Share

Feb 10, 2009

நாகேஷும் மற்ற நகைச்சுவை நடிகர்களும்


நாகேஷ் நடிப்பு - கமல் ஹாசன் டி வி யில் குறிப்பிடும் போது 'கலைவாணரை அடுத்து நாகேஷ் தான் .சிவாஜி கணேசன் மீது உள்ள அதே மரியாதை நாகேஷ் மீதும் எனக்கு உண்டு ' என்றார் . இது ஏற்கனவே கமல் அடிக்கடி சொன்ன விஷயம் தான் .
கலைவாணர் ஒரு ஜீனியஸ் . ஆனால் நாகேஷ் அப்படியல்ல . கலைவாணருக்கு திரையுலக அந்தஸ்து பிரமாதமானது . அதை விட பிரமாதமானது சமூக அந்தஸ்து !ஒரு முறை தமிழக முதல்வர் எம் ஜி ஆர் குறிப்பிட்டார் " இன்று கலைவாணர் உயிரோடு இருந்தால் இன்று அவர் அல்லவா தமிழக முதலமைச்சர் !"
கலைவாணர் களத்தை வெற்றிகொண்டவர் . முப்பதுகளில் ,நாற்பதுகளில் நகைச்சுவையில் சிந்திக்க வைத்த கலைஞர் தான் .எம்ஜியாரின் 'மதுரை வீரன்,' 'சக்கரவர்த்தி திருமகள்' ,சிவாஜியின் 'ராஜா ராணி' படங்கள் வரை ஐம்பதுகள் வரை வெளுத்துகட்டியவர் பன்முகத்தன்மை கொண்டவர் .அவரே பாடுவார் . தலை சிறந்த வள்ளல் . இது போல சிறப்புகள் நாகேஷுக்கு சுத்தமாக கிடையாது .

