திருச்சியில் என்னுடைய பணம் வாங்கியிருந்த நபர் பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டிருந்தார். அதையே சாக்காக்கி என் பணத்திற்கான வட்டி தராமல், பணத்தையும் தராமல், பணத்தை கேட்டால் தனக்கு மாரடைப்பு வந்து இறந்தால் அந்த பாவம் என்னைத் தான் சேரும் என மிக கவனமாக என்னை மிரட்டினார்.
என்னுடைய பணம் போச்சு. கடைசியாக என்னிடம் மிஞ்சியிருந்த முதலும் போச்சு.
உடனடியாக நான் ஒரு வேலையில் சேர்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம்.
ஓய்வு பெற்ற சுங்க அதிகாரியான என் தகப்பனார் என்னை ஒரு பெரிய நிறுவன அதிபரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அந்த நிறுவன அதிபர் என் தகப்பனாருக்கு நாற்பது ஆண்டுக்கும் மேல் நல்ல பழக்கம். சுங்க அதிகாரியாக திருச்சியில் சக்தி மிகுந்திருந்த காலத்தில் இருந்தே ரொம்ப நெருக்கம்.
அவருடைய பெரிய பங்களாவுக்கு தொலை பேசியில் தகவல் சொல்லி விட்டுத் தான் நானும் அப்பாவும் சென்றிருந்தோம்.
முதலாளி இன்முகத்துடன் எங்களை வரவேற்றார்.
உடனே அவருடைய தாயார் வந்து விட்டார்.
முதலாளியின் அம்மா உணர்ச்சி வசப்பட்டு கும்பிட்டார்.“ அய்யா எப்படி இருக்கீங்க அய்யா. நீங்க எங்க தெய்வம்”
ஸ்வீட் காரம் நிறைய ஒரு தட்டில்.
அந்த அம்மா என்னைப்பற்றி விசாரித்தார். “ உங்க மகனா? கல்யாணம் ஆச்சா?”
அப்பா “ இவனுக்கு கல்யாணம் ஆகி இருபது வருடம் ஆகுதும்மா!”
”அப்படியா! நம்பவே முடியலயே?” முதலாளியின் அம்மா ஆச்சரியப்பட்டார். எனக்கு இரண்டு மகன்கள் என்ற விஷயம் அவரை இன்னும் ஆச்சரியப்படுத்தியது.
என் அப்பா “ இவனிடம் கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது. அது தான் ரொம்ப இளமையா இருக்கான்.”
அந்த அம்மாள் என் அப்பாவின் கன்னத்தை வாஞ்சையுடன் வருடினார். ஒரு கையால் தாடையைப் பிடித்து, மறுகையால் வாயில் ஊட்டி விட்டார்.
“சாப்பிடுங்கய்யா!”
அப்பா “ இவன் ஃபைனான்ஸ் தொழிலில் எல்லா பணத்தையும் தொலச்சிட்டான்.இவனுக்கு உடனே ஒரு வேலை வேணும்.”
அந்த அம்மா தன் மகனிடம் சொன்னார். “ இந்தப் பையன் இனி நம்ம பிள்ள. உடனே நீ இவனுக்கு நல்ல வேல குடுத்துடணும்ப்பா.”
முதலாளி முகமலர்ச்சியுடன் “ சரிம்மா”
அம்மா தன் மகனுடைய பேரைச்சொல்லி சொன்னார். “ உனக்கு நல்லா ஞாபகம் இருக்காப்பா? முப்பது வருடத்திற்கு முன்னால அய்யா தானப்பா நம்ம குடும்பத்தை காப்பாத்தினாரு. என்னப்பா சொல்ற. இவரு இல்லன்னா நாம தெருவில தானப்பா அன்னக்கி நின்னுருப்போம். அய்யா நம்ம தெய்வம். விளக்கேத்தி வச்ச தெய்வமில்லையா? அவரு பிள்ளைக்கு ஒரு நல்ல வேல கொடுக்க வேண்டியது நம்ம கடமைப்பா. சொல்லுப்பா… அன்னக்கி அய்யா மட்டும் உதவலன்னா நாம தெருவில தானப்பா நின்னுருப்போம்.”
