Share

May 9, 2017

கானல் ’பொய்’கை


1986ம் வருடம். என் அப்பா அழைப்பதாக அவருடைய ஆபிஸில் இருந்து போன் வந்தது. திருச்சி ராஜா காலனி வீட்டில் இருந்து கிளம்பி போனேன். அப்போது சைல்ட் ஜீசஸ் ஆஸ்பிட்டலுக்கு எதிரே இருந்த கஸ்டம்ஸ் ஆபிஸில் அப்பா சூப்ரிண்ட்.


அப்பாவின் கேபினில் நுழைந்தேன்.
அப்பா முன் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்பா “ இவர் யார் தெரியுமா? பாக்யராஜின் அண்ணன் தன்ராஜ்.”
அப்பா காரணத்தோடு தான் என்னை அழைத்திருக்கிறார்.

நான் ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த ‘அழைத்தால் வருவேன்’ படத்தில் உதவி இயக்குனராய் வேலை பார்த்ததை பாக்யராஜின் அண்ணனிடம் சொல்லியிருக்கிறார். ‘என் பையனை உங்க தம்பியிடம் சேர்த்து விடுங்கள்’ என்று சொன்ன பின்பு தான் என்னை ஆஃபிஸிற்கு வரச்சொல்லியிருக்கிறார்.
தன்ராஜ் உடனே “ இவர் தானா உங்கள் மகன் ராஜநாயஹம்! கவலைப்படாதீர்கள். நான் என் தம்பி கிட்ட சொல்லி இவரை அஸிஸ்டண்ட் டைரக்டரா சேத்து விட்டுடுறேன்.”

உடனே தன் தம்பிக்கு என்னை அவருடைய அஸிஸ்டண்டாக சேர்த்துக்கொள்ளச்சொல்லி பிரமாதமான கடிதம் அங்கேயே ஆங்கிலத்தில் எழுதி என்னிடம் கொடுத்தார். Rajanayahem’s father is wellknown to me. He is very helpful to me…….. இப்படி..இப்படி.
”நீங்கள் இந்த கடிதத்தை கொடுங்கள். நான் பத்து நாளில் சென்னை வருவேன். அப்போது நேரடியாகவே நானும் தம்பியிடம் சொல்வேன். இனி உங்களுக்கு நல்ல எதிர்காலம்.”


தன்ராஜ் கோவையில் நடத்தி வந்த வீடியோ கேஸட் கடை மீது அப்போது ஒரு கஸ்டம்ஸ் கேஸ்.


தன்ராஜ் ரொம்ப உற்சாகமாக என்னிடம் பேசினார்.
நான் சென்னை போகவில்லை. பாக்யராஜிடம் சேரவுமில்லை.


அன்றைய மன நிலை. மீண்டும் சினிமாவுக்கு போக வேண்டுமா? Once bitten twice shy. வேண்டாம்.

....................


1992ம் வருடம் மார்ச் மாதம் பள்ளபட்டி பெரிய சேட்டு என்னை ஃபெமினா ஹோட்டலில் ரிஸப்சனிஸ்டாக பார்க்கிறார்.
“ Gabie! It’s a pleasant surprise.”
சென்னை போனவுடன் பெரிய சேட்டு போன் “ எனக்கு உன்னை ரிஸப்சனிஸ்டாக பார்த்தது பிடிக்கவில்லை.”
நான் வேலைக்கு சேர்ந்து அந்த ஐந்தாவது மாதம் ரிஸைன் செய்து விட்டேன்.
அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘ There is always trial and error.’

அந்த கடிதத்தை அவருடைய நண்பர் போலீஸ் டெபுடி கமிஷனர் பாஸ்கர் படித்திருக்கிறார். திரும்ப திரும்ப அந்த கடிதத்தை ரசித்து படித்திருக்கிறார்.

