Share

Feb 22, 2019

பிடில் வாத்தியார்


எட்டாங்கிளாஸ் ஃபிடில் வாத்தியார். வயலின் வாசிப்பவர் அல்ல. உடம்பை அடிக்கடி சொறிவார். அதனால் பிடில் என்று பெயர். இந்தப்பெயர் அவருக்கு எந்தக்காலத்தில் பள்ளி மாணவர்களால் வழங்கப்பட்டதோ?
Conjugation. See verb.
I see என்று present tenseல் ஆரம்பித்து future perfect continous tense வரை மாணவர்கள் எழுத வேண்டும்.
ப்ளாக் போர்டில் பிடில் To see எழுதி விட்டு கட்டை தொண்டையில் சொல்வார். “எழுது. Conjugation. ”I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’, ம்.. ம்... எழுது” என்று future tense பற்றி மட்டுமே சொல்வார். திரும்ப திரும்ப I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’ சொல்லி குறுக்கும் நெடுக்குமாக நடப்பார்.
அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். குனிய வைத்து முதுகில் பட,படவென்று பிடில் கையால் அடித்து ”முன்னால போய் முழங்கால் போடு”
நான் முழங்கால் போட்டவாறே காஞ்சுகேசன் எழுதும்போது ஒரு பையன் எழுந்து சந்தேகம் கேட்க ஆரம்பித்தான்.“ சார். இந்த ப்ரசண்ட் பெர்ஃபெக்ட் கண்ட்டினுவஸ் டென்ஸ்ல..”
அவன் வார்த்தையை முடிக்கு முன்னரே “ அதத் தான் நான் சொல்லிக்கிட்டிருக்கேன்…இவனுக்கு சிரிப்பு வருது” என் முதுகில் மீண்டும் நான்கைந்து அடி. ”எழுது. ”I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’ எழுது”. கட்டைத் தொண்டையில் கத்தினார். உடம்பில் விலா பகுதியில் சொறிந்து விட்டு ”I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’“ என் முதுகில் மீண்டும் ரெண்டு அடி. ’ஐ’க்குக்கும் ’வி’க்கும் ஷால். மத்ததுக்கெல்லாம் வில்.
வகுப்பில் முதல் வரிசை பெஞ்சில் இரண்டு குட்டை பையன்கள். இருவருக்குமே Funny face. ஒவ்வொரு வாரமும் ஒரு க்ளாஸ் Non – detailed. சிலபஸில் ராபின்சன் குருசோ நாவல். அந்த இரண்டு பையன்களில் ஒருவனுக்கு குருசோ என்றும் இன்னொருவனுக்கு ஃப்ரைடே என்றும் பிடில் பெயர் வைத்தார். ராபின்சன் குருசோ பாட வகுப்பு என்றால் அந்தப் பையன்கள் இருவர் முகமும் அன்று முந்திய வகுப்புகளிலேயே பதட்டமாகி இருளடைந்து விடும்.
கதையில் ஃப்ரைடே செய்யும் முட்டாள் தனங்களுக்கு வகுப்பில் உள்ள ஃப்ரைடே முதுகில் அடி விழும். இப்படி முட்டாப்பயல கூடவே வைத்திருக்கானே குருசோ என்று பிடில் கோபப்பட்டு புத்தகத்தை கீழே வைத்து விட்டு வகுப்பில் உள்ள குருசோ முதுகிலும் நாலு சாத்து சாத்துவார். “மூள கெட்ட பயல கூடவே ஏன் வச்சிக்கிட்டுருக்கற நீ? இடியட், ஃபூல், ராஸ்கல்.”
‘Presence of Mind’ வார்த்தையை பிடில் சொல்லி தான் முதலில் கேள்விப்பட்டோம். திருச்சியில் இருந்து பிடில் சென்னை போய் இருக்கிறார். பாரீஸ் கார்னர். ஹை கோர்ட் எதிரில் பிடில் போகும் போது எதிர் ப்ளாட்ஃபார்மில் ஒருவர் தெரிந்த ஆள் போல இருந்திருக்கிறார். நின்று, அவரைப்பார்த்து இங்கிருந்து கை தட்டியிருக்கிறார்.
கை தட்டல். எல்லோரும் திரும்பி பார்த்திருக்கிறார்கள். எதிர் ப்ளாட் ஃபார்மில் போய்க்கொண்டிருந்தவர்கள் மட்டுமில்லாமல் ரோட்டை க்ராஸ் செய்து கொண்டிருந்தவர்கள், மற்றும் இவர் நின்ற ப்ளாட்ஃபார்மின் பாதசாரிகளும் நின்று பார்த்திருக்கிறார்கள்.