1958ல் நடிக்கவந்த நாகேஷ் நான்கு வருடம் போராடி1962 ல் தான் 'நெஞ்சில் ஒரு ஆலயம் 'தான் சரியான திருப்புமுனை .அதன் பிறகு ஒரு எட்டு ஒன்பது வருடம் காமடியனாக நாகேஷ் சாதித்ததை நாகேஷ் முன்னர் வந்தவர்களும் சரி , பின்னர் வந்தவர்களும் சரி மிஞ்ச முடியாது .கலைவாணரை இந்த ஒன்பது வருடம் தாண்டிபோய் விட்டது .
சந்திர பாபு போல நாகேஷ் பாட முடியாது சந்திரபாபு ஒரு ஆல்ரௌண்டர் . ஆனால் நாகேஷின் ,பவர் , டைமிங் , வசன உச்சரிப்பு ! சந்திரபாபு நெருங்கவே முடியாது . சான்சே இல்லை .
தங்க வேல் ஐம்பதுகள் துவங்கி கடைசி வரை நீர்த்துபோகாமல் ஒரே சீராக நடித்தவர் . நாகேஷ் எழுபதுகளில் சொதப்பியவர் . நாகேஷ்பின்னாளில் Form இழந்துவிட்டவர் .ஆனால் தருமி , வைத்தி , செல்லப்பா ரோல்களை கலைவாணர் ,தங்கவேலு போன்றவர்கள் தலை கீழாய் நின்றாலும் நாகேஷ் தரத்திற்கு செய்திருக்க முடியாதே !
சோ ஒரு முக்கியமான ஆளுமை . சிரிப்பு நடிகர் என்ற தகுதிக்கும் அப்பால் வசனகர்த்தா . அதை விட எழுபதுகளில் ஆரம்பித்து தனி மனிதனாக ,தைரியமாக பத்திரிக்கையாளராக இந்திராகாந்தி ,கருணாநிதி ,எம்ஜியார் ஆகியோரை கடுமையாக விமர்சித்த ஆண்மையாளர் . இந்த யோக்யதையும் நாகேஷுக்கு கிடையாது . ஆனால் நாகேஷின் நடிப்புக்கு முன் சோ வின் நடிப்பு தூசு தான் .
தேங்காய் சீனிவாசன் போல வசனங்களில் கொனஷ்டை அற்புதமாக நாகேஷ் செய்ததே இல்லை . என்றாலும் நாகேஷின் அறுபதுகளின் சாதனையை தேங்காய் நெருங்கவே முடிந்ததில்லை .
கவுண்டமணி ,வடிவேலு , விவேக் எல்லாம் தாங்களே நாகேஷ் முன் வாய் பொத்தி நிற்க வேண்டியது தான் .
அறுபதுகளில் சிவாஜி , பாலையா , எம் ஆர் ராதா ஆகியோரை நாகேஷ் எதிர்கொண்டு தூள் கிளப்பினார் . அவர்களுக்கு சரியான கம்பானியன் நாகேஷ் !Full form ! எல்லாமே சிக்ஸர் , பௌண்டரி தான் . மிக குறைந்த ஓவர்களில் திரிபில் செஞ்சுரி !
அந்த குறுகிய கால சாதனை நாகேஷுக்கு அமரத்துவத்தை வழங்கி விட்டது.
குணசித்திர நடிப்பு - குணசித்ரபாத்திரங்களில் நடிக்கும்போது நாகேஷ் மமதையுடன் நடிப்பார். உதாரணம் : 'பூவா தலையா' . அது ஒரு பெரிய குறை . கொஞ்சம் ஓவரா சோகத்தை பிழிவார் .அறுபதுகளிலேயே இந்த வேலையை ஆரம்பித்தவர் தான் நாகேஷ் . உதாரணம் : முத்து சிப்பி , மேஜர் சந்திரகாந்த் ஆகிய படங்கள் .
பின்னால் எழுபதுகளில் துவங்கி நகைச்சுவை நடிகனாக அல்லாமல் அவர் செய்த குணச்சித்திர நடிப்பில் எஸ் வி ரங்காராவ் , பாலையா , ஏன் எஸ் வி சுப்பையாவை கூட கடைசிவரை நாகேஷால் தாண்ட முடிந்ததே இல்லை .
 ( அவர் சிறப்பாக செய்தவை :' உனக்காக நான்' 'சில நேரங்களில் சில மனிதர்கள்' ) அறுபதுகளின் தலை சிறந்த குணச்சித்திர நடிப்பில் அவர்கள் சாதித்ததை இன்று வரை எந்த நடிகரும் மீறி தாண்டி நாகேஷ் உட்பட யாருமே போக முடிந்ததில்லை .குணச்சித்திர நடிப்புக்காக தயவுசெய்து மேஜர் சுந்தர ராஜனை சிபாரிசு செய்துவிடாதீர்கள் .மேஜர் Poor man’s Rangarao! கதாநாயகனாக சாதிக்காமல் 'அக்னிநட்சத்திரம்' துவங்கி குணசித்திர நடிப்பில் பேர் வாங்கிய விஜயகுமார் , ஜெய் கணேஷ் , இப்ப சேரன் படத்தில் அப்பா ரோல் சிறப்பாக செய்த ராஜ் கிரண் வரை யாருமே ரங்காராவ் நடிப்பை நெருங்க முடிந்ததில்லை .இவர்களை குறை சொல்லக்கூடாது . ரங்காராவ் ,பாலையா நடிப்பு ஜெயிக்கமுடியாத சாதனை .
எம் ஆர் ராதா காலத்தை வென்ற கலைஞன் என்று சொன்னால் அது Cliché! ராதாவை யாரோடும் கம்பேர் செய்வது அபத்தம் . தனிக்காட்டு ராஜா !


பின் குறிப்பு : இந்த ' நாகேஷும் மற்ற நகைச்சுவை நடிகர்களும் ' என்ற இந்த பதிவு இந்த ப்ளாகில் என் முன்னூறாவது பதிவு .

Feb 9, 2009

Over Action

ஜெமினி கணேஷ் இறந்தபோது காலச்சுவடில் நான் எழுதிய இரங்கலில் குறிப்பிட்டேன் : " தமிழ் திரையின் உக்கிரமான ஆகிருதிகள் எம் ஆர் ராதா , சிவாஜி கணேசன் , நாகேஷ் ஆகியோர் . நேர் எதிர் திசையில் மென்மையாக சாதித்தவர்கள் : ஜெமினி கணேஷ் , எஸ் வி ரங்காராவ் , டி .எஸ் . பாலையா மூவரும் "