மே மாதம் முதல் வாரம் மீண்டும் பெரிய சேட்டு போன்.
“ நீ உடனே கிளம்பி சென்னை வா. பாக்யராஜ் உன்னை சந்திக்க விரும்புகிறார்.”
டெபுடி கமிஷனருக்கும், பெரிய சேட்டு ஃப்ரூக் இருவருக்குமே பாக்யராஜ் நண்பர். மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்கும் போது பாக்யராஜ் “ பாக்யா பத்திரிக்கையிலிருந்து சஞ்சீவி விலகி விட்டார். எம்.ஜி.வல்லபனை எடிட்டோரியலில் போட்டிருக்கிறேன். ஒரு நல்ல ஆள் பத்திரிக்கைக்கு தேவை.”
உடனே ஃபரூக் ” என் தம்பியுடைய க்ளாஸ்மேட் ஒருவன் இருக்கிறான். ராஜநாயஹம். இலக்கியமெல்லாம் கரைத்து குடித்தவன்.”
உடனே பாஸ்கர் “யாரை சொல்றீங்க?”
ஃபரூக் “ அந்த ட்ரையல் அண்ட் எர்ரர் கடிதம் எழுதியிருந்தானே!”
“ ஓ அந்த பையனா? பாக்யராஜ்! நானே ரெகமண்ட் செய்கிறேன். அவன் எழுதிய கடிதம் நான் படித்து அசந்து போனேன். அப்படி ஆள் தான் பாக்யாவுக்கு தேவை.”
பாக்யராஜ் “ உடனே ராஜநாயஹத்தை அழைத்து வாருங்கள். பத்திரிக்கை எடிட்டிங் லைனில் சேர்த்துக்கொள்கிறேன்.”

பாக்யா பத்திரிக்கை பார்த்திருக்கிறேன். கணையாழி, நடை, கசடதபற, பிரக்ஞை, ஞானரதம் போன்ற பத்திரிக்கைகளின் வாசகன் நான். பாக்யா பத்திரிக்கையில் சேர்வதா?
முடியாது. மறுத்து விட்டேன். அவரிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக வேண்டுமானால் சேர்கிறேன். பெரிய சேட்டு விடவில்லை. “ வாப்பா நீ மொதல்ல.”

மே 19ம் தேதி சென்னை போய் விட்டேன். பெரிய சேட்டு என்னிடம் சொன்னார் “ பாக்யராஜ் ‘அம்மா வந்தாச்சு’ ஷூட்டிங்குக்காக பாம்பே போயிருக்கிறார். எப்ப வருவாரோ? பொறுமையா இரு. ஒரு வேளை அவரை நீ சந்திக்க ஒரு மாசம் கூட ஆகலாம்.”

மறு நாள் பரபரப்பான திருப்பம். பாக்யராஜ் சென்னை வந்து விட்டார். அது கூட திருப்பம் என்று சொல்ல முடியாது. அன்று மாலை அவர் அண்ணன் தன்ராஜை கோவையில் வீடியோ கேஸில் அரஸ்ட் செய்து விட்ட செய்தி பாக்யராஜுக்கு வந்தது. உடனே சென்னையில் தன் நண்பர் டெபுடி கமிஷனருக்கு போன் போட்டு சொல்கிறார். பாக்யராஜ் ரொம்ப மன உளைச்சலில். காரணம் அரெஸ்ட் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தான் பாக்யராஜின் அண்ணன் என்பதை தனராஜ் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அந்த இன்ஸ்பெக்டர்
 “ நீ எவனா இருந்தா எனக்கென்ன?” என்று சொல்லி விட்டார்.
பாக்யராஜ் புலம்பல் – “ இந்த வீடியோ கடை பிஸினஸ் வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன். என் அண்ணன் கேட்கவில்லை. இப்போது இப்படியாகி விட்டதே.”

இங்கிருந்து பாஸ்கர் கோவைக்கு போன் செய்து ஒரு வழியாக தன்ராஜ் லாக் அப்பில் இருந்து வெளிவர நள்ளிரவு தாண்டி விட்டது.
பாஸ்கரும் ஃபரூக்கும் பாக்யராஜை தேற்ற விரும்பியிருக்கிறார்கள். பாஸ்கர் தன் ஆஃபிஸிற்கே வரச்சொல்லியிருக்கிறார்.
நள்ளிரவில் பாக்யராஜ் பாஸ்கரையும் ஃபரூக்கையும் சந்தித்தவுடன் கொஞ்ச நேரத்தில் பாஸ்கரே சொல்லியிருக்கிறார்.“ ராஜநாயஹம் வந்தாச்சு. “
பாக்யராஜ் என்ன சொல்ல முடியும்! ”நாளை காலை பத்து மணிக்கு பாக்யா ஆஃபிஸ்க்கு அழைத்து வாருங்கள்.”

