Share

Mar 23, 2013

P.S.வீரப்பா



ஆஜானுபாகுவான, ஆண்மை மிக்க வில்லன் பி.எஸ்.வீரப்பா.
   
1950களில் வந்த வில்லன்களில் மட்டுமல்ல அதன் பிறகு 1960களில் வில்லன்களாக தமிழ்த்திரையில் நின்றவர்கள் எவரையும் விட மகத்துவம் நிறைந்தவர் வீரப்பா.

வில்லன் வீரப்பாவின் முக்கிய படங்கள் என்று சில சொல்வதென்றால்
மாடர்ன் தியேட்டர்ஸ் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956)
’அண்டாக்கா கசம் ஆபுக்கா கசம் திறந்திடு சீஸே!’

மகாதேவி ( 1957 )
சாவித்திரியை அவர் காமம் பொங்கப் பார்க்கும் பார்வை.
’அடைந்தால் மகாதேவி! இல்லையேல் மரண தேவி!’
எம். என்.ராஜம் அவரைப்பார்த்து வெட்கம், நாணம் கலந்து ’அத்தான்’ என்று குழையும்போது எரிச்சலுடன் வீரப்பா ’சத்தான இந்த வார்த்தைகளில் செத்தான் கருணாகரன்!’
’அப்படி அபசகுனமாக சொல்லாதீர்கள் அத்தான்’ என்று
எம்.என்.ராஜம் உடனே பதறும்போது ’சொல்லுக்கெல்லாம் கொல்லும் சக்தி இருந்தால் உலகம் என்றோ அழிந்திருக்குமடி!’
சந்திரபாபுவிடம் சீறல் ’கிளியைக் கொண்டு வரச்சொன்னால் குரங்கைக் கொண்டு வந்து விட்டாயே!’

'பெற்றவளுக்கில்லாத அக்கறை உனக்கென்னடி?’

ராஜராஜன் (1957)
’புகழ்ந்து பாடமாட்டானா இந்தப் புலவன்? பட்டினி போடுங்கள்! நான்கு நாள் பட்டினி கிடந்தால் கலிப்பா, வெண்பா என்று பொழிந்து தள்ளி விடமாட்டானா! ஹா ஹா ஹா ‘

நாடோடி மன்னன் (1958)
நாடோடி மன்னன் படத்தில் ’பிங்களனோ ஒரு அப்பாவி’ என்று நம்பியாரை எள்ளி நகையாடுவார்.
புதிய சட்டங்கள் பற்றி எம்.ஜி.ஆர் எடுத்துச்சொல்லும்போது ‘கற்பழித்தால் மரணதண்டனை.” என்ற சட்டம் குறித்து உடனே,உடனே வீரப்பா அதிர்ச்சியாகி முகத்தில் கடும்கோபக்குறி காட்டுவார். என்ன ஒரு வில்லத்தனம்!

வஞ்சிக்கோட்டை வாலிபன் (1957)
மிகப்பிரபலமான அந்த வசனம்! ’சாதுர்யம் பேசாதடி என் சதங்கைக்கு பதில் சொல்லடி’ என்று வைஜயந்திமாலா பொங்கி, பத்மினிக்கு நடன சவால் விடும்போது வீரப்பாவின் ஆரவார குதூகலம். ’சபாஷ்! சரியான போட்டி!’ வீரப்பாவின் வசனத்துக்கு தியேட்டரே அதிரும்!

சிவகெங்கைச் சீமை (1959)
’நள்ளிரவில் துள்ளி விழும் மருது பாண்டியரின் தலை!’ ஹாஹாஹா.
(ஜஞ்சஞ்சஞ்சங் ரீரிகார்டிங்க்) இடைவேளை! படத்துக்கு இடைவேளை! 

