பெரியகுளம் பீரு கடை சர்புதின். அப்பா பேர் பீர் முகமது. பீரு கடை நாற்பது வருடங்களுக்கு முன் தென்கரையில் ரொம்ப ஃபேமஸ்.
சர்புதினின் அண்ணன் திருச்சி ஜமால் முகமது காலேஜ் ப்ரொபசர். ஆனால் சர்புதின் ஏழாவது வகுப்பு வரை தான் படித்தவர். ஆள் பார்க்க சிவாஜி சாயலில் நல்ல குண்டு. ரொம்ப குண்டு. தென்கரை பஜாரில் எம்.என்.பி ஸ்டோர்ஸ் இவருடைய கடை.
இங்கிலீஷ் பேச ரொம்ப ஆசை.
கண்டினுவஸ் டென்ஸில் A சேர்த்து நிறைய ஓவர் ஆக்ஷன் செய்து அவர் பேசுவது ரொம்ப ரசிக்கும்படியாக இருக்கும்.
அவர் மனைவி ரொம்ப கறார் கண்டிப்பு உள்ளவர்.
“ நேத்து செகண்ட் ஷோ பாத்திட்டு வீட்டுக்கு போறேன். The door was a opening!
The wife was a sleeping. I was a தட்டிங்.. ’செல்லம்,செல்லம்’ தட்டிங்!
The wife was a angry. The wife was a shouting? 'Why was a second show??' ”
’The’ ரொம்ப பயன்படுத்துவார்.
’யோவ் இப்ப கடைக்கு வந்துட்டு போனாரே. அவரு யாருய்யா. என்ன செய்றாரு.’
சர்புதின் பதில் – ’தி நெல்லு, தி உருளைக்கிழங்கு, தி மிளகாய் இதுக்கெல்லாம் போடுவாங்கள்ள தி உரம்! அது தயாரிக்கிற தி கம்பெனி வச்சிருக்கார்.'
ராத்திரி பஜாரில் கரண்ட் போய் விட்டால் கடை பையன் மெழுகுவர்த்தியை பற்ற வைத்து எடுத்து வருவான். காற்றில் மெழுகுவர்த்தி அணைந்து விடாமல் இரு கையால் நெருப்புச்சுடரை மூடியவாறு சொல்வார்.
( ’பதற்றம்’ ஓவர் ஆக்ஷன்)
“ Candle.. Candle with care..Candle with care! ”
அப்போது நான் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் எம்ப்ளாயி. போஸ்டல் டிபார்ட்மெண்ட். ஆஃபீஸ் போக கிளம்பி வருகிறேன்.
சர்புதின் கடையில் இருக்கிறார். கீழே அவர் மகன் ஒன்னாங்கிளாசு படிக்கும் மகன் நயினார் முறுக்கிக்கொண்டு நிற்கிறான். போ.. நான் போக மாட்டேன்.
சர்புதின் என்னைப் பார்த்ததும் நான் “ யோவ் சர்பு, என்னய்யா?”
சர்பு “ இங்க பாருய்யா.. நயினார் பள்ளிக்கூடம் போக மாட்டேங்கிறான். நீ கொஞ்சம் சொல்லி அனுப்பி வை இவனை.”
நான் பொறுப்பை சிரமேற்கொண்டேன்.
நயினார் கடும்பகையை தன் இரு கண்ணில் காட்டி என்னைப் பார்த்து ’முடியாது’ என்பதாக தலையை ஆட்டினான்.
நிச்சயம் என்னை ’போடா’ சொல்வான். சர்புதினே மகனுக்கு சமிக்ஞை செய்து ரகசியமாக வாயை விரித்து சத்தமில்லாமல் சொன்னார் “ போடா சொல்லு…..”
நான் நயினாரைப் பார்த்து சொன்னேன் “ நயினாரு! ஒன்னாங்கிளாசுலேயே சேட்டையாடா? படிப்பு ரொம்ப முக்கியண்டா. சொன்னா கேளு. ஒன்னாங்கிளாசுலயே இப்படி பண்ணாத. ஒங்க அத்தா மாதிரி ஏழாங்கிளாசு வரை படிக்க வேண்டாமாடா? ஏழா…..ங்கிளாசு..”
……………………………………………………
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post.html
சொல்லில் வரும் தொனியை எழுத்தில் கொணரும் உங்கள் பாணி தனிப்பாணி. நான் உங்கள் ரசிகன்.
ReplyDelete