ஃபரூக் பைக்கில் தி. நகர் கிளம்பிப் போனோம். அங்கே உடனே வள்ளுவர் கோட்டத்தையொட்டியிருக்கும் லேக் ஏரியா வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.
“ உங்களை பாக்யா பத்திரிக்கைக்காகத்தான் அழைத்தேன்.”
நான் “ இல்ல சார். நான் மூவி மீடியாவிற்குத் தான் வர விரும்புகிறேன்.”
”நிறைய அஸிஸ்டண்ட்ஸ் இருக்காங்க.”
”பால்ல சக்கரை மாதிரி கரைஞ்சிடுறேன்.”
இரண்டு மணி நேரத்திற்கு மேல் என்னை பரிசோதித்தார்.
பின் அவருடைய பிரபல டயலாக்கில் சொன்னார் – “ சரி. ஜோதியில ஐக்கியமாகிடுங்க”


மீண்டும் 21ம் தேதி மாலை ஐந்து மணி முதல் பதினொரு மணி வரை என்னை பேச விட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.
வேறு யாரையும் அப்போது சந்திக்க மறுத்தார். கவிஞர் வாலி வந்திருப்பதாக தகவல் சொல்லப்பட்ட போது அவரை மறு நாள் சந்திப்பதாக சொல்ல சொன்னார். அப்போது ஆஃபிஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ( பழைய ’முந்தானை முடிச்சு’ அசோசியேட் டைரக்டர் )  இளமுருகு, தன் மனைவி, மாமனாருடன் சந்திக்க முயன்றார். “ம்ஹூம்.” மறுத்து விட்டார்.
பாக்யா ஆஃபிஸில் எல்லோரும் இதை ஆச்சரியத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார்கள். இளமுருகு கமெண்ட்
“ராஜநாயஹத்தை நம்ம டைரக்டர் பம்ப் செட் போட்டு உறிஞ்சிக்கொண்டிருக்கிறார்!”

பிறகு பாக்யா ஆஃபிஸில் ஒரு நாள் தன்ராஜை சந்தித்தேன். அவர் கொடுத்த கடிதம் பற்றி ஞாபகப்படுத்தினேன். ஆர்வமாக கேட்டார். ”அப்பா எப்படியிருக்காங்க!”
இப்போது டெபுடி கமிஷனர் பாஸ்கர் மூலமாக பாக்யராஜிடம் சேர்ந்திருக்கிற விஷயத்தை சொன்னேன்.
தன்ராஜ் “ எல்லாத்துக்குமே ஒரு நேரம் வர வேண்டியிருக்குதுல்லங்க!”
அப்போது பாக்யராஜின் கார் ஆஃபீஸில் நுழைந்தது.
பாக்யராஜ் காரில் இருந்து மனைவி பூர்ணிமாவுடன் இறங்கியதும் என்னுடன் நின்ற தன் அண்ணனைப் பார்த்து விட்டு கேட்ட கேள்வி
“ தனம்! நீ எப்ப வந்த?”
ஓ! தன்ராஜ் சென்னை வந்தால் பாக்யராஜ் பங்களாவிற்கு வருவதில்லை போலிருக்கிறது. ஹோட்டலில் தான் தங்குகிறாரா?


ஐந்து மாதம் ’ராசுக்குட்டி’யில் குப்பை கொட்டி விட்டு நான் கிளம்பும்படியானது. சினிமாவில் என்னுடைய இரண்டாவது எண்ட்ரி பிரமாதமான தோல்வி. A successful failure!
ஆறு வருடங்களுக்கு முன் தன்ராஜ் கொடுத்த கடிதத்தை ராசுக்குட்டி தீபாவளி ரிலீஸுக்குப் பின் டிசம்பர் மாதம் ’கடைசியாக’ பாக்யராஜை அவர் வீட்டில் சந்தித்த போது தான் கொடுத்தேன். படித்துப் பார்த்து விட்டு சிந்தனையில் சில நிமிடம் கழித்த பின் திருவாய் மலர்ந்தார் “ அது தான் வந்துட்டிங்களே!”
திரும்ப பாக்யராஜை சந்தித்ததேயில்லை.

........................

2006ல் திருப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது மதியம் சாப்பிட்டு விட்டு ஆஃபிஸ் திரும்பும்போது ராக்கியாபாளையம் பிரிவில் பாக்யராஜ் வேனில் நின்றவாறு மைக் பிடித்து பேசிக்கொண்டிருந்தார். தி.மு.க தேர்தல் பிரச்சாரம். திருப்பூர் மாநகராட்சி தேர்தல்! பிரச்சார வேனை சுற்றி சின்ன கும்பல்.ஒரு பத்து பேர் தான்.
நான் ஸ்கூட்டரில் சென்றவாறே மிக அருகில் அவரைப் பார்த்துக்கொண்டே சினி பார்க் ரோட்டில் திரும்பினேன். அந்த ரோட்டில் ஸ்கூட்டர் திரும்புவதற்கு பாக்யராஜ் வேனையொட்டித்தான் செல்ல வேண்டியிருந்தது.


........................................

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_29.html

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_6.html

http://rprajanayahem.blogspot.in/2014/10/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_13.html

 http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/…/loose-words-are-gold-coi…


http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_16.html 

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_03.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_05.html

http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2012/11/never-explain.html




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.