அந்த அம்மா மிகவும் உணர்ச்சி வசப்பட்டு என் தகப்பனாரை வணங்கி, இதே வார்த்தைகளை மீண்டும் சொன்னார். “ ஏப்பா.. அது சாதாரண உதவியாப்பா! தெய்வம்யா இந்த அய்யா!”
மீண்டும் எனக்கும் அப்பாவுக்கும் ஸ்வீட் ஊட்டி விட ஆரம்பித்தார்.
அவருடைய அன்பை கண்டு நான் நெகிழ்ந்து போனேன். இப்படிப்பட்டவருக்கு நான் பிள்ளை என்பதும் எனக்கு எவ்வளவு பெரிய கௌரவம்.
முதலாளி அப்பாவிடம் “ சார்! எனக்கு ஒரு பதினைந்து நாள் டைம் கொடுங்க. அப்புறம் வந்து உங்க மகன் என்னை ஆஃபிசில் பார்க்கட்டும்.”
எனக்கு கை கொடுத்து “கவலைப்படாதீங்க.” என்றார்.
பதினைந்து நாள் கழித்து அவருடைய அந்த பெரிய நிறுவனத்திற்கு நான் போனேன்.
“ அடுத்த வாரம் புதன் கிழமை வந்து என்னை பாருங்க. கொஞ்சம் டைம் தேவப்படுது.”
அடுத்த புதன் கிழமை போனேன். அவர் என்னைப்பார்த்த போது அவருடைய முகம் லேசாக வெளிறியது. மேனேஜரைக் கூப்பிட்டு ஏதோ சொன்னார்.
மேனேஜர் என்னிடம் வந்தார். “ தம்பி! முதலாளி மூணு வாரமா
‘ பெரிய இடத்துப்பிள்ளய நம்ம எப்படி வேலக்கு வச்சிக்க முடியும்’னு வேதனப்பட்டு மெள்ளவும் முடியாம, முழுங்கவும் முடியாம புழுங்கறாரு. என் கிட்ட புலம்புறாரு. தயவு செய்து புரிஞ்சிக்கங்க தம்பி. நீங்களெ சொல்லுங்க. இது தர்மசங்கடம் இல்லையா?! நீங்க பெரிய இடத்துப்பிள்ள. உங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம். ஆனா நாங்க எப்படி இங்க உங்கள வச்சிக்க முடியும்? நீங்களே சொல்லுங்க.”
நான் உடைந்து போய் மெதுவாக எழுந்தேன்.
கௌரவம் கொடுத்து கொலை செய்வது என்பது இது தானா?
அப்புறம் தான் திருப்பூருக்கு பஞ்சம் பிழைக்கப்போய் அங்கே பன்னிரண்டு வருடங்கள்.
இப்போது சென்னை வந்து இருபது மாதங்கள் ஓடி விட்டன.
…………………………………
http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html
http://rprajanayahem.blogspot.in/…/child-is-father-of-man.h…
http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_9.html
http://rprajanayahem.blogspot.in/2016/12/blog-post_2.html
விருப்பப்பட்டிருந்தால் வேறு இடத்தில் கைகாட்டி விட்டிருக்கலாமே? விதியை வெல்ல யாராலும் முடியாது.
ReplyDeleteஉங்களிடம் ஒன்று கேட்கவேண்டும். இயற்கையோ கடவுளோ எதோ ஒன்று பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு தராத அந்த நபருக்கு ஏதேனும் தண்டனை தந்ததா?
ReplyDeleteஅந்த நபர் இறந்து விட்டார். அவனுக்கென்ன தூங்கி விட்டான்.
Delete