார்.
நெடுமாறன் ஆங்கிலத்தில் பேசி கேட்டால் இவருக்கு தமிழ் தெரியும் என்று யாரும் நம்ப மாட்டார்கள். அமெரிக்க ஆங்கிலம்! தமிழில் முழங்கும் போது இவருக்கு ஆங்கிலம் தெரியும் என்று நினைத்தே பார்க்க முடியாது.உச்சரிப்பு அவ்வளவு தெளிவாக இருக்கும்!
ஆர். நெடுமாறன்  மேற்கோள் காட்டிய தமிழ் புதுக்கவிதை ஒன்று.
வானத்தில் திரியும் பறவைகளை மட்டும் பாடாதீர்கள்
மலத்தில் நெளியும் புழுக்களையும் பாடுங்கள்!”






’மரத்தடி மகாராஜாக்கள்’ என்று கவிதைத்தொகுப்பு  நான் எடிட் செய்து வெளிவந்ததுண்டு. அது அந்தக்காலத்தில் மிகவும் பிரபலம்.
  பாட்டுப்போட்டியில் அமெரிக்கன் கல்லூரியில் பரிசு வாங்கியிருக்கிறேன். அனைத்துக்கல்லூரி பாட்டுப்போட்டியிலும் கூட பரிசு வாங்கினேன்.



 


கல்லூரி வாழ்க்கை முடியும்போது Candle light cermony  நடக்கும். Life is not a bed of roses! எல்லோரும் தேம்பித்தேம்பி அழுதது இன்றும் மறக்க முடியுமா?

பழைய புராதனமான கோவில்களைப் பார்க்கும்போது எனக்கு எப்போதும் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். சிற்பங்கள், கோபுரம் தரும் பிரமிப்பு மட்டுமல்ல, எத்தனை காலங்களாக எத்தனை ஆத்மாக்கள் தவித்து தங்கள் துயரங்களை சொல்லி புலம்பி அழுது பிரார்த்தித்த இடங்கள்.
அது போல எங்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின்  நீங்காத நினைவுகள் மாணவர்களின் இதயங்களில்  நூறாண்டு காலத்திற்கும் மேலாக ரீங்காரமிட்டுக்கொண்டு இருந்திருக்கிறது. இருக்கிறது. இனி வரப்போகிற காலங்களிலும் தான்!





3 comments:

  1. எங்களுக்கு பிடிக்காத கல்லூரி அமெரிக்கன் கல்லூரிதான் காரணம் ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் கதை தானுங்க ..நான் மதுரைக்கலூரி மாணவன்....

    உங்களுக்கு தெரியுமா உங்கள் கல்லூரி பேராசிரியர் தருமி என்ற பெயரிலும் உங்கள் கல்லூரி மாணவர் பரதேசி@நீயூயார்க் என்ற பெயரிலும் வலைத்தளம் நடத்திவருகிறார்கள்.

    ReplyDelete
  2. வானத்தில் திரியும் பறவைகளை மட்டும் பாடாதீர்கள்
    மலத்தில் நெளியும் புழுக்களையும் பாடுங்கள்..அருமையான blog

    ReplyDelete
  3. பழைய புராதனமான கோவில்களைப் பார்க்கும்போது எனக்கு எப்போதும் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். சிற்பங்கள், கோபுரம் தரும் பிரமிப்பு மட்டுமல்ல, எத்தனை காலங்களாக எத்தனை ஆத்மாக்கள் தவித்து தங்கள் துயரங்களை சொல்லி புலம்பி அழுது பிரார்த்தித்த இடங்கள்.
    ....
    This very reason gives me an aversion towards the newly built temples.I always tell to my friends that the concrete temples are mere buildings with Idols inside unlike the ancient temples.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.