Share

Oct 8, 2012

Child is the Father of the Man

Child is the Father of the Man



எல்கேஜி வகுப்பில் சேர்க்கும் போது என் மகன் கீர்த்தி யை பள்ளிக்கு முதல் நாள் அழைத்து சென்றிருந்த போது அங்கே மற்ற பிள்ளைகள் அனைத்தும் கதறி அழுது கொண்டிருந்தன. பெற்றோர் பிள்ளைகளை விட்டு விட்டு கிளம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு ஏதோ கொலைகளத்துக்கு கொண்டுவரப்பட்டு விட்டது போல குழந்தைகள் கதறி அழுது கொண்டிருந்தன. அந்த பள்ளி மிஸ் நான்கு பேர் தவித்துகொண்டிருந்தார்கள் . பெற்றோரை கிளம்ப சொல்லிகொண்டிருந்தார்கள்.
கீர்த்தியை வகுப்பு வாசலில் நிறுத்தினேன். அவனுடைய ஸ்கூல் பாக் தோள் மீது . என்னை பார்த்தான் ' நீ போப்பா ' என்றான் . அழுது கொண்டிருக்கும் குழந்தைகளை ஒரு பார்வை பார்த்தான் . நான் நின்று கொண்டிருந்தேன் . மிஸ் ஒருவர் வந்தார் . பையன் பெயர் கேட்டார் . சொன்னேன் . உடனே ' நீ வீட்டுக்கு போப்பா 'என்றான் . மிஸ் ஆச்சரியப்பட்டார் . அழாமல் ஒரு குழந்தை . வகுப்பிற்குள் நுழையும்போது திரும்ப என்னை பார்த்து ' போப்பா ' மறுபடியும் !வகுப்பிற்குள் சென்று மிஸ் சொன்ன இடத்தில் உட்கார்ந்த பின் அழுகின்ற அவனுடைய வகுப்பு தோழர்களை பார்த்தான். வெளியே ஆர்வத்துடன் நிற்கும் என்னை பார்த்து பார்வையால் 'ஏன் இன்னும் நிற்கிறாய் ?' வினவி, தலையால் 'போப்பா நீ ' சைகை . மிஸ் நான்கு பேரும் வியந்து நின்றார்கள்.



............................................




நான் முதலில் இங்கே திருப்பூர் வந்து வேலைக்கு சேர்ந்த பதினைந்தாம் நாள் திருச்சி போய் கீர்த்தியை ( பதினேழு வயது ) இங்கே வேலை பார்க்க அழைத்து வந்தேன். அப்போது குடும்பம் இன்னும் திருச்சியில் .நான் வேலை பார்த்த இடத்திலிருந்து பதினாறு கிலோ மீட்டர் தூரத்தில் கீர்த்தி வேலைக்கு சேர வேண்டிய நிறுவனம் . மூன்று பஸ் மாறி செல்ல வேண்டியிருக்கிறது . 'பச்சை பாலகனை வேலைக்கு விட வேண்டியிருக்கிறதே' . நான் வேலை பார்த்த நிறுவனத்தின் மேனேஜர் முதல் வாட்ச்மேன் வரை தலையில் அடித்துகொன்டார்கள்.
பஸ்ஸில் வரும்போது குமுறி அழுகிறேன் . கண்ணீர் வடிய குமுறி அழுகிறேன் .
கோடை விடுமுறை நேரம் . பையன்கள் ஆங்காங்கே கிரிக்கெட் விளையாண்டு கொண்டிருக்கிறார்கள் . திருச்சியில் விடுமுறை தினங்களில் சிறுவர்கள் ,இவன் தோழர்கள் இவனை தேடி கிரிக்கெட் விளையாட கூப்பிட வந்து விடுவார்கள் .'அங்கிள் ! இவன் தான் எங்க டீமுக்கு டெண்டுல்கர் ! விளையாட அனுப்புங்க அங்கிள் ! 'திருச்சியில் அந்த நேரத்தில் செஸ் விளையாட்டிலும் Under 18 district champion!இப்போது வேலை பார்க்க திருப்பூரில்.கீர்த்தி அப்போது பஸ்ஸில் ஜன்னல் ஓரமிருந்து என்னிடம் பேசிய ஒரே வார்த்தை ' கிரிக்கெட் வெளையாடுறாங்கப்பா 'என் நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது . வாயில் கர்சிப்ப்பை வைத்து அழுத்திக்கொண்டு அழுகிறேன் .


பைபிள் பழைய ஏற்பாட்டில் ஒரு காட்சி.



  கடவுள் கேட்டார். அதனால் மகன் ஐசக்கை கொன்று பலி கொடுக்க வேண்டி அழைத்து கொண்டு மலையேறும் ஆப்ரகாம்.


திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறங்கி ஒரு முக்கால் கிலோ மீட்டர் நடை . வாய் விட்டு அழுகிறேன் . கீர்த்தி இறுக்கமாக ' அழாதப்பா '
பனியன் கம்பனியில் அவனை ஒப்படைக்கிறேன் . அவனை இருவர் புரடக்சன் பகுதிக்கு அழைத்து செல்கிறார்கள் . அவர்கள் அவனிடம் வேலை என்ன என்று விளக்குவதை அலுவலக கண்ணாடி மூலம் பார்க்க முடிகிறது. அவன் கவனமாக கேட்டுக்கொண்டு தலையாட்டி கொண்டு இயல்பாக உடனே பனியன்களை கணக்கிட ஆரம்பிக்கும் போது அங்கிருந்தே என்னை பார்க்கிறான். தலையை ஆட்டி என்னை பார்த்து உதடு அசைத்து சொல்வது எனக்கு பார்க்க கிடைக்கிறது.

'நீ போப்பா '


https://www.youtube.com/watch?v=Z6tfy5NK_kQ


 
..............

கீர்த்தியின் தம்பி அஷ்வத்

 
 
என் மனைவி இரண்டாம் முறை கருவுற்ற போது அதனை ஏற்க மறுத்து நமக்கு கீர்த்தி ஒரு குழந்தை போதுமே என்று சொல்லி அதனை அபோர்சன் செய்ய முயன்றேன் . டாக்டரம்மா இந்த குழந்தையை பெற்று கொள்ள வற்புறுத்தினார். துணைவியாருக்கு விருப்பம். நான் வேண்டாம் என்று பிடிவாதம் செய்தேன்.
அபார்சன் செய்ய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றேன். இருபத்தைந்து பேருக்கு அபார்சன் செய்த பின் என் மனைவியை பார்த்த மூன்று லேடி டாக்டர்ஸ் என்னை கூப்பிட்டார்கள் . மூத்தவனுக்கு ஐந்து வயது . அதனால் இந்த குழந்தையை கருகலைப்பு செய்ய வேண்டாம். பெண்ணும் பலகீனமாக இருக்கிறாள் . அவளுக்கு குழந்தை வேண்டும் என்கிறாள் . - இப்படி சொல்லி அபார்சன் வேண்டாம் - தீர்மானமாக கூறி விட்டார்கள்.
கொலைகளத்துக்கு போய் தப்பித்தவன் ஆகையால் சிரஞ்சிவி என்பதாலும் என் தந்தை பாசத்திற்கு பிராயசித்தமாகவும் துரோணர் மகன் பெயரை அஷ்வத்தாமா சுருக்கி பெயர் -அஷ்வத் !

அஷ்வத் ஒரு நாள் நான்கு வயதில் மொட்டை மாடியில் இரவில் வானத்து நட்சத்திரங்களை பார்த்து விட்டு சொன்னான் .
" அப்பா! கடவுளோட வீடு ரொம்ப பெரிசு . எத்தனை லைட் பாரு !! கடவுளோட வீடு ரொம்ப பெரிசு . நிறைய லைட் இருக்கு !!

நான்காம் வகுப்பு படிக்கும் போது அவனுடைய பள்ளிக்கு ஜாதி சான்றிதல் தர சொல்லி கேட்டார்கள் . இல்லத்து பிள்ளைமார் .(B . C .) அதற்கான ஆயத்த வேளையில் இருந்த போது இவன் பள்ளியிலிருந்து வந்து ”காலாண்டு பரீட்சை எழுத விடவில்லை . ஜாதி சான்றிதழ் இருந்தால் தான் எழுத விடுவோம் என்கிறார்கள்” என்றான் . வருடம் ஒரு பெரிய தொகை, மாதம் ஒரு தொகை என்று பெரிய வசூல் பண்ணிய பள்ளி. நான் போய் கோபத்தோடு சத்தம் போட்டு ஒரு காட்சி நடத்தவேண்டி வந்தது. அதன் பின் பரீட்சை எழுத விட்டார்கள்.அதன் பின் ஜாதி சான்றிதல் பெரும்பாடு பட்டு வாங்கி கொடுத்து விட்டேன். ஆனால் பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் சமாதானம் ஆகாமல் அஷ்வத்தை அவமானப்படுத்தியிருக்கிறார்கள் . தமிழ் மிஸ் ' ஏண்டா ! ஏதாவது ஒண்ணுன்னா உங்கப்பா கிட்ட சொல்லுவே . அவர் வந்து எங்க கிட்ட தகராறு பண்ணுவாரு !' என்று ஒரு நாளைக்கு பத்து தடவை அவனை சீண்டியிருக்கிறாள் .
அடுத்து வந்த பரிட்சையில் இவன் ஒரு காரியம் செய்து விட்டான் . அவன் பள்ளி நிர்வாகி இத்தனைக்கும் 'குழந்தைகள் டாக்டர் ' அந்த டாக்டர் ' பள்ளியின் மானமே போய் விட்டது . எட்டு வயதில் இப்படி செய்பவன் நாளைக்கு நக்சலைட் ஆகி நாட்டையே நாசம் பண்ணி விடுவான் . இவனை பள்ளியில் இருந்து ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்கிறோம் ' - இப்படி சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்கு என்று ஆடினான் . ' அன்னைக்கு வந்து கத்துனே . இப்ப என்ன சொல்லுறே ?பிள்ளையா பெத்துருக்கிரே ' என்று அர்த்தம் . டிஸ்மிஸ் செய்தால் பீஸ் கட் ஆகி வருமானம் போய் விடுமே . அதனால் தான் சஸ்பெண்ட் செய்தான்.
வீட்டுக்கு அழைத்து வந்து அஷ்வத்திடம் விவரம் கேட்ட போது ' தமிழ் மிஸ் எப்பவும் திட்டிகிட்டே தலையில் கொட்டியதால் தமிழ் பரிட்சையில் கேள் விக்கு பதில் திருவள்ளுவர் என்று தெரிந்தும் அப்படி எழுதினேன் என ரவ்த்ரமாக சொன்னான்.
தமிழ் பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்வி