(ந.முத்துசாமி சொல்வார் “ கைதட்டலுக்கு ராணுவ கட்டளைக்குள்ள பலம் இருக்கு.”)
மீண்டும் எதிர் ப்ளாட்ஃபார்மை பார்த்து பிடில் கை தட்டியிருக்கிறார். எதிர் ப்ளாட்ஃபார்மில் போய்க்கொண்டிருந்த ஒவ்வொருவரும் நின்று நானா? நானா? என்று கைச்சைகையால் கேட்டிருக்கிறார்கள். இவர்
‘அந்த குடைக்காரர்’ என்று சைகைகளால் சொல்லியிருக்கிறார். குடைக்காரரும் ’நானா’ கேட்டுக்கொண்டிருந்தவர், மற்றவர்களால் “ உங்களைத்தான்” என்று அறிவுறுத்தப்பட்டு சிரமப்பட்டு வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்த அந்த பெரிய ரோட்டை க்ராஸ் செய்து இவரை நோக்கி வர ஆரம்பித்திருக்கிறார். அவர் பாதி ரோட்டை க்ராஸ் செய்யும் போது பிடில் வாத்தியாருக்கு பகீர் என்று ஆகி விட்டது. அவர் தெரிந்த மனிதர் அல்ல. வேறு யாரோ? உடனே பிடில் ‘Presence of Mind’ வேலை செய்ய ஆரம்பித்தது. கையில் சுளுக்கு போல நடிக்க ஆரம்பித்திருக்கிறார். முக பாவத்தில் வேதனை வரவைத்து அவரை நோக்கியே கை தட்டி, மேல் நோக்கி குடை போல் நீட்டி, கை விரல்களை மடக்கி கையை நீவி, நீவி விட்டிருக்கிறார். திரும்ப, திரும்ப கை தட்டி, மேல் நோக்கி நீட்டி, கை தட்டி கையின் முன் பகுதியை நீவி, நீவி விட்டு..
குடைக்காரர் பக்கத்தில் வந்து உற்று பார்த்து விட்டு, மீண்டும் ரோட்டை க்ராஸ் செய்து கொண்டே முனகியிருக்கிறார். “ பாவம் கையில சுளுக்கு. அங்க இருந்து பாக்க கூப்பிடுவது போல தெரிஞ்சிருக்கு “
வகுப்பில் பிடில் தலைப்பொட்டில் தட்டிக்காண்பித்து ”ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் வேணும்டா”
ஸ்கூல் பிக்னிக் ஒன்றிற்காக அதிகாலை ஆறரை மணிக்கு திருச்சி டவுன் ஸ்டேசனில் ரயிலில் ஏறி ஒரு நூறு பேர் உட்கார்ந்திருக்கிறோம். ஒருத்தன் “ டேய் பிடில் பார்றா. வெளிக்கி இருக்குதுடா”
எட்டிப்பார்த்தால் ஸ்டேசனை ஒட்டிய முள் காட்டில் பிடில் வாத்தியார் ‘Nationalize’ பண்ணிக்கொண்டிருந்தார்.
”பிடில் மாமா, பிடில் மாமா இங்க பாருங்க,
உங்க பிடில் கம்பி அந்து போனா என்ன பண்ணுவீங்க” என்று கோரஸாக பாடும் போது தான் கவனித்து எழுந்து ஒரு முள் மரத்தின் பின் ஒளிந்து மறைந்து கொண்டு ரயிலில் எவனெல்லாம் பாடுறான், சிரிக்கிறான்னு நோட்டம் விட்டார்.
எனக்கு என் அப்பாவிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் மணியார்டர் வருவதுண்டு. பாக்கெட் மணி. பிடில் பீரியடில் மணியார்டர் வந்தால் தொலைந்தேன். பீரியட் முடிந்ததும் முழங்கைகளை சொறிந்து கொண்டே பிடில் “ சம்பளம் வாங்க கையெழுத்து போடணும். பணம் தேவை”
கணிசமாக என்னிடம் இருந்து பணம் கறந்து விடுவார். இவர் சம்பளம் வாங்க கையெழுத்து போட பணம் தர வேண்டுமா? அதற்கு நான் ஏன் தர வேண்டும்? இப்படி ஒரு எச்சிக்களைத்தனம் பிடிலுக்கு உண்டு. பணத்தை திருப்பி தரவே மாட்டார்.
கோபமாய் அடிக்க வரும்போது அவருடைய சட்டை பாக்கெட்டில் ஒரு எட்டணா போட்டு விட்டால் அடிக்க மாட்டார்.
