Share

Feb 7, 2017

வெங்கடேஷ் சக்ரவர்த்தி


மதுரையில் ராஜாஜி மருத்துவமனையில் என் மாமா அட்மிட் ஆகியிருந்தார். அதே வார்டில் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் பாட்டி பேஷண்ட். வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் சகோதரி குட்டி பத்மினி. இவர்களின் தாயார் ராதாபாய்(ரூத்) அவர்களின் தாயார் தான் ஹாஸ்பிடலில்.
குட்டி பத்மினியின் பாட்டி என்பதால் அங்கே அவருடைய பிரபலம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

மாமா என் அத்தை கணவர் என்பதால் தினமும் நான் ஜி.ஹெச். போய் விடுவேன்.

ஒரு நாள் கூட குட்டி பத்மினியின் பாட்டியை பார்க்காமல் இருக்க மாட்டேன்.
” You are a very kind boy!”என்பார். புன்னகையுடன் கூடிய முகம்.
முதுமைத்துயரமும், பிணியும் அவர் முகத்திலிருந்த மலர்ச்சியையும், புன்னகையையும் கொஞ்சமும் குறைக்கவே முடிந்ததில்லை.
அவர் கால் விரல்கள் வெட்டப்பட்டன. அவருடைய கால் கூட வெட்டப்பட்டது. அப்போதும் அவர் புன்னகைத்துக்கொண்டே இருந்தார்.

மதுரையில் ஆரப்பாளையம் க்ராஸில் ஜிம்மி ஸ்டோர் மிகவும் பிரபலம். வெங்கடேஷ் சக்ரவர்த்தி, குட்டி பத்மினியின் தாய் மாமாக்கள் கடை அது.

நெஞ்சில் ஓர் ஆலயம், குழந்தையும் தெய்வமும் போன்ற படங்கள் குட்டி பத்மினியை மிகவும் பிரபலப்படுத்தியவை.

  கமால் ஜேம்ஸ் அவர்களை என் அப்பா எனக்கு அறிமுகப்படுத்தி “ குட்டி பத்மினியின் தாய் மாமா இவர்” என்று சொன்னது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது.


நேற்று பிரசாத் ஸ்டுடியோவில் வெங்கடேஷ் சக்ரவர்த்தியை சந்தித்தேன்.

இதையெல்லாம் வெங்கடேஷ் சக்ரவர்த்தியிடம் சொன்னேன்.
அவரும் தன் பாட்டி, தாய்மாமாக்கள் நினைவில் மூழ்கி சொன்னார்.
“ நீங்கள் பேசும் இது போன்ற விஷயங்களை என்னிடம் நடிகர் ராஜேஷும் பேசியிருக்கிறார்.”

பாட்டியின் பெயர் மெட்டில்டா. பதினொரு குழந்தைகளின் தாயார். இவருடைய கருப்பை எஃதால் ஆனது? எஃகாலா?!

’திருதராஷ்ட்ரன் மனைவி காந்தாரி, குசேலன் மனைவி இருவரின் கருப்பையும் எஃதால் ஆனது? எஃகாலா?’ என ’காமரூபம்’ கவிதைத்தொகுப்பில் தமிழ் நாடன் கேட்டார்.


மூத்த மகள் ரூத்! திரையுலகில் நடிகை ராதாபாய். சாவித்திரி, தேவிகா, சரோஜாதேவி, கே.ஆர் விஜயா ஆகிய பிரபலங்களுக்கு அன்று வெவ்வேறு கால கட்டங்களில் ஹேர் ட்ரஸ்ஸர் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் தாயார் தான்!

அடுத்தவர் முன் முன். சிம்புவின் பாட்டி. ஸ்வர்ணமுகி, உஷா ராஜேந்தர் இருவரின் தாய்!
பாட்டியின் ஏனைய பிள்ளைச்செல்வங்கள் ஐரின், லீனா, டெர்ரி, ஆல்பர்ட், ஜமால், ஜான், நேசமணி, கமால், மேரி ஆகியோர்.
பாட்டியின் தாய் நாடு ஈராக். கணவர் ஜேம்ஸ் தமிழர்.




...................................

Feb 6, 2017

சிறு பத்திரிக்கை சின்னத்தனம்



பெசண்ட் நகர் ஸ்பேஸசில் ஓவியர், சிற்பி சி.தக்ஷிணாமூர்த்திக்கு நினைவு நிகழ்ச்சி. கே.எம்.ஆதிமூலம் ஃபௌண்டேசன் நடத்திய கூட்டம்.
ஓவியர் நடேஷுடன் போயிருந்தேன்.

டீ ப்ரேக்கில் ஒரு சிறு பத்திரிக்கை ஆசிரியர் தன் பத்திரிக்கையை நீட்டினார். பணக்கஷ்டம், சிரமம் பற்றி சற்றும் யோசிக்காமல் ஒரு பத்திரிக்கை பிரதியை உடனே பணம் கொடுத்து வாங்கினேன். என்னுடன் வந்த மு. நடேஷிடம் ஒன்றை நீட்டினார். நான் “ அவருக்கு நான் இந்த பிரதியையே கொடுத்துக்கொள்கிறேன்.” என்று அந்த பத்திரிக்கை ஆசிரியரிடம் சொன்னேன். வியாபாரத்தை கெடுக்கிறானே என்று நினைத்தாரோ என்னவோ? கொஞ்ச நேரத்தில் என்னிடம் வந்து கேட்டார் “ நீங்க சந்தா கட்டிட்டீங்களா?”
நான் பதிலே சொல்லாமல் ’இல்லை’ என்பதாகவும் ’மாட்டேன்’ என்பதாகவும் தலையாட்டி நகர்ந்தேன்.

கூட்டம் முடிந்தவுடன் மீண்டும் வந்து கேட்டார்“ உங்களுக்கு ஒரு பிரதி போதுமா? இன்னொன்று வாங்கிக்கொள்கிறீர்களா?”

…………................................



பல வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்க இருப்பதாக சொல்லி என்னிடம் ஒருவர் தலையை சொறிந்தார். காலாண்டிதழ். உடனே ஒரு நல்ல தொகை கொடுத்தேன். அப்புறம் அந்த இதழ் வெளி வந்த விஷயம் எனக்கு தெரிய வந்தது. எனக்கு பத்திரிக்கை அனுப்பி வைக்கவில்லையே என்பதை அவருக்கு நினைவு படுத்தினேன்.
உடனே அந்த எழுத்தாளர் பதில் : ’ராஜநாயஹம்! நீங்கள் பத்திரிக்கைக்காக கொடுத்தது நன்கொடை! சந்தா அல்ல.’
அரை மனதாக எனக்கு இதழை அனுப்பி வைத்தார். ஏதோ சட்ட விரோதமாக எனக்கு உதவுவது போல. இப்போது அவர் பெரிய பிரமுகர்.
.........................................

http://rprajanayahem.blogspot.in/…/paradise-will-be-kind-of…

 http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2016/11/blog-post_30.html

http://rprajanayahem.blogspot.in/…/not-every-friendship-is-…