Share

Oct 9, 2012

இமையத்தின் ஆறுமுகம்


இமையத்தின் முதல் நாவல்’கோவேறு கழுதைகளி’ல் ஆரோக்கியத்தின் சின்ன மகன் பீட்டர் ‘சாமிங்கறது ஒண்ணுமில்ல’ என்று அந்தோணியார் கோவிலிலே பகுத்தறிவு வாதம் பேசுவான்.இதை ‘ஆறுமுகந்தான் சொன்னாரு’என்பான். துணி வெளுக்கிற தொரப்பாட்டில் ‘இம்புட்டுத் தண்ணியும் கடலுல போய் சேருமாம்.ஆறுமுகம் சொன்னாரு’என்று பொது அறிவு பேசுவான்.கடைசியாக பீட்டர் இந்த ஆறுமுகத்தோடு தான் சென்னைக்கு ஓடிப்போவான்.நேரடியான கதாபாத்திரமாக இல்லாமல் பீட்டர் மூலமாகவே அறியப்படும் இந்த ’ஆறுமுகம்’ தான் இமையத்தின் இரண்டாவது நாவலின் நாயகனாயிருப்பானோ என்ற நினைப்புத் தான் முதலில் ஏற்பட்டது.

புதுமைப்பித்தனின் ‘புதிய நந்தன்’, ந.பிச்சமூர்த்தியின் ‘அடகு’,கு.ப.ராவின் ‘பண்ணைச்செங்கான்’,’வாழ்க்கைக் காட்சி’ போன்ற கதைகள் தலித்களைப் பற்றிய நேர்மையான அக்கறையுடன் எழுதப்பட்டவை.தி.ஜா.வின் ‘எருமைப் பொங்கல்’ தலித் குறியீட்டுக் கதையாகவே தெரிகிறது,பூமணியின் ‘பிறகு’ முழுமையான தலித் நாவல்.

தலித் ஒரு அனுபவம்.ஒரு தலித்தால் தான் தலித்களைப் பற்றி எழுத முடியும் என்று சொல்லப்படுகிறது.அரசாங்க அமைப்பின் மிக உச்ச பதவியில் அமர்ந்துகொண்டு சகல சுக,சௌகரியங்கள்,சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு,பன்னிவிட்டைப் பொறுக்குவதைப் பற்றி எழுதுவது தலித் இலக்கியம் ஆகும்போது,எந்தப் பாதுகாப்புமில்லாமல்,சகல சவால்களோடு வறுமையின் பிடியில் சிக்கிய நிலையில் கு.ப.ரா.’வாழ்க்கைக் காட்சி’எழுதியதும் ந.பிச்சமூர்த்தி ‘அடகு’ எழுதியதும் ஏன் தலித் இலக்கியமாகாது.

இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ பறையர்களுக்கு துணி வெளுக்கிற பறை வண்ணார்களின் சொல்லொனாத் துயரம் பற்றிய விரிவான சித்திரம். இதே காரணத்திற்காக தலித்திற்கு எதிரானதாக சிலரால் முகஞ்சுழித்து அடையாளமிடப்பட்டது-”மேல் ஜாதிக்காரன் கீழ் ஜாதிக்காரனை Exploit செய்வதைப் பற்றி எழுதுவது தான் தலித் இலக்கியம்.தலித்தே தலித்தை கொடுமை செய்வதாக எழுதலாமா?..

”பூர்ஷ்வாவை விமர்சிப்பது தான் முற்போக்கு.எங்கள் உள் விவகாரங்களை விமர்சித்தால் மார்க்சீய விரோதம்” என்று இடது சாரிகள் கூச்சலிட்டு தருக்கம் செய்தது போல.

புதுவை சூழல்,தனப்பாக்கியம்,அவள் மகன் ஆறுமுகம்.

ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’, தி.ஜா.வின் ‘அம்மா வந்தாள்’ நாயகர்களுக்கு ஏற்பட்ட அதே அவசம்,மன உளைச்சல் ஆறுமுகத்திற்கும் ஏற்படுகிறது.முத்துக் கிழவர்,ராமன்,தர்மமூர்த்தி,சின்னப்பொன்னு,பாக்கியம்,குப்புசாமி,தங்கமணி, அபிதா என்று நாவலில் பலர் வந்தாலும் வசந்தாவின் பாத்திரம் ரத்தமும் சதையுமாக உருவாகியிருக்கிறது.

ஜெர்ரி ஆல்பர்ட்,ஜார்ஜ் ஸ்டீபன்,புஷ்பா மேரி, காஜாபாய் இவர்களைப் பற்றிய குறிப்புகள் மைனாரிட்டிகளுக்கு எதிரானதா? வன்னிமரம் பற்றிய வசந்தாவின் கனவு அவளைப் புனிதப்படுத்துகிற விஷயமா? என்ற கோபமான விவாதங்களுக்கு இடமேற்படலாம்.சந்தேக தாமஸ்கள் இங்கே நிறைய இருக்கிறார்கள்.

ந.பிச்சமூர்த்தியின் ‘காவல்’கதையில் வருகிற சிறுவன் நரியன் போல,ஆறுமுகமும் வெள்ளைக்காரன் ஜெர்ரி ஆல்பர்ட்டை வெறுப்புடன் தான் பார்க்கிறான்.ஜெர்ரியை அம்மாவுடன் படுக்கையில் பார்த்ததுமே ஆறுமுகத்தின் ஓட்டம் ஆரம்பித்து விடுகிறது.சின்னப்பொண்ணு,வசந்தா,பாக்கியம் என்று பல அம்மாக்களைப் பார்க்கிறான்.அடுத்தடுத்து அதிர்ச்சி ஏற்படும்போதெல்லாம் விலகி ஓடுகிறான்.தன் தலை மேல் முள்முடி ஒன்றை ஏற்றுக்கொண்ட பாவனையுடன், தர்மமூர்த்தி செய்யும் PIMP வேலையையும் செய்கிறான், அந்த மோசமான சூழலிலும் ஆறுமுகம் SEX விஷயத்தில் பழக்கமில்லாதவனாக இமையம் காட்டுகிறார்.

கடைசியில் அந்தக்கால சினிமாப் படம் சுப்புரத்தின தாசன் வசனம் எழுதிய “மங்கையர்க்கரசி’நாயகன் பி.யூ.சின்னப்பா போல,தாயைப் பெண்டாள வந்த சண்டாளனாக, தனபாக்கியத்தை சந்திக்க வேண்டிய அவல துர்ப்பாக்கியம் ஆறுமுகத்திற்கு நேரிடுகிறது.மனப் பக்குவத்துடன் தன் தாயிடம் “நீ உசிரோட இருக்கிற.அதுபோதும்.கனவை ஒருத்தரும் சும்மாடு கட்டி சொமந்துகிட்டுத் திரியறதில்லே. நேத்துங்கிறது பொணம்”என்றெல்லாம் சொல்லித் தேற்ற முயல்கிறான்.

தனபாக்கியம்”என்னெ மூளியாக்கினீங்க. சீதய கானகத்துல வுட்டாப்ல என்னையும் வுட்டு வேடிக்கை பாத்துட்டீங்களே’ என்று புலம்புவது,உருவகமாக நாவலாசிரியரைக் குற்றஞ்சாட்டுவது போல் தோன்றுகிறது.

தனபாக்கியம் தூக்குப்போட்டுக்கொண்டு செத்துப் போகிறாள். இனி மீண்டும் ஆறுமுகம் அடுத்த ஓட்டத்தை ஆரம்பிக்கவேண்டும்.இதற்கப்புறம் தான் ஆறுமுகம் ‘கோவேறு கழுதைகள்’ பீட்டரை சந்தித்து,பின்னர் சென்னைக்கு ஓடிப் போகிறானோ என்னவோ.

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.