திருக்குறளை எழுதியவர் யார் ?
அஷ்வத் எழுதிய பதில்

எவனுக்கு தெரியும் ?


......

9 comments:

  1. correct answer.considering the toture inflicted upon him

    ReplyDelete
  2. எல்லாப் பெற்றோர்களுக்கும் ஏற்படுகின்ற அனுபவம் தான். ஆனால் நீங்கள் எழுதிய விதம் என் நெஞ்சத்தைத் தொட்டது. எனது இரு மகன்களையும் பள்ளியில் சேர்த்த முதல் நாளன்று துக்கம் தொண்டையை அடைக்க நான் மறைவாக தூரத்தில் இருந்தப்டி அவர்கள் உள்ளே நுழைகின்ற வரையில் பார்த்து நின்றது நினைவுக்கு வருகிறது. பின்னர் அவர்கள் இருவரும் பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்களில் வார விடுமுறையில் சென்னைக்கு வ்ருவார்கள். இரவு 11 மணி ப்ஸ்ஸில் ஏற்றிவிட்டு பஸ் நகர்ந்ததும் ஜன்னல் வழியே முகம் தெரிகிறதா என்று பார்த்து நிற்பேன். அது தான் பாசம்.

    ReplyDelete
  3. எவனுக்கு தெரியும்? Excellent.

    ReplyDelete
  4. சிந்திப்பவன்Tuesday, 09 October, 2012

    இதுதாண்டா Blog !

    ReplyDelete
  5. கடைவீதியில் ராஜா மாதிரி இருந்த அப்பா ஐ.பி குடுக்கும் நிலைக்குப் போனார். தஞ்சைக்குச் சென்று தன் தம்பி வீட்டில் தங்கிவிட்டார். போய் தைரியம் சொல்லி அழைத்து வந்து புதுகை பஸ்டான்டில் இறங்கியபோது அவர் சொன்ன வார்த்தை " இளம் வயதில் தோற்கும் உனக்கு நான் சொல்ல வேண்டிய ஆறுதலை நீ எனக்குச் சொல்லும்படி இறைவன் என்னை வைத்துவிட்டான்". அப்போ எனக்கும் 16 முடிஞ்சு 17 நடந்துகொண்டு இருந்தது. You made me to stir up my memories.

    ReplyDelete
  6. பொதுவாக சிரிக்க வைத்து அழ வைப்பார்கலள் நீங்கள் அழ வைத்து சிரிக்க வைத்து விட்டீர்கள்

    ReplyDelete
  7. சிவஞானம்ஜி,Benoit,சிந்திப்பவன்,பிரபு ராஜதுரை என் நன்றி.
    ஐயா ராமதுரை,புதுகை அப்துல்லா உங்கள் அனுபவபகிர்வு மிகவும் நெகிழ்த்துகிறது.மிகவும் நன்றி.

    ReplyDelete
  8. 7வது 8வது வகுப்புகளில் நான் பலதடவை வாத்தியாருக்காக பேப்பர் திருத்தியிருக்கிறேன். வரலாறு பரீட்சையின் ஒரு மாணவனின் பதில் இன்றும் ஞாபகத்தில் உள்ளது.
    ‘அலெக்ஸாண்டர் எந்த வழியே திரும்பினார்?’
    ‘வந்த வழியே திரும்பினார்’

    ReplyDelete
  9. thought provoking write up, the comment by Abullah - no words to say

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.