Share

Apr 10, 2019

குட்டி பாப்பா


கி.ராஜநாராயணன் என்னிடம் சொன்னார் : ’குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு பதிலா பிச்சையெடுக்கப்போகலாம்.’
ஆங்கிலத்தில் ஒரு இடியம் உண்டு.
Left holding the baby - அசௌகரியப்படுத்தப்படுவது. கூடுதல் வேலைப்பளுவால் சிரமப்படுத்தப்படுதல்.
கைக்குழந்தைகளை கவனித்துக்கொள்பவர் is made a scapegoat என்கிற அர்த்தம்.
இன்றைக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு தலை மேல் பாரம் பேரக்குழந்தைகளை கவனித்துக்கொள்வது.
இப்படி கி.ரா.வின் ஒரு சஹிருதயர் தன் இரு மகன்களும், மருமகள்களும் வேலைக்கு செல்வதால் தானும் தன் மனைவியும் கூடுதல் பளுவால் அனுபவிக்கும் பெருந்துயராக, அவர்களின் கைக்குழந்தைகளை கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பைப்பற்றி சொன்னதை என்னிடம் விவரித்தார். ஆயாச பெருமூச்சுடன் அந்த பெரிய மனிதர் ஈனஸ்வரத்தில் நொந்து கொண்டாராம். 
கி.ரா பட்டென்று உடைத்து, வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டாக (அவரிடம் சொல்லாமல்), என்னிடம் சொன்னார்” குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு பதிலா பிச்சையெடுக்கப் போகலாம்.”
எனக்கும் தெரிந்தவர் தான். அவர் இப்போது உயிரோடு இல்லை.
நன்றாக நினைவிருக்கிறது. தன் பிள்ளைகளுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்த விஷயத்தையெல்லாம் என்னிடம் எவ்வளவோ சந்தோஷமாக சொல்லியிருக்கிறார்.
கிருஷ்ணன் நம்பி எழுதிய ‘விளையாட்டுத்தோழர்கள்’ கதையில் ஒரு குட்டிப் பாப்பா தான் வில்லன்.
சிறுவன் சங்காவின் இடது கால் குதிரைச் சதையில் பாப்பாவின் ஐந்து பற்கள். அழுந்த நெரித்து இறுக்கிய பிடிவாத பாப்பாவின் பற்கள்.

’பாட்டியா வீட்டில் குழந்தை காட்சி’ சுவாரசியமான தி.ஜானகிராமனின் சிறுகதை.
எழுத்தாளர் சி.ஆர். ராஜம்மா பெற்ற ஒரு பச்சைக்குழந்தை,தாயின் பூ விழுந்த கண்ணை பிய்த்து வெளியே எடுத்து விட்டது.
சும்மா ’சுகமான சுமை’ என்று பீற்றிக்கொண்டு பேரப்பிள்ளைப்பீய அள்ளலாம்.ஆனால் யதார்த்தம் வேறு.
சாரு நிவேதிதா ‘குழந்தைகளை எனக்குப் பிடிக்காது’ என்று ஒரு கட்டுரை எழுதியதுண்டு.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.