( நாகேஷ் இறப்பதற்கு ஐந்து தினம் முன் 'மத்திய அரசின் பத்ம விருதுகள்' என்ற பதிவில்
"தமிழ் திரை கண்ட நகைச்சுவை நடிகர்களில் சத்தியமாக முதன்மையானவர் நாகேஷ் தான் . " என நான் குறிப்பிட்டிருந்தேன் .)
உக்கிரமான ஆகிருதிகள் மூவரிடமும் ஓவர் ஆக்சன் இருந்தது .
இவர்களில் சிவாஜியின் ஓவர் ஆக்சன் மக்களால் ரசிக்கப்படவில்லை . சிவாஜியின் நடிப்பில் மிகை யை ஒரு குறையாக த்தான் திரை ரசிகர்கள் எழுபதுகளில் அதிகம் கண்டு எரிச்சலுற்றார்கள் என்பது தான் உண்மை .
நாகேஷும் அப்படித்தான் . ஓவர் ஆக்சன் அவர் தத்துவவாதியாக மாறி ' தத்துவத்துக்கு அம்மா 'கற்பனை 'அப்பா கவலை ' என்று சாதாரணமாக சினிமாவுக்கு வெளியே கூட தத்துவம் பேச ஆரம்பித்தவர் நாகேஷ் . திரையில் நாகேஷ் ஓவர் ஆக்சன் சொல்லி முடியாது .
'கடல் மீன்கள் ' படத்தின் எடிட்டிங் போது கமல் ஹாசன் வந்திருந்து அவருடன் நாகேஷ் கடல் போட் சீனில் செய்திருந்த சகிக்க முடியாத ஓவர் ஆக்சன் பகுதிகளை எடுத்து விட சொன்ன போது நான் அங்கிருந்தேன் . கமல் ஜி என் ரங்கராஜனிடம் சொன்னார் : நாகேஷ் ஷாட்ஸ் நிறைய நீக்கிடனும் . ஓவர் ஆக்சன் ரொம்ப . நாகேஷை எல்லாம் எங்க வாத்தியார் ( பாலச்சந்தர் ) தான் சரியா வேலை வாங்க முடியும் . மத்தவங்க அவர லூசா விட்டா ரொம்ப சொதப்பிடுவார் .மத்தவங்களுக்கு நாகேஷை வேலை வாங்கறது சிரமம் "
அன்று கடல் மீன்கள் படத்தில் தங்கவேலு நடிப்பை பிரமாதமா கமல் புகழ்ந்தார் .

பின்னால் கமல் படங்களில் நாகேஷ் நடிப்பை நன்கு கவனமாக பதிந்ததில் கமலின் இந்த எச்சரிக்கை உணர்வு தான் காரணம் .

எம் ஆர் ராதாவின் நடிப்பில் அவர் எவ்வளவு தான் ஓவர் ஆக்சன் செய்தாலும் தமிழ் மக்கள் அதை முழுமையாக அங்கீகரித்தார்கள் . அவருடைய நடிப்பில் 'மிகை' என்பது கூடுதல் அணிகலனாக மாறி அவருக்கு மேலும் புகழ் சேர்த்தது .
ஐம்பது ,அறுபதுகளில் மிகை நடிப்பில் கொடிகட்டியவர் ராதா ! எவ்வளவு பெரிய ஆள் அவர் பக்கத்தில் நின்றாலும் அமுங்கி போய் தான் தெரிவார் . ஓவர் ஆக்சன் செய்து சிவாஜியும் நாகேஷும் எழுபதுகளில் எரிச்சலுக்கு தான் ஆளானார்கள் .

...
இன்னொரு விஷயம் இதை இங்கு குறிப்பிட்டேஆகவேண்டும் .
இன்றைய நடிகர்களில் கமல் ஹாசன் நடிப்பு பற்றி ஒரு விஷயம் . அவர் நடிக்கும் போது ஒரு "கர்வம் " தெரிவதை கவனித்திருக்கிறீர்களா ? அவர் நடிக்கிற தோரணை " ஆமா , இந்த படத்தில் எனக்கு நிறைய வேலை !" என்று கேமரா முன் கர்வத்துடன் நிற்பார் கமல் .
இன்றைக்கு அகில இந்தியாவிலும் கதாநாயகர்களில் கேமரா முன் நடிக்கும்போது கர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் படு ஸ்மார்ட் ஆ நடிப்பவர் மோகன் லால் மட்டுமே !