இடைவேளைக்குப்பின் கூட சிவகெங்கைச் சீமையில்  வீரப்பா பொறி சிந்தும் வெங்கனல் வசனங்கள் பிரமிக்க அடிக்கும்.
’கொள்ளையடித்தவன் வள்ளலாகிறான்!..... பல மண்டை ஓடுகளின் மீது சாம்ராஜ்யங்கள் அமைக்கப்படுகின்றன!......ஹாஹாஹா!..’
 வெள்ளையர்களுக்கெதிரான மருது பாண்டியர்களின் போராட்டம் தான் சிவகெங்கைச்சீமை. வெள்ளைக்காரன்கள் இருந்தால் தான் என்ன! சிவகெங்கைச்சீமையில் வில்லன் வீரப்பா மட்டும் தான்!

வீரப்பாவின் உச்சமான பெர்ஃபாமன்ஸ் என்றால் மகாதேவி, நாடோடி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், சிவகெங்கைச் சீமை என்ற நான்கு படங்கள் தான்.
குமுதத்தில்(20-03-2013 இதழ்) கௌதம சித்தார்த்தன் எழுதியுள்ள அபத்தம் - ”பி.எஸ்.வீரப்பா , ஓமர் ஷெரீப் என்ற என்கிற அட்டகாசமான ஹாலிவுட் வில்லன் நடிகரின் நடை, உடை, பாவனைகளை அதே அட்டகாசமான சிரிப்புடன் பின்பற்றினார்”

ஒமார்  ஷெரிஃப் ஹாலிவுட்டில் நடிக்கவந்த முதல் படம் பீட்டர் ஓட்டூல் கதாநாயகனாக நடித்த லாரன்ஸ் ஆஃப் அரேபியா. 1962ல் வந்த ஹாலிவுட் படம். உலகெங்கும் ஒமார் ஷெரிஃப் பிரபலமானது டேவிட் லீன் இயக்கிய ’லாரன்ஸ் ஆஃப் அரேபியா’வால் தான்.
இதில் மஹாதேவி, நாடோடி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், சிவகெங்கைச்சீமை எல்லாம் 1950களில் வந்த படங்கள். பி.எஸ் வீரப்பா எப்படி ஒமார் ஷெரிஃபை  காப்பி அடித்து நடிக்க முடியும்.

’லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ வோடுஒமார் ஷெரிஃப் நடித்த டாக்டர் ஷிவாகோ (1965) ஜெங்கிஸ்கான் (1965), மெக்கன்னா’ஸ் கோல்ட் (1969) பர்க்ளர்ஸ் (1971) இந்தியாவில் பார்க்கக் கிடைத்த முக்கியப்படங்கள்.
இந்தப்படங்கள் பார்த்து ஒமார் ஷெரிஃப் இன்ஸ்பைரேஷனில் வீரப்பா நடித்தார் என்பது படு அபத்தம்.
போகிற போக்கில் இப்படி எதையாவது உளறுவது சகிக்கமுடியவில்லை.
நார்மன் விஸ்டம் என்ற பிரிட்டிஷ் நடிகரைத்தான் சந்திரபாபு காப்பியடித்தார் என்று சொல்வதும் ரொம்ப வேடிக்கையான விஷயம். சார்லி சாப்ளின் துவங்கி பலரின் பாதிப்பு அவரிடம் உண்டு.
சந்திர பாபு ஆங்கிலம் பேசுவதே அமெரிக்கன் ஆக்ஸண்ட்டில்.சந்திரபாபுவின் மேல் நாட்டுப்பாணி என்பது ஹாலிவுட் வகையைச் சார்ந்தது.

The Square Peg  (1958)படத்தில் நார்மன் விஸ்டம் நடித்த ஒரு காட்சியை பலே பாண்டியா(1962)வில் எம்.ஆர் ராதாவுக்கு அப்படியே இயக்குனர் பந்துலு காப்பியடித்து வைத்திருக்கிறார்.
இந்த இரண்டு படங்களைப்பார்த்து விட்டு ராதா நடிப்புக்கு நார்மன் விஸ்டம் என்ற பிரிட்டிஷ் நடிகரைப் பின்பற்றினார் என தீர்மானிக்கக் கூட இன்று ஆட்கள் இருப்பார்கள்!