நீதி போதனை வகுப்பில் ஜெரால்ட் ஒரு பேனாக்கத்தி வைத்திருப்பதை கண்டு பிடித்த ஆசிரியர் ஒருவர் அதை பிடுங்கி மேஜையின் டிராயரை திறந்து உள்ளே வைத்து விட்டார். அடுத்த வகுப்பில் உள்ளே வந்த பிடில் டிராயரை திறந்தவர், கத்தியை நைசாக இடுப்பில் வேட்டியில் செருகிக்கொண்டார். இதை எல்லோருமே பார்த்து விட்டார்கள்.
ஜெரால்ட்டை அடுத்த வகுப்பில் மன்னித்த நீதி போதனை ஆசிரியர் கத்தியை திருப்பி தர ட்ராயரை திறந்தால் கத்தியில்லை. அவர் க்ளாஸ் டீச்சரிடம் கம்ப்ளெயின்ட் செய்ய வலியுறுத்தி விட்டு சென்றார். பிடில் வந்ததும் க்ளாஸ் லீடர் சொன்னான். “ சார் எவனோ ட்ராயர்ல இருந்த கத்திய தேட்டா போட்டுட்டான் சார்”
பிடில் நீளமாக அட்வைஸ். கையையும் காலையும் சொறிந்து கொண்டே ”டேய் இந்த வயசில தேட்டைய போடுற புத்தி இருந்தா உருப்பட மாட்ட. மரியாதயா உண்மைய சொல்லு”
குண்டு நஸீருதின் எழுந்து “ அத தேட்டா போட்டவன் கை குஷ்டம் பிடிச்சிடும் சார். அழுகிப்போயிடும்.”
பிடிலுக்கு ஜிவ்வென்று கோபம். ”இங்க வா” மலை போல எழுந்து ஆடி ஆடி முன்னால் வந்த நஸீருதினை அடி வெளுத்து விட்டார். “உன்ன கேட்டனா நான்? அதிக ப்ரசங்கி”
மூக்கு கண்ணாடியை கீழிறக்கி, பிடில் ஒவ்வொருவர் பெயராக சொல்லி அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது “ப்ரசண்ட் சார்” சொல்வதற்கு பதிலாக “ போட்டுக்க சார்” வேகமாக பையன்கள் சொன்னால் என்ன சொல்கிறான் என்பதெல்லாம் அவருக்கு புரியாது. ப்ரசண்ட் தான் சொல்கிறான் என்று நினைத்து அட்டென்டண்ஸ் ரிஜிஸ்டரில் மெக்கானிக்கலாக ’டிக்’ அடிப்பார். பேனாக்கத்தி தொலைந்த நிகழ்வுக்கு பிறகு ஊட்டி குண்ணூர் சிரில் வின்சண்ட் “ தேட்டா போடாத சார்” என்று படுவேகமாக சொல்வான். அதற்கும் ‘டிக்’ அடித்துக்கொண்டிருந்தார். எல்லோரும் சிரிப்பதை கண்டு பிடித்து விட்டார். சிரில் வின்சண்ட் பெயரை சொல்லி விட்டு காதை தீட்டி ஒரு நாள் கவனம் செலுத்தினார். இது எங்க கண்டு பிடிக்கப்போகுது என அன்று சிரில் வின்சண்ட் ரொம்ப அழுத்தம் கொடுத்து ஒவ்வொரு வார்த்தையாக, நிதானமாக கொஞ்சம் ராகம் போட்டுசொன்னான் “ தேட்டா.. போடாத.. சார்..”
பிடில் அட்டண்டன்ஸ் ரிஜிஸ்டரை கீழே வைத்து விட்டு மூக்கு கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு “ இங்க வா.” அழைத்தவர் குரலுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் சிரில் வின்சண்ட்டுக்கு. பிடில் அடி வெளுத்து விரிய கட்டி விட்டது.

English Hand writing note bookல் என்ன எழுதப்பட்டுள்ளது என்று வாசிக்காமல் கையெழுத்து போடுவார். ’பிடில் மாமா பிடில் மாமா எங்க போறீங்க, உங்க பிடில் கம்பி அந்து போனா என்ன பண்ணுவீங்க’ என்பதை  இங்க்ளீஷில் அப்படியே fiddle mama fiddle mama enga poreengaன்னு எழுதி நான் கையெழுத்து வாங்கி எல்லோருக்கும் காட்டியிருக்கிறேன்.
மறக்க முடியாத ஆளுமை பிடில் வாத்தியார். நகைச்சுவை உணர்வு மிக அதிகம். வயதானவர் தான். ஆனாலும் பெருமையோடு சொல்வார்.”டேய். உங்க எம்.ஜி.ஆர் என்ன விட வயசானவன்டா.”

http://rprajanayahem.blogspot.com/…/01/a-blundering-boy.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.