வி.நாகையாவை பால் முனியை பின்பற்றினார் என்று கௌதம சித்தார்த்தன் சொல்வதும் படு அபத்தம். இருவருக்கும் நடிப்பில் ஸ்னானப்ராப்தி கூட கிடையாது.எம்.எஸ்ஸின் கணவராக நடித்த மீரா(1945), கோராகும்பராக நடித்த ’சக்ரதாரி’(1948) போன்ற நாகையா படங்களை பால் முனியின் Scar face (1932) படத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால்  சிரிப்புத் தான் வருகிறது.
சி.என்.அண்ணாத்துரை எப்போதும் பால்முனியை எம்.ஆர் ராதாவுடன் ஒப்பிடுவார். ஒப்பிடுவது வேறு. காப்பி அடித்தார், பின்பற்றினார் என்பது வேறு. ராதாவோடு ஒப்பிடப்பட்ட பால்முனியை சாத்வீக நடிகர் நாகையாவோடு சேர்க்கமுடியுமா?
 ராதா தன் நடிப்புக்கு பால்முனியை காப்பியடிக்கவில்லை.
அப்படிப்பார்த்தாலும் வீரப்பா நடிப்பை முன் வைத்து ஒமார் ஷெரிஃபை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும். வீரப்பா தான் சீனியர் ஆக்டர்.
 இருவர் நடிப்பில், ஏன் சாயலில் கூட உள்ள ஒற்றுமை மிக இயல்பாய், தற்செயலாய் நடந்த விஷயம். இருவரும் ஒருவரை ஒருவர் படம் பார்த்து அறிந்திருக்கவில்லை.


சரித்திரப்படங்களுக்கென்றே அளவெடுத்து உருவாக்கப்பட்டவர் வீரப்பா. ரசிகர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டமான பிரத்யேக ஸ்பெஷல் ’ஹாஹாஹாஹா’ சிரிப்பு.
அவருடைய நடிப்பில் ஒரு காவியத்தன்மை, காப்பியத்தன்மை இருந்ததால் சமூகப்படங்களுக்கு வில்லனாக அவர் பொருத்தமானவராக இருந்ததில்லை. சமூகப்படங்களில் சோபிக்கவில்லை என்றே சொல்லலாம்.
ஆனந்த ஜோதி (1963), சங்கமம் (1970) பல்லாண்டு வாழ்க (1975) ஆகிய சமூகப்படங்களில் வில்லனாக வீரப்பா நடித்துள்ளார். 

வீரப்பா பல திரைப்படங்களின் தயாரிப்பாளர். பி.எஸ்.வி பிக்சர்ஸ் என்பது அவரது படக்கம்பெனி. ஆலயமணி (1962) அவர் தயாரிப்பில் வந்த படம். அதில் கூட ஒரு நல்ல சீனில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது திலீப்குமார், வஹிதாரெஹ்மான் நடித்து ஆத்மி (1968) ஹிந்திப்படம் கூட வீரப்பா தயாரிப்பில் வெளிவந்துள்ளது.


..................................................... 


http://rprajanayahem.blogspot.in/2012/08/scarface.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/doctor-zhivago.html

http://rprajanayahem.blogspot.in/2009/10/blog-post_22.html




2 comments:

  1. அருமையாக சொன்னீர்கள். இப்படி யாராவது சொல்லாவிடில் எங்களை போன்றவர்கள் நம்பி இருப்பார்களே! நன்றி ஐயா

    ReplyDelete
  2. நாடோடி மன்னனில்,மார்த்தாண்டன் மன்னன் சின்ன கேப் விட்டு மடையன் என்பார்!மிக ரசனையான நடிப்பு அது!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.